Published:Updated:

டீன்ஏஜ் பிள்ளைகள், நியூக்ளியர் குடும்பம்... லாக்டௌன் நாள்களில் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பது எப்படி?

மனஅழுத்தம்
மனஅழுத்தம்

தலைதூக்கும் பொருளாதார பிரச்னைகள்... உருவாகும் மனஅழுத்தம்... லாக்டௌன் நாள்களை இனிமையாக்கும் ஆலோசனைகள்!

இத்தனை நாள்கள், நம்மில் பலரும் வீட்டை தூங்குவதற்காக மட்டும்தான் உபயோகித்திருப்போம். வாரம் ஒருமுறை கிடைக்கும் விடுமுறையிலும், தூங்கியே பெரும்பாலான நேரத்தைக் கழித்திருப்போம். அப்படிப் பார்த்தால், இப்போதுதான் நாமெல்லாம் நிஜமாகவே வீட்டிலிருக்கிறோம். எழுவதற்கும் தூங்கப்போவதற்குமான இடைப்பட்ட பொழுதில், வீட்டிலிருப்பது என்பது இந்தத் தலைமுறை கொஞ்சம் மறந்துபோன விஷயமும்.

ஒருவகையில் அடைபட்டுக் கிடத்தல் போன்ற உணர்வைக் கொடுக்கும் இந்தச் சூழலை, ஸ்ட்ரெஸ் இல்லாமல் எப்படிக் கையாள்வது?

ஆலோசனைக்காக, மனநல மருத்துவர் சுபா சார்லஸிடம் பேசினோம்.

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

``இதைச் சிக்கலாக நினைக்கமால், `இன்னும் கொஞ்ச நாள்களுக்கு நம்ம கூடுகளுக்குள், இனிமையாக இருக்கப்போகிறோம், இன்னும் கொஞ்ச நாள்களுக்கு நாம் நிஜமாகவே நாமாக இருக்கப்போகிறோம்'னு நினைக்கணும். இப்படியான நேரத்தில், நம்ம எண்ணங்கள் மட்டும்தான் நமக்கான ஆறுதல் என்பதால, எல்லாவற்றையும் நேர்மறையா நினைக்கணும். அப்போதான் இனிமை!

நியூக்ளியர் குடும்பங்களும் வொர்க்கிங் பெற்றோரும்!

வொர்க்கிங் பெற்றோர்
வொர்க்கிங் பெற்றோர்

ஒரு சில பெற்றோர், தனிக்குடும்பமாகவும், அதே நேரம் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாகவும் இருப்பார்கள். பணி நாள்களில் இது சிக்கலாகத் தெரியாது. ஆனால், இப்போது பிரச்னையாகத் தெரியும். இப்படியான தம்பதிகள், தங்களின் பணியில் அட்ஜஸ்ட் செய்துகொண்டால் மட்டுமே இந்த லாக்டௌன் நாள்களைச் சமாளிக்க முடியும். தங்களின் சூழலை, குழந்தைகளுக்குப் புரிய வைப்பது நல்லது. அலுவலகத்துக்கும் தங்கள் சூழலை உணர்த்துவது, ரொம்பவும் முக்கியம். இந்த நேரத்தில் நிறுவனங்களும் பணியாளர்களின் சூழலை உணர்வது அவசியம்.

``லாக் டௌன் நாள்களும், ஓஷோவின் வாழ்வில் ஒரு நாளும்!"- வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் #KuttiStory

டீன் ஏஜ் குழந்தைகளை எப்படிக் கையாள்வது?

டீன் ஏஜ் குழந்தைகளை எப்படிக் கையாள்வது?
டீன் ஏஜ் குழந்தைகளை எப்படிக் கையாள்வது?

10 வயதுக்குட்பட்ட குழந்தை என்றால், இந்த நேரத்தில் பெற்றோரின் சொல்பேச்சு கேட்டு, நடந்துகொள்வார்கள். ஆனால், டீன் ஏஜ் குழந்தைகள், அப்படியல்ல. அடிப்படையாகவே அவர்கள் அறிவுரை சொல்பவரை எதிரியைப் போலத்தான் பார்ப்பார்கள். கட்டுப்பாடுகள் ஏதேனும் விதிக்கப்பட்டால், இவர்கள் உடனே டென்ஷனாகிவிடுவர். இவர்களை நெறிப்படுத்த, பெற்றோர் பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக இருந்து அவர்களை வழிநடத்துதல் மட்டுமே சரியாக இருக்கும். உதாரணத்துக்கு, 'நேரத்துக்கு படுக்கைக்குச் செல்' எனச் சொல்வதைவிடவும் நீங்களே சீக்கிரமாகப் படுக்கைக்குச் செல்வதுதான் சரி. அவர்கள் டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கிப்போகக் கூடாதென்றால், நீங்கள் முதலில் அதைச் செய்யக் கூடாது.

பொருளாதார ரீதியான பிரச்னை, வீட்டுக்குள் வந்தால்..?!

பொருளாதார பிரச்னை
பொருளாதார பிரச்னை

உலகத்தையே கொஞ்ச நேரம் சும்மா இருங்க எனச் சொல்லியிருக்கிறது இந்த வைரஸ். இந்த `சும்மா' இருத்தலை, வாழ்வியல் விஷயங்களோடு தொடர்புபடுத்தி இருப்பவர்கள், நம் வீட்டுப் பெரியவர்கள். அவர்களின் அந்த வாழ்வியலில், உங்கள் வாழ்க்கையை இப்போது இணைத்துக்கொள்ளுங்கள். காரணம் பொருளாதாரத்தைத் தாண்டி, நிறைய விஷயங்களைப் பெரியவர்கள் சொல்லித்தருவார்கள். வேலையைக் கடந்த ஒரு வாழ்க்கையையும், அதன் அர்த்தத்தையும் அவர்கள் உணர்த்துவார்கள்.

என்னதான் சமயோசிதமாக இருந்தாலும், இப்போதைக்கு பொருளாதாரச் சிக்கல்கள் நடுத்தரக் குடும்பங்களை ஆட்டிப்படைக்கவே செய்யும். ஆகவே, அப்படியான குடும்ப நபர்கள் இந்த அசாதாரண சூழலை, `உங்கள் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் என்னென்ன' என்பதைத் தெரிந்துகொள்வதற்கான நேரமாக உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்தச் சூழல் உங்களுக்குப் புதிதுதான் என்பதால், ஏற்றுக்கொள்ள முதலில் கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டியிருக்கும். பறவைகளும் விலங்குகளும், இயற்கையும் எப்படி இன்றை மட்டுமே யோசிக்கின்றனவோ... அப்படி உங்களின் இன்றை மட்டும் யோசியுங்கள் நீங்களும்.

நாளை என்பது எப்போது வேண்டுமானாலும் மாறும். இன்று மட்டும்தான் நிதர்சனம்.

வீட்டுக்குள்ளேயே இருப்பது... பார்த்தவர்களையே தினமும் பார்ப்பது... செய்த வேலையையே செய்வது... என்றிருப்பது சலிப்பையும் கோபத்தையும் தந்துவிட்டால்..?

குடும்பம்
குடும்பம்

நிச்சயம் தரும். எப்போதும், ஒரு வேலையை ஒருநாளில் ஒருமுறை மட்டும் ஒருவர் செய்யுங்கள். அடுத்தமுறை, அந்தப் பொறுப்பை வேறொரு குடும்ப உறுப்பினருக்குக் கொடுத்துவிடுங்கள். உதாரணத்துக்கு, ஒருமுறை நீங்கள் பாத்திரம் துலக்கினால், அடுத்தமுறை உங்கள் இணையரை அதைச் செய்யச் சொல்லுங்கள். மூன்றாவது முறை செய்ய நேர்ந்தால், இருவரும் இணைந்து செய்யுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் இருக்கும் வீட்டில் அவர்களையும் உங்களின் வேலையில் இணைத்துக் கொள்ளுங்கள். வீட்டு வேலைகள் எதையும் பெரிதாக பிளான் பண்ணியோ அட்டவணை போட்டோ செய்ய வேண்டாம். இம்பெர்ஃபெக்‌ஷனோடு செய்வதில், எந்தத் தவறும் இல்லை என்பதால் கவலையின்றி இருங்கள்.

தினமும் ஒரே மனிதர்களைச் சந்திக்கும்போது, உணர்வு சார்ந்த சில சிக்கல்கள் வரத்தான் செய்யும். அவற்றையெல்லாம் குறையாகப் பார்க்காமல், அனுபவமாகப் பாருங்கள். வீட்டில் யாரையும் யாரும் உணர்வுகள் விஷயத்தில் கட்டுப்படுத்த முயல வேண்டாம். வீட்டிலிருப்பவர் யாருக்காவது மனநலம் சார்ந்த பிரச்னைகள் இருப்பது போல தெரியவந்தால், அவர்களுக்கு உங்கள் செவியையும் தோளையும் கொடுங்கள், போதும். ஒருவேளை அப்படியும் விஷயம் சரியாகவில்லை என்றால், அரசின் மனநல மருத்துவ சேவையைத் தாமதிக்காமல் அணுகுங்கள்.

அழுத்தத்துக்குள்ளாகும் இல்லத்தரசிகள் என்ன செய்யலாம்?

இல்லத்தரசிகள்
இல்லத்தரசிகள்

இப்போது இவர்களுக்குத்தான் பணிச்சுமை கூடியுள்ளது. காரணம், வீட்டிலுள்ள எல்லோரும், எல்லா நாளும் வீட்டுக்குள் இருக்கும்போது ஓய்வென்பது எட்டாக் கனியாகிவிடும். இந்த லாக்டௌன் நாள்கள், 'வேலை செய்துகொண்டே இருப்பது' என்ற நிலைக்கு இவர்களைத் தள்ளிவிடாமல் இருக்க, குடும்பத் தலைவர்களும் வீட்டிலுள்ள மற்றவர்களும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இந்த இல்லத்தரசிகளின் சூழலை அறிந்து - புரிந்து அவர்களின் பணியை அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

குடும்பத்தலைவிகள், தங்களின் பொறுமையை அதிகப்படுத்துவது, வீட்டுக்குள்ளிருக்கும் எல்லோருக்குமே நல்லது என்பதால், அதை இல்லத்தரசிகள் செய்ய வேண்டும். அனைத்துக்கும் பிறகு, மனஅழுத்தம் ஏற்படக்கூடும். அதுதான் இயல்பு. அப்படியான நேரத்தில் உங்களை நீங்களே ரிலாக்ஸ் செய்யுங்கள். மூச்சை நன்கு இழுத்துவிடுங்கள். கழுத்துப் பகுதியில், நன்கு தடவிக் கொடுங்கள், உங்களின் ஓய்வு நேரத்தில், மனதுக்குப் பிடித்த ஏதாவதொரு விஷயத்தைச் செய்யுங்கள். வீட்டைச் சுத்தப்படுத்துவது தொடங்கி சமையல்வரை எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். நீங்கள் உங்களைச் சரியாகப் பார்த்துக்கொண்டால் மட்டும்தான், எல்லாமே சரியாக இருக்கும்! உங்களுக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால், குடும்ப உறுப்பினரிடம் உதவி கேளுங்கள். அனைவரையும் இந்த நேரத்தில் உங்களோடு இணைத்துக்கொண்டு பணியாற்றுங்கள்."

அடுத்த கட்டுரைக்கு