Published:Updated:

மனநிறைவான நேரமே மனச்சோர்வுக்கு மருந்து... க்வாரன்டீன் நாள்களை சுறுசுறுப்பாக்கும் டிப்ஸ்! #StayHome

க்வாரன்டீன்
க்வாரன்டீன் ( Pixabay )

இந்த க்வாரன்டீன் நாள்களில் மனைவி சொல்வதை அதே பாணியில் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். இது இயல்புதான். இந்த இயல்பைப் புரிந்துகொண்டால் பிரச்னை இருக்காது.

'அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல, இந்த க்வாரன்டீன் நாள்களில் வழக்கத்தைவிட அதிகமா உடல்சோர்வு ஏற்படுது' என்ற மைண்ட் வாய்ஸில் குமுறிக்கொண்டிருப்பவர்கள் பலர் இங்குண்டு. அவசர அவசரமாக எழுந்திருக்க அவசியமில்லை, பேருந்து, ரயில் கூட்டநெரிசலில் சிக்கி நசுக்கியத் தக்காளிபோல் வீடு திரும்பும் நிலை இல்லை. வீட்டில்தான் 24 மணிநேரமும் இருக்கிறார்கள். ஆனாலும், இந்த க்வாரன்டீன் காலம் பலரின் உடலையும் மனதையும் சோர்வாக்குகிறது.

Quarantine
Quarantine
Pixabay
சார்ஸ், கொரோனா போல இன்னொரு வைரஸ் வருமா? உலகெங்கும் நடக்கும் ஆராய்ச்சிகள் சொல்வதென்ன?

எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் சுறுசுறுப்பாக இருக்கமுடியாத நிலை, அதனால் ஏற்படும் மனஉளைச்சல் என இந்நாள்களில் மக்கள் சந்தித்துவரும் பிரச்னைகள் ஏராளம். இதற்கான காரணம் மற்றும் தீர்வுகளைப்பற்றிப் பொதுநல மருத்துவர் முத்தையாவிடம் கேட்டோம்.

"இப்படிப்பட்ட மனநிலை ஏற்படுவது மிகவும் இயல்பு. நகர வாழ்க்கையில் வாழ்பவர்கள், நகரத்தைவிட்டு வெளியேறி கிராமங்களுக்குச் சென்றால் அவர்களின் மனநிலை முற்றிலும் மாறுபடும். மொபைல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றைத் தூக்கிப்போட்டு இயற்கையோடு ஒன்றியிருப்பதனால் ஒருவிதமான புத்துணர்ச்சி ஏற்படும். கிராமத்தைவிட்டுப் போகவே கூடாது என்கிற மனநிலைக்கு வருபவர்களும் உண்டு. ஆனால், இதே மனநிலை மூன்றாவது நாள் நிச்சயம் இருக்காது. 'எப்போது நகரத்திற்குச் செல்வோம்' என்று நாள்களை எண்ணத் தொடங்கிவிடுவோம்.

Indoor Games
Indoor Games
Pixabay

இதுவும் அதேபோன்ற நிலைதான். விடுமுறை என்ற சந்தோஷத்தில் முதல் இரண்டு நாள்கள் துள்ளிக்குதித்தவர்கள், இப்போது சோர்ந்து போயிருப்பார்கள். இதுவே, வெளியில் செல்வது அவ்வளவு ஆபத்தில்லாத நேரமாக இருந்திருந்தால், தற்போதைய மனநிலை மாறுபட்டிருக்கும். ஆனால், இப்போது வெளியிலும் செல்ல முடியாத நிலை நிலவுவதால் மனதளவிலும் உடலளவிலும் சோர்வாக உணர்கின்றனர்.

செய்வதற்கு எந்தவிதமான வேலையும் இல்லையென்றால் உடல்சோர்வு ஏற்படுவது இயல்பு. இந்த க்வாரன்டீன் நாள்களை விடுமுறை என நினைத்துச் செலவிடாமல், தங்களுக்கென்று வெவ்வேறு வேலைகளை ஒதுக்கி அதில் கவனத்தைத் திசைதிருப்புவதன்மூலம், சோர்வு நிலையைக் கடக்கலாம். இந்த நேரம், பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான சரியான நேரம். எனவே, வீட்டிலிருந்தபடியே பல புதிய முயற்சிகளைச் செய்து பார்க்கலாம். அடுத்த நாள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை முதல் நாள் இரவே திட்டம் போட்டு வைத்துக்கொண்டால், நிச்சயம் சோர்வு நிலைக்கு நாம் செல்லமாட்டோம். படம், சீரியல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை முழுநேரமாகப் பார்க்கக்கூடாது. அவ்வப்போது வீட்டினுள் அல்லது மொட்டை மாடியில் நடக்கவேண்டும். இசையோடு உடற்பயிற்சி, மனஅமைதிக்கு யோகா போன்றவற்றை முயற்சி செய்து பார்க்கலாம். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பதும் மந்தநிலையிலிருந்து மீள உதவும்.

Tiredness
Tiredness
Pixabay
"மூச்சுத்திணறல் ஏற்பட்டாலே கொரோனா என்று அர்த்தமில்லை!" - மருத்துவமனையில் 'சரி' (SARI) வார்டுகள் ஏன்?

மனதிற்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்யும்போது, சிறையில் இருப்பது போன்றுதான் தோன்றும். அந்த வகையில், க்வாரன்டீன் நாள்கள் மனதளவில் சிறை போன்றதுதான். 'க்வாரன்டீன் நாள்களாக மட்டும் இந்த நாள்கள் இருந்திருந்தால், என்னென்னவோ செய்திருப்பேனே' என்கிற எண்ணம் பலரிடம் தோன்றும். இதுபோன்ற அதிகப்படியான எதிர்பார்ப்பும் அவற்றைச் செய்யமுடியாத சூழ்நிலை, இரண்டும் சேர்கையில் மனச்சோர்வு ஏற்படுகிறது.

தற்போது எந்நேரமும் குடும்பத்தோடு இணைந்திருக்கும் நேரங்களில் ஏராளமான கருத்துவேறுபாடுகள் வருவதற்கும் வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு, சாதாரண நாள்களில் 'மின்விளக்கைப் போடுங்கள்' என்று மனைவி சொல்வது பெரிய விஷயமாகத் தோன்றாது. ஆனால், இந்த க்வாரன்டீன் நாள்களில் அதேபோன்று மனைவி சொல்வதை அதே பாணியில் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். இது இயல்புதான். இந்த இயல்பைப் புரிந்துகொண்டால் பிரச்னை இருக்காது. அடிப்படையில் நாம் அனைவரும் சாதாரண மனிதர்கள்தான் என்பதை உணர்ந்தாலே போதும்.

Doctor Muthaiah
Doctor Muthaiah

வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பேசி, அவர்களுடன் ஒற்றுமையாய் நேரத்தைச் செலவழித்தாலே போதும். மனைவியின் நிலையைக் கணவன் புரிந்துகொள்வதற்கு இது ஒரு மிகப் பெரிய வாய்ப்பு. அதேபோல் கணவனின் அலுவலகச் சுமைபற்றி மனைவியிடம் கலந்து பேசலாம். வெளியுலகத்தில் மேலதிகாரிகளாகவும், தொழிலதிபர்களாகவும் இருப்பவர்கள் தங்களின் நிலையைவிட்டு வெளியே வந்து நிம்மதியாய் உரையாடலாம். குழந்தைகளோடு முழுமையான நேரம் செலவழித்து அவர்களுக்கு ஏராளமான விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கலாம். அவர்களோடு இணைந்து விளையாடலாம். வெற்றிபெறவேண்டும் என்கிற நோக்கில் விளையாடக்கூடாது. குடும்பமாக இணைந்து அதன்மூலம் கிடைக்கும் பாசிட்டிவ் எனர்ஜிக்காக விளையாடவேண்டும். 'நான் என்ன செய்கிறேன்' என்பதை மட்டுமே எந்நேரமும் நினைத்துக்கொண்டிருந்தால் நிச்சயம் மனஅழுத்தம் ஏற்படும். மற்றவர்களின் நிலையையும் உணர்ந்து அவர்களோடு மனநிறைவாக நேரம் செலவழிப்பதே மனச்சோர்வுக்கு மருந்து!"

அடுத்த கட்டுரைக்கு