Published:Updated:

பிரபலமாகி வரும் `சவுண்ட் தெரபி'... மன அழுத்தத்தைக் குறைக்குமா இசை?

ஒலியின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும் சிகிச்சை சமீப காலமாகப் பிரபலமாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனது பாரமாக இருக்கும்போது நல்ல இசையைக் கேட்டால் கொஞ்சம் இதமாவதை உணர்ந்திருக்கிறீர்களா?

இயற்கைச் சூழலில் பறவைகள் எழுப்பும் ஒலியும் அருவி நீரின் சத்தமும் ஒருவித உற்சாகத்தைக் கொடுப்பதை அனுபவித்திருக்கிறீர்களா?

ஒலிக்கும் மனநலனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதன் அடிப்படையில்தான் ஒலி சிகிச்சை என்றே ஒன்று பின்பற்றப்படுகிறது. ஒலியின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும் சிகிச்சை சமீப காலமாகப் பிரபலமாகி வருகிறது.

சுனிதி ரமேஷ்
சுனிதி ரமேஷ்

ஒலி சிகிச்சை நிபுணரான சுனிதி ரமேஷ் சவுண்டு தெரபி செயல்படும் முறை பற்றி நமக்கு விளக்கினார்.

``இந்த சவுண்டு தெரபி தியானம் மாதிரி செயல்படுகிறது. இது உங்கள் கிளர்ச்சியுற்ற நரம்புகளை அமைதிப்படுத்தி உணர்வுகளைக் கட்டுப்படுத்துகிறது. உடம்பு வலிக்கு வெதுவெதுப்பான குளியல் எடுத்துக்கொள்வது போல இந்த சவுண்ட் பாத் மன வலிக்கு இதமாக மாறுகிறது. இசைக்கருவிகள், இசை ஊடகங்களைப் பயன்படுத்தி மனதுக்கும் உடலுக்கும் முழுமையான நிம்மதியைத் தர உதவுகிறது. இதில் இசைக் கிண்ணங்கள் மற்றும் கோங் எனப்படும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சவுண்ட் பாத் எனப்படும் ஒலிக் குளியல் மன அழுத்தத்தை அதன் வேரிலிருந்து நீக்க உதவியாக இருக்கும்.

இசைக் குளியல்

சவுண்ட் பாத் எடுத்துக்கொள்ள எந்த வித விதிகளும் இல்லை. சாதாரணமாக நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ நிதானமாக கண்களை மூடிக்கொண்டு அறையில் வெளிப்படும் ஒலிகள் மற்றும் இசையை காதால் கேட்டு ரசிக்க வேண்டும். சில நேரங்களில் அறையில் இனிமையான ஒலிகளை அறிமுகப்படுத்த ஃபோர்க்ஸ், கோங்ஸ், படிக கிண்ணங்கள் மற்றும் சைம்ஸ் போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சில மருத்துவ சிகிச்சையாளர்கள் தங்கள் சொந்தக் குரலில் இசையை எழுப்பிக்கூட இந்தச் சிகிச்சையை மேற்கொள்கின்றனர்.

Music
Music

உணர்வுகளைத் தூண்டும்

இந்த இசைக் குளியலில் நீங்கள் மனதார நனையும்போது, உங்கள் உணர்வுகள் யாவும் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. இசைத்தட்டுகள், ஸ்பீக்கர், கோங்ஸ் மற்றும் பிற கருவிகளின் பயன்பாட்டின் மூலம், உருவாக்கப்பட்ட அதிர்வுகள் உங்களைச் சுற்றிலும் மன அமைதி, சமநிலை மற்றும் தளர்வு உணர்வைத் தருகின்றன. இதனால் மன ரீதியான பிரச்னைகளைக் குணப்படுத்துவதற்கான சூழல்களும் மேம்படுகின்றன.

இது உடலைப் படிப்படியாகத் தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. இப்படி இசை தியானம் செய்யும்போது தூக்கப் பிரச்னை, நினைவாற்றல் மற்றும் செரிமானத்தைப் பாதிக்கும் பிற தூண்டுதல்களைச் சமநிலைப்படுத்தி, நீண்ட கால நோய்கள் நம்மை ஆட்கொள்ளாமல், மன அழுத்தத்தைப் போக்குகிறது. இதயம் மற்றும் சுவாசத்தின் வேகத்தை நிதானப்படுத்தி உடலில் ஒரு சமநிலையை உருவாக்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனக்கழிவுகளை வெளியேற்றும்

இது உங்கள் எண்ணங்களில் கலந்துள்ள நச்சுகளை வெளியேற்றவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நீங்கள் தளர்வாக இருக்க உதவும். நரம்பு மண்டலத்தை மீட்டெடுப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், வலிகளைச் சமாளிக்கவும் பயன்படுகிறது. எனவே, மன அழுத்தம் மற்றும் பதற்றம் நிறைந்த காலத்தில் இது போன்ற இசைக் குளியல் எடுப்பது சிறந்தது.

Music
Music
Image by Rahul Yadav from Pixabay
Vikatan

இந்தச் சிகிச்சையை ஆன்லைன் மூலமும் எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சிகிச்சைக்கு வயது தடை இல்லை" என்றார் ஒலி சிகிச்சை நிபுணரான சுனிதி ரமேஷ்.

இப்படி மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு மாற்று வடிவம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இது ஒரு பாரம்பர்ய மருத்துவ முறையின் வடிவமாக இருப்பதால் நிபுணர்களும் இந்த முறையைப் பரிந்துரைக்கின்றனர். எனவே, இனி மன அழுத்தம் என்றால் பயந்து ஓடாதீர்கள். இசையால் விரட்டுங்கள்; உங்கள் மனமும் உடலும் இதமாக இசையில் நனையட்டும்.

- ப.கா.ரேவந்த் ஆண்டனி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு