Published:Updated:

கொரோனாவைப் பரப்பும் சூப்பர் ஸ்பிரெட்டர்! கண்டுபிடித்துத் தடுக்க முடியுமா? மருத்துவர் விளக்கம்

Representational Image
Representational Image

நோய் வேகமாகப் பரவி வரும் இந்தச் சூழலில் சூப்பர் ஸ்பிரெட்டர் வகையினரைத் தனியாகக் கண்டறிவது சாத்தியமில்லாத விஷயம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பைக் குறைத்து, அது பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயலாற்றிக்கொண்டிருக்கிறது. நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களிடமிருந்து பிறருக்கு நோய் பரவாமல் தடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.

World fighting against corona
World fighting against corona

அதனால்தான் தனிமனித இடைவெளியை அதிகரிக்கும் வகையில் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் நோயைப் பரப்புபவர்களில் `சூப்பர் ஸ்பிரெட்டர்' (Super Spreader) என்ற ஒரு வகையினர் உள்ளனர் என்று வைரஸ் பரவுவதை ஆய்வு செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதென்ன சூப்பர் ஸ்பிரெட்டர்?

A, B இருவருக்கு கொரோனா வைரஸ் நோய் பாதித்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் A என்பவர் 25 பேருக்கு நோயைப் பரப்புகிறார், B என்பவர் வெறும் இரண்டு பேருக்கு நோயைப் பரப்புகிறார். இருவரில் A என்பவர் சூப்பர் ஸ்பிரெட்டர் என்று வகைப்படுத்தப்படுவார்.

சூப்பர் ஸ்பிரெட்டர் என்ற வகையினரைக் கண்டறிய முடியுமா என்றும், இது தொடர்பான கூடுதல் விவரங்களையும் தெரிந்துகொள்ள தொற்றுநோய் மருத்துவர் கே. பாலசுப்ரமணியனிடம் பேசினோம்:

Infectious disease expert Dr. K.Balasubramanian
Infectious disease expert Dr. K.Balasubramanian

`Shedder' என்ற கருத்தாக்கத்திலிருந்துதான் 'Spreader' என்ற வார்த்தை உருவானது. தன் உடலிலுள்ள வைரஸை வெளியேற்றி, நோயைப் பரப்புகிறவர்கள்தான் 'Shedder' என்று அழைக்கப்படுவார்கள். வைரஸின் பாதிப்பை லேசானது, மிதமானது, தீவிரமானது என்று பிரிக்கலாம். இவர்களில் தீவிரமான நோய் பாதிப்பிலிருப்பவர்கள்தான் சூப்பர் ஸ்பிரெட்டராக இருப்பார்கள் என்று கூற முடியாது.

லேசான, மிதமான பாதிப்பில் இருப்பவர்கள்கூட சூப்பர் ஸ்பிரெட்டராக மாற முடியும். ஒருவர் தும்முவதாலும் இருமுவதாலும் வெளிப்படும் துளிகளிலிருக்கும் வைரஸ்களின் எண்ணிக்கை, அவை எத்தனை பேரைத் தாக்குகின்றன என்பதை வைத்தே சூப்பர் ஸ்பிரெட்டர் என்று வகைப்படுத்த முடியும்.

வேறொரு நாட்டில் நடைபெற்ற நிகழ்வு இது. ஒரு குடும்பத்திலுள்ள கணவன், மனைவிக்கு தீவிரமாக கொரோனா வைரஸ் நோய் பாதித்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நோயைப் பரப்பியிருப்பார்கள் என்று கருதி, குடும்ப உறுப்பினர்களைப் பரிசோதித்தபோது ஒருவருக்குக்கூட நோய் பாதிக்கவில்லை. அப்படியென்றால் அந்தத் தம்பதி நோயை அதிகம் பரப்பவில்லை என்று புரிந்தது. அப்படியென்றால் தீவிர பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அவர்கள் சூப்பர் ஸ்பிரெட்டர்களாகவில்லை.

சோப் போட்டு நன்றாகக் கைகழுவும்போது கொழுப்புப் படலம் கரைந்து வைரஸ் ஒன்றுமில்லாமல் போய்விடும்.
தொற்றுநோய் மருத்துவர்

அதாவது, நோயின் தன்மைக்கும் அதைப் பரப்பும் விதத்துக்கும் சரியான தொடர்பு இல்லை. சிலருக்கு அறிகுறிகள் தெரியாமல் இருப்பார்கள், சிலர் வைரஸைக் கடத்துபவர்களாக மட்டும் இருப்பார்கள். உதாரணத்துக்கு, குழந்தைகளை அதிகம் இந்த நோய் பாதிக்கவில்லை. ஆனால், அவர்களால் வைரஸை மற்றவர்களுக்குக் கடத்த முடியும். இந்த இரண்டு வகையினர் கூட `சூப்பர் ஸ்பரெட்டர்' ஆக இருக்க முடியும்.

நமது உள்ளங்கை, உள்ளங்கால், சருமம் போன்ற பகுதிகள் மிகவும் வலுவான திசுக்களால் ஆனவை. இந்தப் பகுதிகளை வைரஸால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், ஜவ்வு போன்ற வலு குறைந்த இடங்களான மூக்கின் உட்பகுதி, வாய்ப்பகுதி, கண் ஆகிய மிகவும் மெலிதாக இருக்கும். அந்த இடங்களில் வைரஸ் கிருமிகள் படும்போது எளிதாக உள்ளே சென்றுவிடும்.

Corona virus
Corona virus

இந்த வைரஸுக்கு உயிர் கிடையாது. கொரோனா வைரஸ் என்பது ஒரு வேதிப்பொருள், ஆர்.என்.ஏ, புரதம் இரண்டும் அடங்கியது. வைரஸின் மேல் பகுதியில் கொழுப்புப் படலம் ஒன்று இருக்கும். இது மெலிதான இடங்களில் படும்போது அதிலிருக்கும் வைரஸ் மாற்றமடைந்து (Mutate)பெருகத் தொடங்கிவிடுகிறது. தூசியைவிட பல்லாயிரம் மடங்கு சிறியதான, கண்ணுக்குத் தெரியாத துகள்தான் அந்த வைரஸ்.

பிற வைரஸ்கள் காற்றில் பரவும்போது அதிகமான பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், கொரோனா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவுகிறது. சோப் போட்டு நன்றாகக் கைகழுவும்போது அந்தக் கொழுப்புப் படலம் அப்படியே கரைந்து வைரஸ் ஒன்றுமில்லாமல் போய்விடும். அதனால்தான் அடிக்கடி கை கழுவ வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறோம்" என்கிறார்.

washing hands
washing hands
`மருந்து விஷயத்தில் பின்தங்கியுள்ளோம்.. கொரோனா வைரஸ் செம ஸ்மார்ட்!’ -  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

நோய் வேகமாகப் பரவி வரும் இந்தச் சூழலில் சூப்பர் ஸ்பிரெட்டர் வகையினரைத் தனியாகக் கண்டறிவது சாத்தியமில்லாத விஷயம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சுய சுகாதாரத்தைப் பேணுவதன் மூலம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் மூலமும் சூப்பர் ஸ்பிரெட்டர் நிலையைப் பெரும்பாலும் தவிர்க்க முடியும்.

அடுத்த கட்டுரைக்கு