Published:Updated:

Doctor Vikatan: தடுப்பூசி போட்ட பிறகு எதிர்ப்பாற்றல் ஏற்பட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ள முடியுமா?

Covid
News
Covid ( AP Illustration/Peter Hamlin )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டுவிட்டேன். இரண்டாவது டோஸ் போட்டதிலிருந்து இரண்டு வாரங்கள் கழித்து ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பாற்றல் புரதங்கள் உருவாகும் என்கிறார்களே... இதை டெஸ்ட் செய்து பார்த்து உறுதிசெய்து கொள்ளலாமா?

- அபிநவ் (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் முத்துச்செல்லக்குமார்
டாக்டர் முத்துச்செல்லக்குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.

``உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி முதல் டோஸ் போட்டுக்கொண்ட இரண்டு வாரங்களில் எதிர்ப்பாற்றல் தூண்டப்படும். அதன்பிறகு இரண்டாவது டோஸும் போட்டுக்கொண்டதும் இது ஏற்கெனவே போட்டுக்கொண்ட முதல் ஊசி ஏற்படுத்திய தடுப்பாற்றலுக்கு மேலும் வலுசேர்க்கும். நம் நாட்டில் பெருமளவில் போடப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டு தவணைகளையும் எடுத்துக்கொண்டவர்களுக்கு 2 - 3 வாரங்களில் ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பாற்றல் புரதங்கள் உயர்ந்த நிலையை அடைகின்றன என்பது தெரிய வந்திருக்கிறது. இப்படி ஏற்பட்ட எதிர்ப்பாற்றல் புரதங்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். ஆனாலும் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு இவற்றின் எதிர்ப்பாற்றல் பலன் (Immune Response) நீடிக்கும். எதிர்ப்பாற்றல் திறன் குறைந்தாலும், `செலுலார் இம்யூனிட்டி' எனப்படும் செல்களின் எதிர்ப்பாற்றல் ஏற்பட்டு, அது நீண்ட காலம் நீடிக்கும். பி மற்றும் டி வகை நினைவாற்றல் செல்கள், கோவிட் தொற்று ஏற்படும்போது வைரஸை எதிர்த்துப் போராடுவதுடன், மீண்டும் எதிர்ப்பாற்றல் புரதத்தை உருவாக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதனால்தான் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகளில் மூன்றாவது தவணை தடுப்பூசி போடப்படுகிறது. இந்தியாவிலும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் போடுவது குறித்து யோசித்து வருகிறார்கள். குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள், உடலில் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள் ஆகியோருக்கு மூன்றாவது டோஸ் போட வாய்ப்பிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொதுவாக இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களுக்கு எதிர்ப்பாற்றல் திறனை அளவிட வேண்டிய அவசியமில்லை. அதன் மூலம் உடல் நன்கு எதிர்ப்பாற்றலைப் பெற்றுவிட்டதா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. உதாரணத்துக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் ஸ்பைக் புரதத்துக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதத்தை அளவிட வேண்டும்.

Covid Vaccination
Covid Vaccination
AP Photo/Altaf Qadri

சில பரிசோதனைக்கூடங்களில் நியூக்ளியோகேப்சிட் புரதத்துக்கு (Antibodies to Nucleocapsid Proteins) எதிரான எதிர்ப்பாற்றல் புரதத்தைப் பார்த்து, ஆன்டிபாடி உருவாகவில்லை (Negative Serology Test) என்று சொல்லிவிடுவார்கள். ஏனென்றால், நாம் போட்டுக்கொண்டது ஸ்பைக் புரதத்தைக் குறிவைத்த தடுப்பூசி. ஒருவேளை ஸ்பைக் புரதத்துக்கான எதிர்ப்பாற்றலை மட்டுமே அளவிட்டால்கூட, அது எந்த அளவு இருந்தால் (Concentration of antibodies) கோவிட் தொற்று ஏற்படாமல் தடுக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லோருக்கும் எதிர்ப்பாற்றல் புரதங்கள் உருவாகும் நிலை ஒரே மாதிரி இருப்பதும் இல்லை. வயது முதிர்ந்தவர்கள், பல்வேறு நோய்களுக்கும், எதிர்ப்புத்திறனைக் குறைக்கவும் மருந்துகளை எடுத்துக்கொள்வோருக்கு மற்றவர்களுக்கு உருவாவது போன்ற எதிர்ப்பாற்றல் புரதங்கள் உருவாகும் என்று சொல்வதற்கில்லை. ஆனால், ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பாற்றல் புரதங்களை மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் கோவிட் தொற்று ஆய்வாளர்களும் பரிசோதனை (serosurveillance study) செய்து பார்க்கிறார்கள்.

COVID-19 testing
COVID-19 testing
AP Photo / Altaf Qadri

அதன் மூலம் எத்தனை மக்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியும். மேலும் இது வைரஸின் பரவும் வேகத்தை அறியவும் உதவும். இதன் மூலம் மக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்ப்பாற்றலை அடிப்படையாகக் கொண்டு, பெருந்தொற்றுக்கால பொதுசுகாதாரத்தை மேம்படுத்துவது, நோயைக் கட்டுப்படுத்துவது, வருங்காலத்துக்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவது ஆகியவற்றை நிபுணர்கள் குழு தரும் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின்படி அரசு செயல்படுத்த முடியும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?