Published:Updated:

சர்க்கரை நோயாளிகள் கண் தானம் செய்யலாமா? #NationalEyeDonationFortnight

பா.கவின்

வளர்ந்து வரும் நாடுகளில் 40 மில்லியன் மக்கள் பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். விழிவெண்படலப் பாதிப்பால், பாதிக்கப்பட்ட மூன்று மில்லியன் பேரில் 60 சதவிகிதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்கள்.

Eye Donation
Eye Donation

தானத்தில் சிறந்தது கண்தானம் என்பார்கள். பொதுவாக, நாம் வாழும்காலத்தில் செய்கின்ற தானங்கள் நம்மை வளமாக்கும், நமக்கு புண்ணியம் சேர்க்கும் என்பார்கள். ஆனால், வாழ்ந்து முடிந்த பிறகு, அதாவது இறப்புக்குப் பிறகு நாம் செய்யும் தானம் நம்மை இறவா நிலைக்குக் கொண்டு செல்லும் என்கிறார்கள். கண்தானம் செய்வதன்மூலம் நாம் அந்த இறவா நிலையைப் பெறலாம்.

Eye
Eye

கண் ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு அவசியம் என்பதை நம்மை நாமே சோதித்துப் பார்த்து உணரலாம். ஒரு சில நிமிடங்கள் நம் கண்களை மூடியபடி நடந்து பார்த்தால் அந்த உண்மையை உணரலாம். பார்வையற்றவர்களின் அவல நிலை அப்போதுதான் தெரியவரும். அதை உணர்ந்து கண்தானம் செய்தால் பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றி சுடர்விட்டு எரியச் செய்யலாம். உடல் உறுப்பு தானங்களில் சிறந்து விளங்குவது கண்தானம். இந்தக் கண்தானம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை கண்தான விழிப்புணர்வு வாரம் இரண்டு வாரங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

"சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு அது. பார்வையில்லாத தன் குழந்தைக்குத் தன் கண்களை எடுத்து வைக்க வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டு இறந்துபோனார் ஒரு தாய். அது அதீத பாசத்தினால், ஆற்றாமையால் ஏற்பட்ட இந்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்று. இப்படித்தான் பலரும் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் அதாவது யார் கொடுக்கலாம், எப்படிக் கொடுக்கலாம், யாருக்குக் கொடுக்கலாம் என்ற அடிப்படை தெரியாமல் இருக்கிறார்கள்" என்று கூறும் கண் மருத்துவர் பி.சந்திரசேகரன், கண் தானம் பற்றி விரிவாகப் பேசினார்.

Dr.B.ChandraSekar
Dr.B.ChandraSekar

"ரத்த தானத்துக்கு அடுத்தபடியாக, கண் தானம் பெரும்பங்கு வகிக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் 40 மில்லியன் மக்கள் பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். விழி வெண்படலப் பாதிப்பால், பாதிக்கப்பட்ட மூன்று மில்லியன் பேரில் 60 சதவிகிதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒட்டுமொத்தமாக வெண்விழிப்படல பாதிப்புக்கு ஆளானவர்களே அதிகம். ஆனால், கண்தானம் செய்பவர்கள் மிகவும் குறைவு. கண் பார்வையை முழுமையாக இழந்தவர்களுக்கு விழி வெண்படல மாற்று சிகிச்சை பயன்தராது. `கார்னியா' என்ற விழி வெண்படலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே விழி வெண்படல மாற்று சிகிச்சை செய்து, கண் பார்வையைப் பெற முடியும்.

இரண்டு வயது முதல் 70 வயது வரை உள்ளவர்களின் விழி வெண்படலம் தானமாகப் பெறப்பட்டு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு வயதுக்குட்பட்டவர்கள், 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கட்டுக்குள் இல்லாத சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளவர்களின் கண்கள் தானமாகப் பெறப்பட்டாலும், அவை ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

Eye Glasses
Eye Glasses

பார்வைக் குறைபாட்டுக்கு கண்ணாடி அணிவோர், விழித்திரை, கண் நரம்பு பாதிப்புக்கு உள்ளானவர்கள், கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள், இதய நோய், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ஆகியோர் கண் தானம் செய்யலாம்.

கண்தானம் - பரிசோதனை!

ஏற்கெனவே விழி வெண்படல மாற்று சிகிச்சை செய்துகொண்டவர்கள், ரேபிஸ் நோய் பாதித்து இறந்தவர்கள், ஹெச்.ஐ.வி நோய்த்தொற்று, பாம்புக்கடியால் இறந்தவர்கள், நீரில் மூழ்கியவர்கள், விஷம் அருந்தியவர்கள், மஞ்சள் காமாலை, கண் நோய்த் தொற்றால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாகப் பெறக்கூடாது. யாரிடமிருந்து கண்தானம் பெற்றாலும் உரிய பரிசோதனைகளுக்குப் பிறகே பயன்படுத்தப்படும்.

Eye
Eye

பிறவிக் குறைபாடு, கிருமித்தொற்று, வைட்டமின் ஏ குறைபாடு, கண்களில் காயம் மற்றும் தழும்பால் ஏற்படும் வெண்விழிப்படலப் பாதிப்பால் ஒளி ஊடுருவும் தன்மை பாதிப்படைந்துவிடும். இதனால் கண் பார்வையை இழக்க நேரிடும். இத்தகையோருக்கு விழிவெண்படலத்தைத் தானமாகப் பெற்று உரிய பரிசோதனைகளுக்குப் பிறகு மாற்று சிகிச்சை செய்தால் பார்வை பெறலாம். சம வயது உடையவர்கள் அல்லது அதைவிட சிறிய வயது உள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட கண்களே சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும்.

யார் தானம் செய்யலாம்?

ரத்ததான முகாம் போன்றே இப்போது கண்தான முகாம்களும் அதிகமாக நடக்கின்றன. பல சமூக நலன் சார்ந்த அமைப்புகள், பெரிய மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தங்கள் இறப்புக்கு முன் கண்தானம் செய்ய பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்யாதவர்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தின்பேரில் கண்கள் தானமாகப் பெறப்படுகின்றன. அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளாக இறந்தவர்கள் மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறவினர்களிடம் மருத்துவர்கள் பேசி கண்தானம் பெறலாம்.

Eye Donation
Eye Donation

இறந்தவர்களிடம் இருந்துதான் கண் தானம் பெறப்படுகிறது என்றாலும், `ஆக்குலர் புற்றுநோய்' (Ocular Cancer) கட்டியால் கண்ணின் பின்பகுதி மட்டும் பாதிக்கப்பட்டு, விண்வெளிப் படலம் நன்றாக இருந்தால் உயிரோடிருக்கும் நோயாளியிடம் வெண்படலம் மட்டும் தானமாகப் பெறப்படும். இது மிகவும் அரிதான ஒன்றாகும். மனித கார்னியாவுக்கு மாற்றாக இதுவரை உலக அளவில் 400 முதல் 500 பேருக்கு மட்டுமே செயற்கை வெண் விழிப் படல சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. செயற்கையைவிட இயற்கையே சிறந்தது.

கண் தானம் செய்ய முடிவு செய்தால்...

  • இறந்தவரின் தலைப் பகுதியை அரை அடி உயரத்துக்கு உயர்த்தி வைக்க வேண்டும்.

  • இமைகளை மூடி வைக்க வேண்டும்.

  • கண்களில் ஈரமான பஞ்சை வைக்க வேண்டும்.

  • மின்விசிறியை இயக்கக் கூடாது.

  • குளிர் சாதனத்தைப் பயன்படுத்தலாம்.

  • இறப்புக்குப் பிறகு அருகிலுள்ள பெரிய கண் மருத்துவமனைகள் அல்லது 104 என்ற மருத்துவ உதவி எண்ணுக்கு அழைக்கலாம். மருத்துவர்கள் 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்கள். 15 நிமிடத்தில் கண்களை எடுத்த தடயம் இல்லாமல் தங்களது வேலையை முடித்துவிடுவார்கள்.

247 கண்கள்; 2 முழு உடல்; ஆண்டுதோறும் ரத்ததானம்... மனிதநேயம் வளர்க்கும் மாடத்தட்டுவிளை கிராமம்!

ஒருவரது கண்தானம் இரண்டு பேரை கண்பார்வை உள்ளவராக மாற்றிவிடும். உயிரிழந்த 6 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்து பாதுகாக்க வேண்டும். நம் நாட்டைப் பொறுத்தவரை 72 மணி நேரம் பாதுகாக்கலாம். வளர்ந்த நாடுகளில் 3 ஆண்டுகள்வரை பாதுகாக்கும் தொழில் நுட்பம் உள்ளது.

ஒளி அறியாதவருக்கு ஒளியாக மாற விரும்பினால் அதற்கான வலைதளங்களில் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம். கண்தானம் செய்வோம்... இறந்த பிறகும் கர்ணனாக இருப்போம். பிறருக்கு பயன்படும் கண்ணை எரிக்காமல், புதைக்காமல் ப்பிறர் வாழ பயன்படுத்துவோம்.

Eye Donation
Eye Donation
Vikatan