
கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையிலிருக்கும் காது, மூக்கு, தொண்டை அறுவைசிகிச்சை மருத்துவர் அங்கிருக்கும் செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் அனைவருக்கும் ஆரம்பத்திலேயே ஸ்வாப் டெஸ்ட்டுக்கான மாதிரியைச் சேகரிப்பதற்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
கொரோனா பாதிப்பைக் கண்டறிவதற்காக பிசிஆர் என்ற பரிசோதனை செய்யப்படுகிறது. அடுத்தபடியாக ரத்தத்தின் மாதிரியைச் சேகரித்து எடுக்கும் ரேபிட் டெஸ்ட்டையும் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் பிசிஆர் பரிசோதனையில்தான் துல்லியமான முடிவுகள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், பிசிஆர் பரிசோதனைக்காக ஒருவரின் உடலில் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் குறிப்பிட்ட இடத்திலிருந்து மாதிரியைச் சேகரிக்காவிட்டால் கொரோனா பாதித்தவருக்கும்கூட நெகட்டிவ் ரிசல்ட் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பாக விளக்கமளிக்கிறார் தொற்றுநோய் மருத்துவர் கே.பாலசுப்ரமணியன்.
"கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏ என்ற புரதத்தால் ஆனது. அதன் மேல்புறத்தில் கொழுப்பு படலம் இருக்கும். rtPCR பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பிறகு, சில ரசாயனங்களின் மூலம் மேலிருக்கும் கொழுப்பு படலத்தைக் கரைத்துவிடுவார்கள். மீதமிருக்கும் ஆர்.என்.ஏவை PCR-ல் பரிசோதனை செய்ய முடியாது. அதனால் அதை டி.என்.ஏவாக மாற்றுவார்கள். அதை 'ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்ஷன்' (rt) என்பார்கள்.

அதன் பிறகு அதைப் பரிசோதிக்கும்போது நோய் பாஸிட்டிவா அல்லது நெகட்டிவா என்ற முடிவு தெரிய வரும். மூக்கிலிருந்து எடுக்கும் மாதிரியையும் தொண்டையிலிருந்து எடுக்கும் மாதிரியையும் இணைத்து ஒன்றாகப் பரிசோதிப்பார்கள். அப்போது முடிவு கூடுதல் துல்லியமாக இருக்கும்.
பரிசோதனைக்காக மூக்கு, தொண்டைப் பகுதி இரண்டிலும் சுரக்கும் நீரை (Swab) சேகரிப்பார்கள். மூக்கின் நுனியிலோ, வாய்ப் பகுதியிலோ அண்ணத்திலோ இருக்கும் நீரை பரிசோதனைக்காக எடுத்தால், பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். மூக்கின் உள்பகுதி வரை சென்று, ஒரு வளைவு போன்று இருக்கும் இடத்தில் (Nasopharynx), அதே போல் தொண்டைப் பகுதியில் உள்ளே (Oropharynx) வரைக்கும் சென்று மாதிரியைச் சேகரிக்க வேண்டும். அப்படி உள்பகுதி வரைக்கும் சென்று சேகரிக்கும்போது அந்த நபருக்கு உமட்டல் அல்லது வயிற்றைப் பிரட்டுவது போன்ற உணர்வு ஏற்படும்.

சரியாக மாதிரியைச் சேகரித்திருப்பதற்கு அதை ஓர் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் அல்லது மயக்கவியல் மருத்துவர்களால் மாதிரிகளைச் சரியாக எடுக்க முடியும். ஆனால், ஓர் ஆய்வக உதவியாளரால் அதை அவ்வளவு துல்லியமாக எடுக்க முடியாது.
சரியான முடிவுகள் தெரிய வேண்டும் என்றால் மூச்சுக்குழாயில் சுரக்கும் நீரைச் சேகரிக்க வேண்டும். ஆனால், அது வென்டிலேட்டரில் சிகிச்சை பெறும் நோயாளியிடம் மட்டுமே எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. அல்லது அந்த நபருக்கு மயக்க மருந்து கொடுத்து சேகரிக்க முடியும். மூச்சுக்குழாயிலிருந்து நீரைச் சேகரிக்கும்போது அது அந்த மருத்துவப் பணியாளர் மீது தெறிக்க வாய்ப்புள்ளது.
செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்களுக்கு மாதிரியைச் சேகரிக்க முறையாகக் கற்றுக்கொடுக்கும் பட்சத்தில் துல்லியமான முடிவுகள் கிடைக்கும்.தொற்றுநோய் மருத்துவர் கே.பாலசுப்ரமணியன்
இதனால் மருத்துவப் பணியாளருக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. மூச்சுக்குழாய் வரை வைரஸ் தாக்கிவிட்டது என்றால் அந்த நபருக்கு அறிகுறிகள் தென்பட்டு சிகிச்சைக்குட்படுத்தியிருப்பார்கள். மேலும், நோய்ப் பரவல் அதிகமாக இருக்கும்போது இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்வது கால விரயத்தை அதிகரிக்கும்.
அதனால் கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையிலிருக்கும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர் அங்கிருக்கும் செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் அனைவருக்கும் ஆரம்பத்திலேயே ஸ்வாப் டெஸ்ட்டுக்கான மாதிரியைச் சேகரிப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் ஓரிரு நோயாளிகளுக்கு மாதிரியைச் சேகரிக்கும்போது அருகிலிருந்து கவனித்து, தவறுகளைத் திருத்த வேண்டும்.

அப்படிக் கற்றுக்கொடுக்கும்பட்சத்தில் சரியான இடத்திலிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு, துல்லியமான முடிவுகள் கிடைக்கும்" என்றார்.
பெரிய பெரிய காரியங்களில் ஈடுபடும்போது சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போய்விடுவோம். ஆனால் அந்தச் சிறிய விஷயங்கள் நாளை மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஒருவேளை நோய் பாதித்தவரிடமிருந்து சரியான முறையில் மாதிரியைச் சேகரிக்கவில்லையென்றால், நெகட்டிவ் ரிசல்ட் வருவது மட்டும் விளைவு இல்லை.

அவர் தனக்கு நோய் இல்லை என்று கருதி மேலும், பல நூறு பேருக்குக்கூட நோயைப் பரப்ப வாய்ப்புள்ளது. சிறு அலட்சியம் சமுதாயத்துக்கே ஆபத்தாக மாறிவிடும். எனவே, சரியான முறையில் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும்.