Published:Updated:

Covid Questions: கொரோனா பெருந்தொற்றுக் கால மன உளைச்சலில் இருந்து எவ்வாறு மீள்வது?

மன அழுத்தம்

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid Questions: கொரோனா பெருந்தொற்றுக் கால மன உளைச்சலில் இருந்து எவ்வாறு மீள்வது?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:
மன அழுத்தம்

Covid Questions: கொரோனாவுக்கு முன் மனவலிமை அதிகமாக இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் உடலில் சிறு தொந்தரவு வந்தால்கூட அதை கொரோனாவின் அறிகுறியாகக் கருதி மன உளைச்சல் அதிகமாகிறது. இதிலிருந்து எப்படி மீள்வது?

- அஜித்குமார் (விகடன் இணையத்திலிருந்து)

உளவியல் ஆலோசகர். சித்ரா அர்விந்த்.
உளவியல் ஆலோசகர். சித்ரா அர்விந்த்.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அர்விந்த்.

``இந்த உணர்வு உங்களுக்கு மட்டுமல்ல, நிறைய பேருக்கு இப்போது இருக்கிறது. ஏதோ ஓர் ஆபத்து வரப்போகிறது என்றால் நம் உடலில் ஓர் அலாரம் அடித்து அதிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆனால், இன்றைய சூழலில் பெரும்பாலானவர் களுக்குள் அடிப்பது தவறான அலாரம். அது நம்மைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு நம்மை தேவையற்ற குழப்பங்களுக்கும் சிந்தனைகளுக்கும் ஆட்படுத்திக்கொண்டேதான் இருக்கும். இப்போதைய சூழலில் பலரும் எதிர்கொள்கிற உணர்வு இது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

உண்மையான அலர்ட்டுக்கும் இதுபோன்ற தவறான அலர்ட்டுக்கும் வித்தியாசம் உண்டு. இது தவறான அலர்ட் என்பதை நம்புங்கள். இப்போதைய சூழலில் இத்தகைய எண்ணங்கள் தேவையில்லை, இவை உண்மையுமில்லை. இந்த உணர்வு வரும்போதெல்லாம் உங்கள் எண்ணங்களைத் திசைத்திருப்பக் கற்றுக்கொள்ளுங்கள்.

`நான் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உள்ளேன்' என்று அடிக்கடி உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். அப்போதுதான் மனது அதை நம்பி, தவறாக ஒலிக்கும் அலாரத்தை ஆஃப் செய்யும்.

கொரோனா குறித்த செய்திகளை, தகவல்களை அளவுக்கதிகமாகப் பார்க்காதீர்கள். உங்களுக்கே கொரோனா பாதித்திருந்தாலும் அது தொடர்பாக யாரிடமும் புலம்பாதீர்கள். நெகட்டிவ் உணர்வுகளைப் பகிராதீர்கள். கொரோனா பாதித்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு இப்படிப்பட்ட உணர்வுகள் இருக்கலாம். பிறகு அவற்றிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள். பொதுவாக, நம் உடலில் தலை முதல் பாதம் வரை ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொருவித வலி இருக்கலாம். கொரோனா காலத்தில் அந்த வலியை ஆபத்தாக நினைத்து இன்னும் ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்திருப்போம். அப்படி ஆழ்ந்து கவனிப்பதால்தான் நமக்குப் பதற்றம் அதிகரிக்கிறது. அந்த ஆழ்ந்த கவனிப்பிலிருந்துதான் உங்கள் மனதை திசைத்திருப்ப வேண்டும். ஒரு வாரம், பத்து நாள்களுக்குள் இது தற்காலிகப் பதற்றம் என்பதையும் உணர்வீர்கள்.

மன அழுத்தம்
மன அழுத்தம்

மனதைத் திசைத்திருப்ப உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யுங்கள். நகைச்சுவை காட்சிகளைப் பாருங்கள். எதிலும் விருப்பமில்லை என்றால் தூங்கிவிடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்துகொண்டு திரும்ப திரும்ப ரத்தப் பரிசோதனை செய்வது, நுரையீரலை ஸ்கேன் செய்வது எனப் பதற்றப்படுவதற்குப் பதில் மனதை ரிலாக்ஸ் செய்யும் விஷயங்களைச் செய்து பழகுங்கள். நெகட்டிவ் சிந்தனை மேலோங்கும்போது உங்கள் ஐந்து உணர்வுகளையும் நல்ல விஷயங்களை நோக்கித் திருப்புங்கள். நல்ல விஷயத்தைக் கேட்பது, நல்லதைப் பார்ப்பது, கைகளைக் குளிர்ந்த நீரிலோ, வெதுவெதுப்பான நீரிலோ கழுவுவது எனத் தூண்டிவிடும்போது உங்கள் மனதானது உள்ளுக்குள் நடப்பவற்றைக் கவனிக்காமல் வெளி உலகத்தைக் கவனிக்க ஆரம்பிக்கும். பயம் விலகும்.

இந்த எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரும்பத் திரும்ப கவனிக்க ஆரம்பித்தால் இவை நிரந்தரமாகி பதற்றக் கோளாறாக மாறலாம். எனவே, சட்டென மனதை மடைமாற்றி, இதிலிருந்து வெளியே வரப் பழகினால் சீக்கிரமே இதிலிருந்து மீள்வீர்கள்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!