தமிழகத்தில் கோவிட் பரவலின் முதல் அலையின்போது அறிகுறிகளற்றவர்கள், லேசாக பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க சில சித்தா பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வந்தன. தொற்றுப் பரவல் குறைந்த நிலையில் அவை மூடப்பட்டன. தற்போது இரண்டாம் அலை தீவிரமாகியுள்ளதால் மீண்டும் சித்தா பராமரிப்பு மையங்கள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அண்மையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் சித்தா பராமரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சித்தா பராமரிப்பு மையங்கள் எங்கெங்கு உள்ளன, அவற்றில் என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்று இந்திய மருத்துவ மருந்துக் கட்டுப்பாட்டு அலுவரும் அரசு சித்த மருத்துவர்கள் சங்கத்தின் தலைவருமான பிச்சையா குமாரிடம் கேட்டோம்:
``ஆயுஷ் அமைச்சகம் அறிகுறிகளற்றவர்கள், லேசான, மிதமான பாதிப்புள்ளவர்களுக்கு சித்த மருத்துவ மருத்துகள், சிகிச்சைகளைப் பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் நோயாளிகள் இந்த மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். அறிகுறிகளற்று, லேசான, மிதமான பாதிப்பு இருந்தால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94-க்கும் குறைவாக இருந்தால், நுரையீரல் 50 சதவிகித்துக்கும் மேல் பாதித்திருந்தால் இங்கு அனுமதிப்பதில்லை. இதுதவிர, ஒவ்வொரு நோயாளியின் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட முக்கிய அறிகுறிகளின் அடிப்படையிலும் சித்தா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅறிகுறிகளின் அடிப்படையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். சித்த மருத்துவ முறைப்படி சுவை அடிப்படையில் பாரம்பர்ய உணவு, அறிகுறிகளின் அடிப்படையில் மருந்துகள், நுரையீரல் திறனை அதிகரிக்க வர்ம சிகிச்சை, பிராணயாமம், மனநலத்தை மேம்படுத்தும் பயிற்சிகள் உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன. இதுதவிர பிரம்மானந்த பைரவம், வசந்த குசுமாகரம் போன்ற உயர்வகை மாத்திரைகளும் கொடுக்கப்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகு, தொடர்ந்து மூன்று நாள்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட எவ்வித அறிகுறிகளும் இல்லாவிட்டால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். அதிகபட்சம் 7 முதல் 10 நாள்கள் சிகிச்சை தேவைப்படலாம்" என்கிறார்.

அட்டவணை
நேரம் - உணவு மற்றும் சிகிச்சை
காலை 6: உப்புநீரில் தொண்டை சுத்தம் செய்தல்
காலை 6.15: மூலிகைத் தேநீர்
காலை 6.30 - 7.00: சூரிய ஒளி நடை, சித்த யோக முறைகள்
காலை 8: கபசுரக் குடிநீர்
காலை 8.30: மூலிகை சிற்றுண்டி (சுண்டல், பழ சாலட், கேழ்வரகு அல்லது அரிசிப் புட்டு, தோசை, மாப்பிளை சம்பா அரிசி இட்லி, கவுனி அல்லது தினைப் பொங்கல், 2 சாத்துக்குடி)
காலை 9: உடல் தேற்றி மருந்து (அமுக்கிரா மாத்திரை, நெல்லிக்காய் இளகம்)
காலை 10.30: நெல்லிச்சாறு/ எலுமிச்சை இஞ்சி சாறு/ புதினா சாறு + இஞ்சி + வெந்நீர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மதியம் 12.30 - மதிய உணவு (7 நாளைக்கும் ஒவ்வொரு வகை)
1. உளுந்து சாதம், அரிசி சாதம், முருங்கை சாம்பார், மிளகு ரசம், அவரைக்காய் பொரியல், இஞ்சி துவையல், ஐங்காய பொடி கலந்த மோர், சீரகத் தண்ணீர்.
2. நெல்லிக்காய் சாதம், காய்கறி கூட்டாஞ்சோறு, அரிசி சாதம், எலுமிச்சை இஞ்சி ரசம், பீன்ஸ் பொரியல், மணத்தக்காளி கீரைக்கூட்டு, ஐங்காய பொடி கலந்த மோர், சீரகத் தண்ணீர்
3. எள்ளு சாதம், அரிசி சாதம், மிளகு குழம்பு, அவரைப் பிஞ்சு பொரியல், கறிவேப்பிலை துவையல், பொன்னாங்கண்ணி கீரைக்கூட்டு, தூதுவளை ரசம், ஐங்காய பொடி கலந்து மோர், சீரகத் தண்ணீர்.
4. புதினா சாதம், அரிசி சாதம், வெண்டைக்காய் சாம்பர், கேரட்/ பீட்ரூட் பொரியல், தூதுவளைத் துவையல், முருங்கை கீரைக்கூட்டு, சீரக ரசம், முட்டை, ஐங்காய பொடி கலந்த மோர், சீரகத் தண்ணீர்.

5. கறிவேப்பிலை சாதம், அரிசி சாதம், சுண்டைக்காய் குழம்பு, கண்டந்திப்பிலி ரசம், கோவைக்காய் பொரியல், கொண்டைக்கடலை பருப்பு மசியல், ஐங்காய பொடி கலந்த மோர், சீரகத் தண்ணீர்.
6. கொத்தமல்லி சாதம், அரிசி சாதம், சுக்கு குழம்பு, வாழைப்பூ பொரியல், பட்டாணி, மிளகு ரசம், எள்ளுத் துவையல், ஐங்காய பொடி கலந்த மோர், சீரகத் தண்ணீர்.
7. பருப்பு சாதம், அரிசி சாதம், புதினா துவையல், சின்ன வெங்காயம் + பூண்டு + முடக்கறுத்தான் இலை வதக்கிய குழம்பு, அரைக்கீரை பொரியல், பீர்க்கங்காய் கூட்டு, வெற்றிலை + மிளகு + சீரக ரசம், ஐங்காய பொடி கலந்த மோர், சீரகத் தண்ணீர்.
மாலை 4: உப்பு நீரில் தொண்டை சுத்தம் செய்தல்.
மாலை 4.30: வேது பிடித்தல் (நொச்சி இலை/ நொச்சி தைலம்/ பீனிச தைலம்.
மாலை 5: மூலிகைத் தேநீர்.
மாலை 5.30 - 6.30: நடைப்பயிற்சி.
இரவு 7: கபசுரக் குடிநீர்.
இரவு 7.30: மூலிகை சிற்றுண்டி (தூதுவளை/ முசுமுசுக்கை தோசை, இட்லி, முள்ளுமுருங்கை அடை, கோதுமை ரவா உப்புமா.
இரவு 8: சுக்கு கஞ்சி.
இரவு 8.30: உடல் தேற்றி மருந்து.
இரவு 9: மஞ்சள்தூள் கலந்த பால்/ கரிசாலை சத்து பால்.

22 மையங்கள்!
கோவை மாவட்டம் சீனிவாசபுரம்,
திருப்பூர்,
திண்டுக்கல்,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் கோட்டாறு,
சேலம்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்,
கரூர்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்,
திருவண்ணாமலை, திருப்பத்தூர் (2 மையங்கள்),
வேலூர் மாவட்டம் காட்பாடி,
விழுப்புரம் மாவட்டம் பெரும்பாக்கம்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி,
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை,
மதுரை,
தேனி,
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆகிய இடங்களிலும்
சென்னையில் வியாசர்பாடி, மீனம்பாக்கம் என மொத்தம் 22 இடங்களில் தமிழக அரசின் சித்தா கோவிட் பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன.
சித்தா போஸ்ட் கோவிட் கேர் மையம்:
இந்திய மருத்துவ இயக்குநரகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணை இயக்குநர் சிவக்குமார் சிகிச்சைகள் குறித்து மேலும் விளக்குகிறார்:
``2020-ம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் மாதம் வரை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவிட் சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது. மொத்தம் 2,290 நோயாளிகள் அங்கு சிகிச்சை பெற்றனர். தொற்றுப் பரவல் சற்று குறைந்ததும் டிசம்பர் மாதம் அந்த மையத்தை மூடிவிட்டு அரும்பாக்கத்தில் போஸ்ட் கோவிட் கேர் தொடங்கப்பட்டது. மார்ச் 9-ம் தேதி முதல் வியாசர்பாடியில் மீண்டும் சித்தா கோவிட் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1-ம் தேதி தொடங்கப்பட்ட போஸ்ட் கோவிட் கேர் மையம் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எதிர்புறத்திலுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் செயல்பட்டு வருகிறது. சித்தர் காயகற்பம் வழிமுறையில் இங்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த மையத்தில் கோவிட் தொற்றுக்குப் பிறகு ஏற்படும் பக்கவிளைவுகளான சோர்வு, உடல்வலி, சிறிய அளவில் மூச்சுத்திணறல், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
புறநோயாளிகள் பிரிவாக அது செயல்பட்டு வருகிறது. ஒரு நோயாளி வந்தால் அவருக்கு என்னென்ன அறிகுறிகள் உள்ளன என்பதைப் பரிசோதித்து சித்த மருந்துகள், சித்தர் யோகம், முத்திரைப் பயிற்சி, வர்மம், யோகா, பிராணயாமம், தொக்கணம் போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாள்களில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்" என்றார் அவர்.

வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை!
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள், மருத்துவர்கள் இல்லாத நிலையில் சித்தா சிகிச்சை மையங்களுக்கு நோயாளிகள் பரிந்துரைக்கப் படுவதில்லை. பரிசோதனை முடிவைத் தெரிந்துகொண்டு நோயாளிகள் அவர்களாகவே இந்த மையங்களுக்கு வந்தால்தான் உண்டு. சில மருத்துவமனைகளில் சித்தா மையங்களுக்குச் செல்வதாக நோயாளிகள் தெரிவித்தாலும் அவர்களை அனுமதிப்பதில்லை என்று சித்த மருத்துவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அறிகுறிகளற்றவர்கள், லேசான, மிதமான பாதிப்புள்ளவர்களை சித்தா பராமரிப்பு மையங்களுக்குப் பரிந்துரைக்கலாம் என்று வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டால்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். எவ்வித சிகிச்சையும், கண்காணிப்பும், பராமரிப்புமில்லாமல் நோயாளிகள் தவிப்பதற்குப் பதில் இந்த சித்தா சிகிச்சை மையங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் சித்த மருத்துவர்களின் விருப்பமாக உள்ளது.