Published:Updated:

Doctor Vikatan: பண்டிகை விருந்து; பலவித பலகாரங்கள்; அஜீரணத்திலிருந்து தப்பிக்க வழிகள் உண்டா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

அதிகப்படியான இனிப்பு மற்றும் பலகாரங்கள், விருந்துச் சாப்பாடு என தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு பெரும்பாலும் பலருக்கும் அஜீரணம் ஏற்படுவது இயல்பு. அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகளைச் சொல்வீர்களா? தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன? செரிமானம் சீராக இருக்க என்ன செய்யலாம்?

- தீபக் (விகடன் இணையத்திலிருந்து)

ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

``தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதும், அதன் விளைவாக அஜீரணம், வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு, வாயுத்தொல்லை போன்றவற்றால் அவதிப்படுவதும் பரவலாக நடக்கும் விஷயம்தான். அதற்காக இதுபோன்ற பண்டிகைகளில் கொண்டாட்டங்களையும், குடும்பத்துடன் சேர்ந்து உண்டு மகிழ்வதையும் தவிர்க்க முடியாதுதான். ஆனால் உடல்நல பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம். பண்டிகை நாள்களில் பலமான விருந்து, இனிப்பு, கார பலகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும்போது காலை முதல் இரவுவரை வெந்நீர் மட்டுமே குடிப்பது சிறந்தது. அது செரிமானத்துக்கு உதவும். வாயு சேர்வதைத் தடுக்கும். ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்துக் கொள்ளவும். அந்த நீரை அவ்வப்போது லேசாக சூடாக்கி, நாள் முழுவதும் குடிக்கலாம். சீரகத்துக்கு பதில் ஓமத்தைச் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரையும் இதே போல குடிக்கலாம். அதற்காக சீரகம், ஓமம் இரண்டையும் சேர்க்காதீர்கள். ஏதாவது ஒன்று போதும்.

Doctor Vikatan: மருந்து இல்லாமல் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த முடியுமா?

பண்டிகை நாள்களில் வயிறு முட்ட சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். வடை, பாயசத்துடன் விருந்தும் சாப்பிட்டுவிட்டு, அது போக ஸ்வீட், காரம் போன்றவற்றையும் சாப்பிடுவது வயிற்றுவலி, அஜீரணம், வயிற்றில் தசைப்பிடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

எப்போதுமே ஒவ்வொரு வாய் உணவையும் பொறுமையாக மென்று சாப்பிட வேண்டியது ஆரோக்கியத்துக்கான அடிப்படை. அவசரமாக எதையும் விழுங்காதீர்கள். சாப்பிடுகிற நேரமும் முக்கியம். குறிப்பாக இரவு உணவை அதிகபட்சமாக 8 மணிக்குள் முடித்துவிடுங்கள். அதன்பிறகு தூக்கத்துக்கு 2- 3 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.

நெல்லிக்காயைத் துருவி சாலட்டிலோ, ரசத்திலோ சேர்த்துச் சாப்பிடுவது செரிமானத்தைச் சீராக்கும். இஞ்சி, கிராம்பு, மிளகு, சீரகம் போன்றவை செரிமானத்துக்கு உதவக்கூடியவை என்பதால் இவற்றை உணவில் சேர்த்துச் சமைக்கலாம்.

இனிப்பு
இனிப்பு
Doctor Vikatan: சாப்பிட்ட சில மணி நேரத்தில் களைப்பும் தலைச்சுற்றலும் ஏற்படுகிறது; ஏன்?

பண்டிகை என்பதால் வெறும் திட உணவுகளாகச் சாப்பிடாமல் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். நாள் முழுவதும் நீர்மோரை சிறிது சிறிதாகக் குடிக்கலாம். பச்சை மிளகு கிடைக்கும் சீசன் இது. அதை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம். அதுவும் செரிமானத்துக்கு உதவும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு