Published:Updated:

``சுயகட்டுப்பாட்டை இழக்கவைக்கும் போர்னோகிராபி" - அடிக்‌ஷனிலிருந்து மீண்டுவர உதவும் வழிகள்!

ஓர் ஆண், மணிக்கணக்காக உடலுறவில் ஈடுபடும் காட்சிகளைப் பார்க்கும்போது, அது அவனை உளவியல்ரீதியாகப் பாதிக்க வாய்ப்புள்ளது.

போர்னோகிராபி
போர்னோகிராபி

"வசனமாடா முக்கியம்..? படத்தப் பாருடா..." என்று தொடக்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ விளையாட்டாய் ஆரம்பிக்கும் அது!" ஆனால், நாள்கள் செல்லச்செல்ல அதைத் தொடர்ந்து பார்ப்பவர்கள், அதற்கு அடிமையாகி மற்ற எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத நிலைக்குக்கூட செல்லலாம். இப்போது நாம் பேசப்போவது, 'போர்னோகிராபி' எனப்படும் ஆபாச வீடியோக்களைப் பற்றியும், அவற்றைப் பார்க்கும் அடிக்‌ஷனில் இருந்து மீள்வது பற்றியும்தான்.

போர்னோகிராபி
போர்னோகிராபி

சமீபத்தில், அமெரிக்க புலனாய்வுத்துறை நடத்திய ஆய்வில், ஆபாசப் படம் பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகத் தெரிவித்திருந்தது. குறிப்பாக, சென்னையில்தான் குழந்தை வதை வீடியோக்களைப் பார்ப்பவர்கள் அதிகம் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, தமிழக காவல்துறையினரால் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. மேலும், "தமிழகத்தில் யாரெல்லாம் குழந்தை வதை வீடியோக்களைப் பார்த்தவர்கள்" என்று அமெரிக்க புலனாய்வுத்துறை அனுப்பிய பட்டியலைக்கொண்டு அந்த நபர்களை காவல்துறையினர் கைதுசெய்யவும் தொடங்கிவிட்டனர். 'இனி, குழந்தை வதை வீடியோக்களைப் பார்ப்பவர்கள், அந்த வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்' என்றும் தமிழக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

`5,000 பக்கங்கள்; அடுத்த வாரம் ஆக்‌ஷன்!'- தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பார்த்தவர்கள் விவரம்

எனவே, போர்னோகிராபி பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குழந்தை வதை வீடியோக்கள் மட்டுமல்ல, சாதாரணமாகவே இணையத்தில் காணப்படும் ஆபாசப் பட வீடியோக்களைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முதல் பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள் என்பதே உண்மை. உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் வெப் சைட் எது என்று நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், முதல் பத்து இடங்களில் மூன்று இடங்களை போர்னோகிராபி வெப்சைட்டுகள்தான் பிடித்திருந்தன!

மனநல மருத்துவர் டி.வி.அசோகன்
மனநல மருத்துவர் டி.வி.அசோகன்

எனவே, போர்னோகிராபி பற்றியும் அதன் அடிக்‌ஷனில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது பற்றியும் மனநல மருத்துவர் டி.வி. அசோகனிடம் பேசினோம்.

"சிறார் வதை வீடியோ என்பது குற்றம். எனவே, அதைப் பார்ப்பதும் தடை செய்யப்படவேண்டிய ஒன்றே. ஆனால், அதுவே அடல்ட் போர்னோகிராபி என்று வரும்போது,18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் அதை எப்போதாவது பார்த்தால் பிரச்னை ஏற்படாது. அதையே தொடர்ந்து பார்க்கும்போது, அதற்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது. மனநல மருத்துவத்தில் இது நோயாகப் பார்க்கப்படுவது இல்லை. ஆனால், பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள், அதனைத் தொடர்ந்து பார்க்கவேண்டிய தேவை இரண்டு காரணங்களால் வருகிறது. ஒன்று, அடிமையாகும் சார்பு நிலை மூலம்; மற்றொன்று கட்டாயத்தின் பேரில். முதலில், ஒரு விஷயத்தைப் பிடித்துச் செய்வோம். பின்னாளில் அதுவே பழக்கமான பிறகு பிடிக்கவில்லை என்றாலும் செய்தாகவேண்டிய நிலை ஏற்படும். அதைச் செய்யாமல் உடனடியாக நிறுத்திவிட்டோம் என்றால் மனமும், உடலும் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. இதுவே, அடிமையாகும் சார்பு நிலை. மது போதை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஆரம்பத்தில் பிடித்து அருந்தப்படும் மதுவைப் பின்னாளில் பிடிக்கவில்லை என்றாலும் தினமும் குடித்தே ஆக வேண்டிய நிலை ஏற்படும். இதுபோலத்தான், ஒருவர் ஆரம்பத்தில் ஆபாச வீடியோக்களை விரும்பிப் பார்த்து, நாளடைவில் அது அவர் வழக்கமாகவே மாறிவிடும்.

போர்னோகிராபி
போர்னோகிராபி

இரண்டாவது, கட்டாயத்தின் பேரில். ஒரு விஷயத்தைப் பிடிக்கவில்லை என்றாலும் அதைச் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்போம். நாளடைவில், அதுவே ஒரு பழக்கமாக மாறிவிடும். இதற்கு எடுத்துக்காட்டாக, ஆண்களின் சுயஇன்பப் பழக்கத்தைக் குறிப்பிடலாம். விருப்பமே இல்லை என்றாலும் சில நேரங்களில் சுயஇன்பம் மேற்கொள்ளவேண்டிய நிலை, கட்டாயத்தின் பேரில் ஏற்படும். இதுபோல், சில நேரங்களில் ஆபாசப் படம் பார்க்கவேண்டிய நிலையும் கட்டாயத்தின் பேரில் ஏற்படும்.

இந்த இரண்டு காரணங்களாலும் ஆபாசப் படம் பார்ப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை இரண்டும் பெருமளவில் பாதிக்கப்படும். இதற்கு அடிமையான பிறகு, இதைப் பார்க்காமல் இருக்கவே மாட்டார்கள். அதையும் மீறி பார்க்காமல் இருக்கும் பட்சத்தில், சுய கட்டுப்பாட்டை இழந்து காணப்படுவார்கள். ஆபாசப் படங்களும் போதைப்பொருள்கள் போன்றவைதான்.

போர்னோகிராபி
போர்னோகிராபி

இந்த ஆபாச வீடியோக்கள் பார்க்கும் பழக்கம், நம் அன்றாட வேலைகளைப் பாதிக்கும்போது பிரச்னையாக மாறுகிறது. இதனால் சுய மரியாதையும் இழக்கப்படும். ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர்கள் அதிக நேரம் போன், இணையம் போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். மேலும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை, எரிச்சல், படபடப்பு, அதீத மன அழுத்தம், 'எண்ணம் மற்றும் செயல் சுழற்சி' நோய் உள்ளதா என்று ஒரு மனநல மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ளவது நல்லது. சம்பந்தமில்லாத பல்வேறு வகையான எண்ணங்கள் மாறி மாறி வந்துகொண்டிருப்பதே 'எண்ணம் மற்றும் செயல் சுழற்சி' நோய்.

மேலும், இதுபோன்ற ஆபாசப் படங்களில், அனைவரையும் கவர வேண்டும் என்பதற்காக மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், அதில் ஈடுபடுபவர்களால் எழுப்பப்படும் அதீத ஒலிகள், இயற்கைக்கு மாறான நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துகின்றனர். இதைப் பார்க்கும் ஒரு நபர், இதுபோலவே தனது நிஜ மணவாழ்க்கையில் தாம்பத்திய உறவை எதிர்பார்க்கும்போது, அங்கு பிரச்னை உருவாகிறது.

போர்னோகிராபி
போர்னோகிராபி

இந்த ஆபாச வீடியோக்களில் நடிப்பவர்கள் எல்லாம், ஆபாசப்பட காட்சிகளின் படப்பிடிப்பின்போது டிரக்ஸ், ஹார்மோன் ஊசிகள், மற்றும் போதை மாத்திரைகளைப் பயன்படுத்தி, எப்போதும் போதையிலேயே இருப்பதால், சில நிமிடங்களில் முடிந்துபோகும் படுக்கையறைக் காட்சிகளைப் பல மணி நேரம் வரை நிகழும் ஒன்றாக எடுத்து சித்திரிக்கின்றனர். மேலும், இயற்கைக்கு மாறாக ஒரு பெண் மிருகங்களுடன் உறவில் ஈடுபடும் காட்சி, வித்தியாசமான முறைகளில் உறவுகொள்வது, ஒரே நேரத்தில் அதிக நபர்களுடன் உறவு வைத்துக்கொள்வது, வேகமான ஒலியுடன்கூடிய முனகல்கள், அதிக வலி போன்ற வக்கிரமான காட்சிகள் காட்டப்படுகின்றன. மேலும், இவை படப்பிடிப்பு என்பதால் வேறு வேறு கோணங்களில் எடுத்து ஆபாசத்தை அதிகப்படுத்துகின்றனர்.

மேலும், இந்த ஆபாச வீடியோக்களில் தன்னை வதைத்துக் கொண்டு சுகம் அடைவது, எதிர்ப் பாலினத்தவரை வதைத்து இன்பமடைவது, பாலுறவுக்கென உள்ள பிளாஸ்டிக் பொம்மைகளைப் பயன்படுத்தி உறவுகொள்வது போன்ற மனதைப் பதறவைக்கும் பல காட்சிகள் இடம்பெறுகின்றன . இந்த வீடியோக்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கும்போது, அவற்றைச் செயல்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் ஒருவரின் மனதில் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம்.

போர்னோகிராபி
போர்னோகிராபி

இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க அவர்களுக்கு ஆபாசப் படங்கள் பார்க்க இருக்கும் வாய்ப்புகளை அறவே நீக்க வேண்டும். வேலை போன்ற அடிப்படைத் தேவை தவிர, அவர்களின் இணையப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள், அவரின் சுதந்திரம் பாதிக்காத வகையில் அவரைக் கண்காணிக்க வேண்டும். அவர்களின் கவனத்தை உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான வேறு விஷயங்களில் திருப்பலாம். அவர்களுக்கு இயல்பையும், இந்த வீடியோக்களால் ஏற்படும் பாதிப்புகளையும் அறிவுரையாக இல்லாமல் அவர்களே உணரும்படிச் செய்ய வேண்டும். மேலும், இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து விடுபட்டவர் இது பற்றிப் பேசும்போது, தற்போது அடிமையாக உள்ளவர்களுக்கு இதிலிருந்து மீள்வதற்கான ஒரு நம்பிக்கை கிடைக்கும். இது, ஒரு மருந்தில்லா சிகிச்சை முறையாகும்.

போர்னோகிராபி
போர்னோகிராபி

குழந்தைகளும் இந்த வீடியோக்களைப் பார்ப்பதாகப் பலர் கூறுகிறார்கள். பள்ளிகளில் பதின் பருவத்தினருக்கு நடத்தப்படும் பாலியல் கல்வி இதற்குச் சரியான தீர்வாக இருக்கும். ஆண், பெண் உறுப்புகள், வளர்சிதை மாற்றம், மாதவிடாய், கருவுறுதல் பற்றிய பாலியல் கல்வி குழந்தைகளுக்கு சரியான புரிந்துணர்வையும், வழிகாட்டுதலையும் தருவதாக அமையும். மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இணையத்தை எதற்கெல்லாம் பயன்படுத்துகின்றனர் என்பதில் ஒரு கண் வைத்துக்கொள்வது நல்லது.

சரியான வாழ்க்கை முறை, கட்டுப்பாடு, நம்பிக்கை மற்றும் ஆலோசனைகள் மூலம் கண்டிப்பாக இந்த ஆபாசப்பட அடிமை சார்பு நிலையிலிருந்து விடுபடலாம்" என்கிறார், மனநல மருத்துவர் டி.வி.அசோகன்.

மேலும், ஆலன்-பார்பரா பீஸ் என்ற ஆஸ்திரேலியத் தம்பதி, "ஆண்கள் ஏன் கேட்பதில்லை" என்ற தங்கள் உளவியல் புத்தகத்தில் இந்த ஆபாசப்படங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

அதில், "ஆபாசப்படங்களைப் பெண்களைவிட ஆண்கள் அதிகம் விரும்புகின்றனர். பெண்களின் நிர்வாணப் படங்கள், உடலுறவுக் காட்சிகள், ஆண்களின் உயிரியல் தூண்டல்களைத் தணித்து அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றன. ஓர் ஆண் மணிக்கணக்காக உடலுறவில் ஈடுபடும் காட்சியைப் பார்க்கும்போது, அது அவனை உளவியல் ரீதியாகப் பாதிக்க வாய்ப்புள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.

போர்னோகிராபி
போர்னோகிராபி

எனவே, ஆபாச வீடியோக்கள் என்பவை நம்மைச் சுற்றி விரிக்கப்பட்டுள்ள மாய வலைகள் போன்றவை. இந்த வீடியோக்களுக்குப் பின்னால் மிகப்பெரிய வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதற்கு நாம் பலிகடா ஆகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆக, "வக்கிரம் அதிகரிக்கும்போது உருவாகும் வடிகால் இல்லாத உணர்வுகளுக்குக் கொடுக்கவேண்டிய விலை மிகவும் அதிகமாக இருக்கும். அது நாமாகவும் இருக்கலாம்; நம் வாழ்க்கையாகவும் இருக்கலாம்!" புரிந்து நடந்துகொள்வது அவசியம்.