Published:Updated:

`வீட்டில் பெஸ்ட் கன்ட்ரோல் செய்யும்போது இதையெல்லாம் கவனியுங்க!' - நிபுணர்களின் அலெர்ட் டிப்ஸ்

பெஸ்ட் கன்ட்ரோல்
பெஸ்ட் கன்ட்ரோல்

சரியான பயிற்சியின்றி பெஸ்ட் கன்ட்ரோல் செய்பவர்கள் ரசாயனங்களை அதிகமாகப் பயன்படுத்தினாலோ, அனுமதிக்கப்படாத ரசாயனங்களைப் பயன்படுத்தினாலோ அது வீட்டில் உள்ளவர்களைப் பாதிக்க வாய்ப்புள்ளது.

வீட்டில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்த தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு கணவன் - மனைவி உயிரிழந்த சம்பவம் புனேவில் நிகழ்ந்துள்ளது. புனேயைச் சேர்ந்த அவினாஷ் (64) மற்றும் அவரின் மனைவி அபர்ணா மஜாலி (54) இருவரும் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்.

அவினாஷ், அபர்ணா மஜாலி
அவினாஷ், அபர்ணா மஜாலி

இவர்கள் சில தினங்களுக்கு முன்பு தங்கள் வீட்டில் பெஸ்ட் கன்ட்ரோல் சர்வீஸ் (Pest Control Service) மூலம் ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி பெஸ்ட் கன்ட்ரோல் செய்துள்ளனர். பெஸ்ட் கன்ட்ரோல் செய்யப்பட்ட அன்றிரவே இருவருக்கும் அதீத மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர்களின் மகள், தன் பெற்றோர் மூச்சுப் பேச்சின்றிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த தம்பதி உயிரிழந்தனர். பூச்சிக்கொல்லிகளாகப் பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களே மூச்சுத்திணறலை ஏற்படுத்தியதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ரசாயனங்கள்
ரசாயனங்கள்

பெஸ்ட் கன்ட்ரோலில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மனிதர்களின் உயிரையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தானவையா..? பெஸ்ட் கன்ட்ரோல் செய்யப்படும் அன்று அந்த வீட்டில் உள்ளவர்கள் என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? இவற்றைப் பற்றி, அரசிடம் அங்கீகாரம் பெற்று பெஸ்ட் கன்ட்ரோல் சர்வீஸ் செய்துவரும் ஒருவரிடம் பேசினோம்.

"வீட்டில் நோய்க்கிருமிகளைப் பரப்பும் பூச்சிகளை அழிப்பதற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த வழிதான். ஆனால், இன்று பெஸ்ட் கன்ட்ரோல் சர்வீஸ் செய்துவரும் பலர் அரசு அங்கீகாரம் பெறாதவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வீடுகளுக்குச் சென்று பெஸ்ட் கன்ட்ரோல் செய்து வருகின்றனர்.

பூச்சிக்கொல்லி
பூச்சிக்கொல்லி

இவர்களுக்குப் போதிய அளவு பயிற்சி இல்லாத காரணத்தால் வீடுகளில் பூச்சிக்கொல்லிகளைச் சரியாகக் கையாளவும், பெஸ்ட் கன்ட்ரோல் செய்த பிறகு அந்த வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டிய அறிவுரைகளைக் கூறவும் தெரியவில்லை. மேலும் சிலர் உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) ஏற்றுக்கொள்ளப்படாத சில ரசாயனங்களையும் பூச்சிக்கொல்லிகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். இவை உயிருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும்.

பொதுவாக பெஸ்ட் கன்ட்ரோல் முறைகள் மூன்று விதமாகச் செய்யப்படுகின்றன. அதில் முதலாவது ஃப்யூமிகேஷன் (Fumigation). இந்த முறையில் மருத்துவ ஆய்வகங்கள், மருத்துவமனைகள், கப்பல்கள் போன்றவை பெஸ்ட் கன்ட்ரோல் செய்யப்படுகின்றன. ஃப்யூமிகேஷன் செய்வதற்கு சில ரசாயனங்கள் மாத்திரை வடிவில் கிடைக்கின்றன. இந்த மாத்திரைகளை, சுத்தம் செய்ய வேண்டிய மருத்துவமனையிலோ, ஆய்வகங்களிலோ ஓர் இடத்தில் வைத்துவிட்டு அனைத்துக் கதவுகளையும் மூடிவிட வேண்டும்.

 ஃப்யூமிகேஷன் மாத்திரை
ஃப்யூமிகேஷன் மாத்திரை
செல்போன், டி.வி ரிமோட்... டாய்லெட் சீட்டைவிட அதிகக் கிருமிகள் கொண்டவை! பாக்டீரியா அலெர்ட்

அந்த ரசாயனங்கள் காற்றுடன் வினைபுரிந்து அந்த அறையில் உள்ள அனைத்துப் பூச்சிகளையும் நுண்ணுயிரிகளையும் கொன்றுவிடும். ஃப்யூமிகேஷன் செய்யப்பட்ட அறையில் மனிதர்கள் யாரும் இருக்கக் கூடாது. ஃப்யூமிகேஷன் செய்து 24 மணிநேரம் கழித்து, அந்த அறைக்குள் நல்ல காற்றோட்டம் செலுத்தப்பட்ட பிறகு அதைப் பயன்படுத்தலாம். இந்த முறையைப் பெரும்பாலும் வீடுகளில் செய்வதில்லை.

இரண்டாவது, ஜெனரல் பெஸ்ட் கன்ட்ரோல் (General Pest Control). இதில் பூச்சிகளுடன் சேர்த்து எலி போன்றவற்றையும் கட்டுப்படுத்தும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய அளவிலான உணவகங்கள், விடுதிகள் போன்றவற்றில் இம்முறையில் பெஸ்ட் கன்ட்ரோல் செய்யப்படுகிறது.

கறையான்
கறையான்

அடுத்தது, டெர்மைட் கன்ட்ரோல் (Termite Control). இதுதான் வீடுகளுக்குச் செய்யப்படும் பொதுவான பெஸ்ட் கன்ட்ரோல் முறை. குறிப்பாக வீடுகளில் இருக்கும் கறையான்களுக்காகச் செய்யப்படும் இந்த டெர்மைட் கன்ட்ரோல் முறையில் மற்ற பூச்சிகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

நாங்கள் வீடுகளுக்குச் சென்று டெர்மைட் கன்ட்ரோல் செய்யும்போது அந்த வீட்டில் உள்ள குழந்தைகள், வயதானவர்கள், செல்லப்பிராணிகளை வேறு இடத்துக்கு அனுப்பிவிட்டு, பிறகு ரசாயனங்கள் பயன்படுத்தி பெஸ்ட் கன்ட்ரோல் செய்வோம். அதன் பின்னர் சரியான காற்றோட்டத்தை வீட்டுக்குக் கொடுத்த பின்பே மற்றவர்களை உள்ளே அனுமதிப்போம். இப்படிச் செய்யும்போது பாதிப்பு எதுவும் ஏற்படாது.

ஆனால், சரியான பயிற்சியின்றி பெஸ்ட் கன்ட்ரோல் செய்பவர்கள் ரசாயனங்களை அதிகமாகப் பயன்படுத்தினாலோ, அனுமதிக்கப்படாத ரசாயனங்களைப் பயன்படுத்தினாலோ அது வீட்டில் உள்ளவர்களை பாதிக்க வாய்ப்புள்ளது.

குழந்தை
குழந்தை
``செயற்கை முறை கருத்தரித்தல் குழந்தையின் ஆயுளைப் பாதிக்குமா?" - மகப்பேறு மருத்துவரின்  விளக்கம்

வீட்டில் பெஸ்ட் கன்ட்ரோலுக்கு ஃப்யூமிகேஷன் முறையில் பயன்படுத்தும் மாத்திரைகளைப் பயன்படுத்தினால் அதில் உள்ள நிக்கோட்டின் (Nicotine), மெத்தில் புரோமைடு (Methyl Bromide), பினாப்தலின் (Phenolphthalein), டை-குளோரோ ப்ரொபேன் (Dichloropropane) போன்ற ரசாயனக் கலவைகள் மூச்சுத்திணறலை ஏற்படுத்தி அதிகபட்சமாக மரணம்கூட நேரலாம்" என்றார்.

பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் சுவாசப் பிரச்னைகள் பற்றி அவசர சிகிச்சை மருத்துவர் கதிரவனிடம் பேசினோம்.

"பூச்சிக்கொல்லி மருந்துகளைச் சரியான அளவு மற்றும் அவற்றுக்குரிய கலவையில் பயன்படுத்தும்போது ஆபத்து எதுவும் இல்லை. அவ்வாறில்லாமல் அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமான அளவில் பயன்படுத்தும்போது அவை உயிரைக் கொல்லும் விஷமாகின்றன.

அவசர சிகிச்சை மருத்துவர் கதிரவன்
அவசர சிகிச்சை மருத்துவர் கதிரவன்

மேலும், இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளை முகமூடி, கையுறை, கண் கண்ணாடி போன்ற பாதுகாப்புக் கவசங்கள் அணியாமல் உபயோகிக்கும்போது அவை மனிதர்களுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இந்தப் பூச்சிக்கொல்லி மருந்து வாடையையோ அல்லது இதனால் வரும் புகையையோ சுவாசிக்கும்போது சுவாசம் வழியே விஷம் பரவி மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். இந்த மூச்சுத்திணறலை ARDS (Acute Respiratory Distress Syndrome) என்பார்கள். இது நுரையீரலை பாதித்து பிராண வாயுவான ஆக்சிஜன் உட்செல்வதைத் தடுத்து நுரையீரலில் உள்ள அசுத்த காற்றான கார்பன்-டை ஆக்ஸைடு வெளியேறுவதைத் தடுத்துவிடுகிறது.

நுரையீரல்
நுரையீரல்

இந்த ஆக்சிஜன் குறைபாட்டை ஏற்படுத்தி, இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை நிறுத்திவிடும் அளவுக்கு (Cardiac Pulmonay Arrest) ஆபத்தை விளைவிக்கும்.

எனவே, இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளப் பூச்சிக்கொல்லி மருந்தை உபயோகிக்கும்போது தகுந்த பாதுகாப்புக் கவசங்களை அணிய வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்தைச் சரியான அளவு மற்றும் கலவையில் உபயோகிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்டிருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும். இவற்றைப் பயன்படுத்தும்போது குழந்தைகள், வயதானவர்கள் தூரத்தில் இருக்க வேண்டியது அவசியம்.

ஒருவேளை யாராவது இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிக்கப்பட்டால் அவரை தூய தண்ணீரில் தலை முதல் கால்வரை மூழ்கச் செய்து சோப்பு உபயோகித்துக் குளிக்கச் செய்ய வேண்டும். கண்களை நன்றாகக் கழுவ வேண்டும். இதயம் மற்றும் நுரையீரல் செயல்படுவது நின்றுவிட்டால் அவருக்கு Cardiac Compression மற்றும் Rescue Breath போன்ற முதலுதவிகளைச் செய்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

பெஸ்ட் கன்ட்ரோல்
பெஸ்ட் கன்ட்ரோல்
``8 மணிநேரத்திற்கு ஒருமுறை மாஸ்க்கை மாற்ற வேண்டும்!" - விளக்கங்களும் வழிகாட்டுதலும் #Video

சரியான நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றிவிடலாம் என்றார்" மருத்துவர் கதிரவன்.

வீட்டில் பெஸ்ட் கன்ட்ரோல் செய்யும்போது அரசிடம் அங்கீகாரம் பெற்ற பெஸ்ட் கன்ட்ரோல் சர்வீஸ் நிறுவனத்தை மட்டுமே அணுக வேண்டும் என்பதையும், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும் சரியான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.

அடுத்த கட்டுரைக்கு