Published:Updated:

தனிமையை இனிமையாக்க என்னென்ன செய்கிறார்கள் இளைஞர்கள்? - சுவாரஸ்ய ஆய்வு! #VikatanInfographics

உலகம் முழுவதும், தனிமையில் இருப்பவர்கள் எதனுடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதை அறிய பிரான்ஸைச் சேர்ந்த `இப்சோஸ் குளோபல் அட்வைசர்' (Ipsos Global Advisor) அமைப்பு சார்பில் சர்வே ஒன்று நடத்தப்பட்டது.

தனிமை
தனிமை ( Pixabay )

தனிமை... சிலருக்கு இனிமையாக இருக்கும். சிலருக்கு அது பயத்தை உண்டாக்கும். தனிமையில் இருக்கும்போது ஏற்படும் இத்தகைய பயத்துக்கு `மோனோபோபியா’ (Monophobia) என்று பெயர். திருமணமாகாதவர்கள், திருமணமாகிப் பிரிந்தவர்கள், காதலில் தோல்வியைத் தழுவியவர்கள் அதிகமாகத் தனிமையை உணர்வதுண்டு. தனிமையிலிருந்து வெளிவர பலர் சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

`ஆண்களைப் பொறுத்தவரை தனிமையை விட்டு வெளியேவருவது என்பது மிகவும் கடினமானது'
ஆக்ஸ்போர்டு ஆய்வு, 2017

உலகம் முழுவதும் இதே நிலைதான். சமூக வலைதளங்கள் வருவதற்கு முன்பு பலரும் தொலைக்காட்சிகளில் நேரம் செலவழித்தனர். தனிமையான சூழலில் கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற உணர்வுகள் அதிகமாக இருக்கும். உலக அளவில் தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களில் பலர் தனிமையில் இருந்தவர்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள். `தற்கொலைக்கான காரணம் பற்றி ஆராய்ந்தபோது, தனிமையை அதிகம் விரும்புபவர்கள் தங்கள் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கிறார்கள். திரும்பத் திரும்ப நினைத்துப் பார்ப்பதன்மூலம் வாழ்க்கை அவ்வளவுதான் என்ற முடிவுக்கு வருகிறார்கள்' என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

உலகம் முழுவதும், தனிமையில் இருப்பவர்கள் எதனுடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதை அறிய பிரான்ஸைச் சேர்ந்த `இப்சோஸ் குளோபல் அட்வைசர்' (Ipsos Global Advisor) அமைப்பு சார்பில் சர்வே ஒன்று நடத்தப்பட்டது. 18 வயது முதல் 64 வயது வரை உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட இந்த சர்வே முடிவில், உலகம் முழுவதும் தனிமையில் இருப்பவர்களில் 79 சதவிகிதம் பேர் சாக்லேட்டை அதிகம் விரும்புவது தெரியவந்தது. 69 சதவிகிதம் பேர் உப்பு சேர்க்கப்பட்ட தின்பண்டங்களை விரும்புவதும் கண்டறியப்பட்டது.

தனிமை
தனிமை
Pixabay

சமூக வலைதளங்களை எப்போதும் பயன்படுத்துபவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் தனிமையில் இருக்கும்போது மட்டும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் 65 சதவிகிதம் பேர். 62 சதவிகிதம் பேர் ஒயின், 61 சதவிகிதம் பேர் பீர், 49 சதவிகிதம் பேர் மது, 36 சதவிகிதம் பேர் இ-சிகரெட் / வைப்பிங், 32 சதவிகிதம் பேர் புகையிலை, 28 சதவிகிதம் பேர் கஞ்சா என போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். 46 சதவிகிதம் பேர் ஆன்லைன் டேட்டிங் செய்கின்றனர்; 29 சதவிகிதம் பேர் ஆபாச வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். தனிமையில் இருப்பவர்களில் 31 சதவிகிதம் பேர் கேசினோ சூதாட்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடுகின்றனர்.

Vikatan
'தனிமையில் இருப்பவர்கள், 79 சதவிகிதம் பேர் சாக்லேட் சாப்பிட விரும்புகின்றனர்!'
- இப்சோஸ் குளோபல் அட்வைசர் ஆய்வு

சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவது மனரீதியாகப் பலருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனாலும் தனிமையில் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அந்த நேரத்தைப் போக்க வேண்டும் என்பதே முதன்மையான குறிக்கோளாக இருக்கிறது. தனிமையில் இருப்பவர்களில் அதிகமாக 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களே என்கிறது ஆய்வுகள். ஆண்களைப் பொறுத்தவரை, தனிமையை விட்டு வெளியேவருவது என்பது மிகவும் கடினமானது என்று 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆக்ஸ்போர்டு ஆய்வு கூறுகிறது.

Infographics
Infographics
விகடன்

தனிமையில் இருப்பது போன்ற உணர்வு மற்றும் அதிகமான தனிமையில் இருப்பவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. டீன்-ஏஜ் இளைஞர்களுக்கு பல்வேறுவிதமான மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இரவில் தூக்கம் வராதவர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் தனிமையில் இருப்பவர்களே. இத்தகையோருக்கு தொடர்ந்து தூக்கம் வருவதில் சிரமங்கள் இருக்கும்; ரத்தஅழுத்தம் அதிகரிக்கும்; இதயத் தமனி வீக்கமடையும். இதுபோன்று பல்வேறுவிதமான பாதிப்புகள் ஏற்படும்.

தனிமையாக இருக்க விரும்புவது என்பது மனநோய் கிடையாது. அதற்கு ஆலோசனைகள்தான் மருந்து. அந்த வெற்றிடத்தை நிரப்பக் குறிப்பிட்ட ஓர் உறவு கிடைத்துவிட்டால் அதிலிருந்து மீளலாம்.

`இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களில், 50 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் தனிமையின் பிடியில் சிக்கியிருப்பவர்கள்தான்.'
ஆய்வு முடிவு

நண்பர்கள் யாரேனும் தனிமையில் தவிப்பவர்களாய் இருப்பின் அவர்களுக்கு உங்கள் செவியைக் கொஞ்சமேனும் கொடுங்கள். தோழமைதான் தனிமையைத் துரத்தும்.