Published:Updated:

Covid Questions: கோவிட் கால தொடர் இழப்புகள்; தற்கொலை எண்ணம்; நான் மீள வழி உண்டா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த ஒரு வருடமாக கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். பார்த்துக்கொண்டிருந்த வேலை போனது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு இப்போதுதான் மிகக்குறைந்த சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இடையில் கொரோனா தொற்று வந்து தீவிர நிலைக்குச் சென்று உயிர் பிழைத்தேன். இந்நிலையில் எதிர்காலத்தை எந்த நம்பிக்கையில் ஓட்டுவது என பயமாக இருக்கிறது. அடிக்கடி தற்கொலை எண்ணம் வருகிறது. மனைவி மற்றும் குழந்தைக்காக யோசிக்கிறேன். என் வாழ்க்கையில் இதுபோன்ற மன அழுத்தத்தை இதுவரை எதிர்கொண்டதே இல்லை. தீர்வு என்ன?

- இளவரசன் (விகடன் இணையத்திலிருந்து)

சித்ரா அரவிந்த்
சித்ரா அரவிந்த்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

``கோவிட் காலத்தில் மன அழுத்தம் என்பது பரவலாக பலரிடமும் காணப்படுகிற விஷயமாக இருக்கிறது. இந்தச் சூழலில் நெகட்டிவ் எண்ணங்களும், ஸ்ட்ரெஸ்ஸும் இருப்பது சகஜம்தான். அந்த எண்ணவோட்டம்தான் எதிர்காலத்துக்கு உங்களைத் தயார்படுத்தும். ஆனால் வேலையின்மை, நெருங்கியவர்களின் இழப்பு, உடல்நலக் கோளாறு என அடுத்தடுத்த இழப்புகள், பிரச்னைகளைச் சந்திக்கிற சிலருக்கு எதிர்காலத்தை பற்றிய மனப்பதற்றம் ஏற்படுவதையும் பார்க்கிறோம். அது அவர்களது மனநலத்தை பாதிக்கிறது. இதுபோன்ற சூழலில் உங்களுக்குத் தேவை மனவலிமை. உங்களுடைய சூழலில் இப்படித்தான் நெகட்டிவ்வாக சிந்திக்கத் தோன்றும். அதனால்தான் வாழ முடியுமா என்ற பயமும் தற்கொலை எண்ணமும் வருகிறது.

Covid Questions: கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நினைவிழப்பு ஏற்படுமா?

வாழ்க்கை என்பது பாசிட்டிவ், நெகட்டிவ் சம்பவங்கள் நிறைந்ததுதான். ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இப்போது நீங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் சூழல்தான் நிரந்தரம், இது இப்படியேதான் தொடரும் என நினைக்காதீர்கள். வாழ்க்கையை பாசிட்டிவ்வாக அணுகப் பாருங்கள்.

ஒருவேளை இந்தச் சூழல் தந்த அழுத்தம், பிரச்னைகள், எண்ணவோட்டங்களிலிருந்து உங்களால் மீள முடியவில்லை என்றால் அது மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம். அதற்கு நீங்கள் மனநல ஆலோசகர் அல்லது மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம். ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் யோகா, தியானம் போன்ற விஷயங்களை முயற்சி செய்யலாம்.

Depression (Representational Image)
Depression (Representational Image)
Image by Engin Akyurt from Pixabay
Covid Questions: கோயிலுக்குச் செல்ல விரும்பும் வயதானவர்கள்; தற்போது செல்வது பாதுகாப்பானதா?

நெகட்டிவ் எண்ணங்களில் உழன்று கொண்டிருக்கும் மனதை பாசிட்டிவ் சிந்தனைகளின் பக்கம் திரும்பச் செய்யப் பழக்க வேண்டும். வாழ்க்கையில் இழந்தவற்றை பற்றி மட்டுமே யோசிக்காமல், உங்களுக்கு நடந்த, கிடைத்த நல்ல விஷயங்களை நினைத்து நம்பிக்கை கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளின் முடிவிலும் அன்றைய தினம் உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை `கிராட்டிட்யூட் டைரி'யில் (Gratitude Diary) எழுதும் பழக்கத்தை ஆரம்பிக்கலாம்.

தொடர்ந்து இப்படிச் செய்கிறபோது நம் வாழ்விலும் நல்ல விஷயங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை வரும். வெளியே சென்று நண்பர்களைச் சந்திப்பது, அவர்களுடன் பேசுவது போன்றவற்றையும் செய்யுங்கள். சோர்விலிருக்கும் உங்கள் மனதை இந்த விஷயங்கள் நிச்சயம் மீட்கும். இதுவும் கடந்து போகும் என்று நம்புங்கள். இதற்கெல்லாம் அப்பாற்பட்ட மன அழுத்தம் இருப்பதாக உணர்ந்தால் தயங்காமல், தாமதிக்காமல் நிபுணர்களின் உதவியை நாடுங்கள்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு