Published:Updated:

கொரோனா காலத்தில் பிசியோதெரபி... இவற்றை ஃபாலோ பண்ணுங்க ப்ளீஸ்... #ExpertAdvice

Physiotherapy
Physiotherapy ( Representational image )

அலுவலகத்தில் சரியான இருக்கை, கண்களுக்கு நேராக அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய கம்ப்யூட்டர் என்று பழகிவிட்ட பலருக்கும், வொர்க் ஃபிரம் ஹோமில் மேலே குறிப்பிட்ட வசதிகள் கிடைக்காமல் கழுத்துவலி, முதுகு வலி, இடுப்புவலி என்று பலவிதமான வலிகள் வரிசைகட்ட ஆரம்பித்துவிட்டன.

வலி தாங்க முடியாதவர்கள் பிஸியோதெரபி சிகிச்சையை நாட ஆரம்பித்துவிட்டார்கள். அப்படிச் செல்லும்போது கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, சிகிச்சை தருகிற பிஸியோதெரபிஸ்ட்டும் சிகிச்சை பெறுபவர்களும் எவற்றிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்..? பிசியோதெரபிஸ்ட் ஶ்ரீநாத் ராகவன் சொல்கிறார்.

பிசியோதெரபிஸ்ட் ஶ்ரீநாத் ராகவன்
பிசியோதெரபிஸ்ட் ஶ்ரீநாத் ராகவன்

``பிசியோதெரபியில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, உபகரணங்களை வைத்துச் செய்வது. இரண்டாவது, நோயாளியைத் தொட்டு சிகிச்சைத் தருவது. முதலாவதில் சிகிச்சை தருபவர், சிகிச்சை பெறுபவர் இருவருமே பரஸ்பரம் தொட வேண்டிய அவசியம் இருக்காது. இதில் தனி மனித இடைவெளியைக்கூடச் சரியாகக் கடைப்பிடிக்க முடியும்.

இரண்டாவது வகைதான் சவாலானது.

சிகிச்சை பெறுபவர் நரம்புக் கோளாறுகள் உள்ள பேஷன்ட் என்றால், அவரைத் தாங்கிப் பிடித்து, படுக்க வைத்து, கைகால்களை நீவிவிட்டு எனத் தொட்டுதான் சிகிச்சையளிக்க வேண்டும். இந்த மாதிரி நேரங்களில் பிசியோதெரபிஸ்ட் பிபிஇ பயன்படுத்த வேண்டும். இந்த இடத்தில் நான் என்னுடைய ஒரு கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு பிபிஇ வாங்க 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை செலவாகும். ஆனால், ஒரு நார்மல் பிசியோ கிளினிக்கில், பிசியோவுக்கான அதிகபட்ச கட்டணமே 250 அல்லது 300 ரூபாய்தான் இருக்கும். இந்தக் கட்டணத்துக்கு பிபிஇ அணிந்துகொண்டு சேவை செய்வது கடினம். அதற்காக இந்தக் கட்டணத்தை நோயாளிகளின் கட்டணத்துடன் சேர்ப்பதும் மனிதாபிமானமற்ற செயல். அவர்கள் ஏற்கெனவே வலிதாங்க முடியாமல்தான் எங்களிடம் வந்திருக்கிறார்கள். பொருளாதாரரீதியிலும் நோயாளிகளுக்குத் துன்பம் கொடுக்க முடியாது. அதனால், ஒவ்வொரு பேஷன்ட்டுக்கும் பிசியோதெரபி செய்து முடித்ததும் நான் உடை மாற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.

Physiotherapy
Physiotherapy
Representational image

சில நோயாளிகளுக்கு வீட்டுக்குச் சென்றுதான் சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும். ஒரு வீட்டுக்கு விசிட் செய்த பிறகு கட்டாயம் குளித்துவிட்டுதான் அடுத்த பேஷன்ட்டை பார்க்கப் போக வேண்டும். இந்தியாவில் அறிகுறிகளற்ற கொரோனா நோயாளிகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுவதால், தெரபிஸ்ட்டாகிய நாங்களே ஒரு கொரோனா கேரியராக இருந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

சிகிச்சை பெற வருபவர்களுக்கு வாசலிலேயே டெம்ப்ரேச்சர் பரிசோதனை செய்கிறோம். கைகளை சானிட்டைசரால் சுத்தம் செய்த பிறகுதான் உள்ளே வர அனுமதிக்கிறோம்.

பிசியோ அறையில், ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை தருகிறோம். ஒருவருக்கு பிசியோ செய்யும்போது இன்னொருவர் அதே அறைக்குள் காத்துக்கொண்டிருப்பதை இப்போது அனுமதிப்பதில்லை.

நோயாளிகளைப் படுக்கவைத்துச் சிகிச்சையளிக்க வேண்டி வந்தால், அவர்கள் பயன்படுத்துகிற தலையணையை டிஸ்போஸபிள் பேப்பர் ஷீட்டால் சுற்றிப் பயன்படுத்த வேண்டும். அல்லது ஒருவர் படுத்து எழுந்த பிறகு அடுத்த நபர் பயன்படுத்துவதற்குள் சோடியம் ஹைட்ரோகுளோரைடினால் தலையணை உறை மற்றும் மேசையைத் துடைத்துவிட வேண்டும்.

பேருந்துப் பயணங்கள், உணவக மேசைகள்... கொரோனாவோடு வாழ மருத்துவர் அறிவுரைகள்! #LiveWithCoronaGuide

தெரபிஸ்ட் நாங்கள் டிஸ்போசபிள் கிளவுஸ், மாஸ்க், ஹெட் கேப், ஃபேஸ் ஷீல்ட் பயன்படுத்துகிறோம். பேஷன்ட்டுக்கு மாஸ்க் கட்டாயம் என்று சொல்கிறோம்.

இந்த நேரத்தில் பிசியோ செய்துகொள்ள வருபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்காகக் கொடுக்கப்பட்ட நேரத்தில் வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தாமதமாக வந்தால், அடுத்த நபருக்கு அது சங்கடமாகலாம். அவர்கள் கிளினிக் வாசலில் காத்திருக்க நேரலாம். அதனால், அப்பாயின்மென்ட் வாங்கிய நேரத்துக்குச் சரியாக வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

Physiotherapy
Physiotherapy
Representational image
சலூன், பார்லர் செல்லும்போது எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்? #LiveWithCoronaGuide

அடுத்து, உங்களால் தனியாக வர முடியுமென்றால் நீங்கள் மட்டும் தனியாக வந்து பிசியோ செய்துகொண்டு செல்லுங்கள். தேவைப்பட்டாலொழிய உங்களுடன் யாரையும் அழைத்து வராதீர்கள். தெரபிஸ்ட் நாங்களும் இப்போது உதவியாளர்களைத் தவிர்த்துவிட்டுத்தான் சிகிச்சை தந்துகொண்டிருக்கிறோம்'' என்கிறார் பிசியோதெரபிஸ்ட் ஶ்ரீநாத் ராகவன்.

அடுத்த கட்டுரைக்கு