உலகளவில் வயது வித்தியாசமில்லாமல் கொரோனா தற்போது எல்லோரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வந்தவர்களில் பெரும்பாலானோர் குணமாகி வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆறுதலான செய்தி. சரி, தமிழக அரசு கொரோனா வந்தவர்களுக்கு எந்த அடிப்படையில் என்னென்ன சிகிச்சைகள் தந்து கொண்டிருக்கிறது? கொரோனா சிகிச்சைக்கான தமிழக ஒருங்கிணைப்பு அதிகாரியும் பொது மருத்துவருமான ரகுநந்தனிடம் பேசினோம்.

கொரோனா அறிகுறிகளும் இயல்புக்கு மாறான பிரச்னைகளும்...
லேசான காய்ச்சல், இருமல், மூச்சு வாங்குவது, உடல் வலி, உடல் சோர்வு, சிலருக்கு வாசனை உணர்வு இல்லாமல்போவது, ருசியை உணர இயலாமல் போவது, சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுதல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கோவிட் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ரிசல்ட் பாசிட்டிவ் என வந்தால், உங்கள் உடலின் டெம்ப்ரேச்சர், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், உடலில் ஆக்சிஜன் அளவு, ஹீமோகிராம் என்கிற ரத்தப் பரிசோதனை, நெஞ்சக எக்ஸ்ரே ஆகியவற்றையும் எடுப்பார்கள்.
இவையெல்லாம் அடிப்படைப் பரிசோதனைகள். இவற்றில் ஏதாவது ஒன்று இயல்புக்கு மாறாக இருந்தால், நீரிழிவு, இதயத்தில் பிரச்னை, கேன்சர், ஹெச்.ஐ.வி., ஆஸ்துமா, சிறுநீரகத்தில் பிரச்னை போன்றவை இருக்கின்றனவா என்று விசாரிப்பார்கள். ஏனென்றால், இவர்கள் கொரோனா தாக்கத்தில் ஹை ரிஸ்க்கில் இருப்பவர்கள். இவர்களை உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்து க்ளோஸ் மானிட்டர் செய்ய ஆரம்பிப்போம்.
அதென்ன க்ளோஸ் மானிட்டர்?
தினமும் காய்ச்சல் வருகிறதா, இதயத்துடிப்பு சரியாக இருக்கிறதா, ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு ஆகியவை எப்படியிருக்கின்றன என்பதைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருப்போம். இதுதான் க்ளோஸ் மானிட்டர்.
கொரோனா நுரையீரலைத்தான் அதிகமாகத் தாக்குகிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவையும் அது குறைக்கிறது. பொதுவாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90-க்குக் கீழே போனாலே மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். ஆனால், கொரோனா வந்தவர்களுக்கு ஆக்சிஜன் அளவு 70 அல்லது 60-க்குக் கீழே போனால்கூட சம்பந்தப்பட்ட நபரிடம் எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை. இயல்பாகவே இருக்கிறார். இதையும் க்ளோஸ் மானிட்டர் செய்தபடியே இருப்போம்.

கொரோனாவும் நுரையீரல் பாதிப்பும்...
கொரோனா வந்தவர்களுக்கு சி.டி.ஸ்கேன் எடுத்துப்பார்த்தால், நுரையீரல் பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். இந்தப் பாதிப்பில், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் இருக்கிறார்கள் என்றால் பிரச்னை லேசாக இருக்கிறது என்று அர்த்தம். மூன்று மற்றும் நான்காம் நிலையில் இருக்கிறார்கள் என்றால், அவர்களை இன்னமும் க்ளோஸ் மானிட்டர் செய்ய ஆரம்பிப்போம். இவர்களுக்குச் சிகிச்சைகளோடு, வைட்டமின் சி, டி, போன்ற வைட்டமின் மாத்திரைகளையும் தருகிறோம்.
கொரோனாவும் மூச்சு விடுவதில் பிரச்னையும்...
கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மூச்சு விடுவதில் பிரச்னை இருந்தால் ஆக்சிஜன் கொடுக்கிறோம். சில பேருக்கு 15 லிட்டர் ஆக்சிஜன்கூட தேவைப்படும். தேவைப்பட்டால் வென்டிலேட்டர் சப்போர்ட்டும் தருகிறோம்.

கொரோனாவும் சாப்பாடும்...
மிளகு, மஞ்சள், ஃபிரெஷ் காய்கறிகள், சிட்ரஸ் நிறைந்த பழங்கள், புரதம் அதிகமாக இருக்கிற உணவுகள், சூப், சால்ட், சுண்டல் ஆகியவற்றைத் தருகிறோம்.
தவிர, ஆயுஷ் கைட்லைன்படி கபசுரக்குடிநீரை அதற்கென இருக்கிற மருத்துவர்கள் வழங்குகிறார்கள்.
கொரோனாவும் கவுன்சலிங்கும்...
கொரோனா பாசிட்டிவ் என்றாலே பலர் டிப்ரஷனாகி விடுகிறார்கள். மருத்துவமனையில் இருக்கும்போது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் எப்படியிருக்கிறார்களோ என்று வருத்தப்பட ஆரம்பித்து விடுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களின் மனநிலையறிந்து, அவரவர்க்கு ஏற்ற கவுன்சலிங் வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

கொரோனாவும் ரீ டெஸ்ட்டும்...
லேட்டஸ்ட் ஐ.சி.எம்.ஆர். கைடுலைன்ஸ்படி, கொரோனா பாசிட்டிவ்வாக இருந்தாலும் அறிகுறிகள் லேசாக இருந்தால் வீட்டிலேயே தனிமையில் இருக்கச் சொல்கிறோம். அதுவும் 7 நாள்கள் போதும். இதேபோல, அறிகுறிகளுடன் கொரோனா வந்தாலும் அவர்கள் உடல் நலம் தேறிய பின்பு மறுபடியும் கொரோனா பரிசோதனை எடுக்கத் தேவையில்லை என்பதுதான் தற்போதைய நிலை.