Published:Updated:

Doctor Vikatan: பார்ப்பவர்களை உறுத்தும் கருவளையங்கள்; தீர்வே கிடையாதா?

Dark Circles (Representational Image) ( Photo by Ketut Subiyanto from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: பார்ப்பவர்களை உறுத்தும் கருவளையங்கள்; தீர்வே கிடையாதா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Dark Circles (Representational Image) ( Photo by Ketut Subiyanto from Pexels )

எனக்குப் பல வருடங்களாக கண்களுக்கடியில் கருவளையம் இருக்கிறது. என்னைப் பார்க்கும் பலரும் அது குறித்து விசாரிக்கும் அளவுக்கு அது வெளியே தெரிகிறது. இதற்கு என்ன தீர்வு?

- சௌந்தர்யா (விகடன் இணையத்திலிருந்து)

சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

``கண்களுக்கடியில் கருவளையங்கள் வர முக்கிய காரணம் தூக்கமின்மை. இன்று சரியான நேரத்துக்குப் படுக்கச் சென்று, போதுமான அளவு தூங்குபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தூக்கம் என்பது மனித உடலின் ஆரோக்கியத்துக்கு மிகமிக முக்கியம். அது உடல் மற்றும் சரும ஆரோக்கியம் இரண்டுக்கும் அவசியம். இரவு 10 மணிக்குத் தூங்குவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து ரத்தத்தில் இரும்புச்சத்து குறையும் அனீமியா பிரச்னை வரும்போது கருவளையங்கள் வரலாம். சைனஸ் பிரச்னையும் இதற்கொரு காரணம். காலையில் எழுந்ததும் அடுக்கடுக்கான தும்மல் போடுவோர், டஸ்ட் அலர்ஜி உள்ளவர்கள், கண்களைக் கசக்கிக்கொண்டே இருப்பவர்கள் போன்றோருக்கு கண்களுக்கு அடியில் கருவளையங்கள் தெரியும்.

இன்னும் சிலருக்கு முக எலும்பின் அமைப்பே அப்படி இருக்கும். அதாவது கண்கள் உள்ளடங்கினாற்போல இருக்கும். மேல்புறத்திலிருந்து வரும் வெளிச்சத்தின் காரணமாக கண்களுக்கடியில் உள்ள சருமத்தில் விழும் நிழல்கூட கருவளையங்களைப் போலக் காட்சியளிக்கும். பரம்பரையாகவும் சிலருக்கு இந்தப் பிரச்னை தொடரலாம்.

கண்களுக்கடியில் உள்ள சருமம் மிக மெலிதானது. அதாவது 0.5 மில்லிமீட்டர்தான். அதனாலேயே அந்தப் பகுதியை மிக கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மாயிஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம். ரொம்ப தீவிரமாக இருக்கும்பட்சத்தில் சரும மருத்துவரை அணுகி, அதற்கான காரணங்களைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சைகளைப் பின்பற்றலாம். ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால் அதற்கான சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம். ஆன்டி ஏஜிங் க்ரீம் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மிக அவசியம். கீரை, பேரீச்சம் பழம் போன்றவை நல்லது. புகைப்பழக்கம் கூடாது.

- இரவு 10 மணிக்குள் தூங்கச்செல்வதோடு, 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். அப்போதுதான் கண்களைச் சுற்றியுள்ள சருமத்துக்கு ரத்த ஓட்டம் சீராகப் போகும்.

- டஸ்ட் அலர்ஜியோ, சைனஸ் பிரச்னையோ இருந்தால் சிகிச்சை எடுக்க வேண்டும்.

- கண்களைக் கசக்கவோ, தேய்க்கவோ கூடாது.

- ஹேர்டை உபயோகிப்பவர்கள், பிபிடி என்ற கெமிக்கல் இல்லாத டையாக தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.

- ஐ மேக்கப்புக்கான ஐ லைனர், காஜல், ஐ ஷேடோ போன்றவற்றை ஆறு மாதங்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

கருவளையம்...
கருவளையம்...

- இரவில் முகம் கழுவிவிட்டு, ஃப்ரிட்ஜில் வைத்த டீ பேக்ஸை கண்களின் மேல் சில நிமிடங்கள் வைத்துக்கொண்டு ரிலாக்ஸ் செய்யலாம். உருளைக்கிழங்கை ஸ்லைஸ் செய்து கண்களுக்குமேல் வைத்துக்கொள்ளலாம்.

- சரும மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையின் பேரில் க்ரீம், வைட்டமின் சி, கே சீரம் போன்றவற்றை உபயோகிக்கலாம்.

- கண்கள் உள்ளடங்கி இருப்பவர்கள் ஃபில்லர் சிகிச்சையும் மற்றவர்கள் பீல்ஸ் (Peels) மற்றம் க்யூ ஸ்விட்ச்டு என்டியாக் லேசர் (Q switched Nd- YAG laser) சிகிச்சை மேற்கொள்ளலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?