Published:Updated:

Covid Questions: கொரோனாவிலிருந்து குணமான பிறகும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள்; நிஜமா, பிரமையா?

Covid Questions ( AP Illustration/Peter Hamlin )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid Questions: கொரோனாவிலிருந்து குணமான பிறகும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள்; நிஜமா, பிரமையா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:
Covid Questions ( AP Illustration/Peter Hamlin )

என் கணவருக்கு வயது 56. மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதித்து மீண்டு வந்தார். அதன் பிறகு உடலில் நிறைய பிரச்னைகள் வருவது போல உணர்வதாகச் சொல்கிறார். சாதாரண வயிற்றுவலி, தலைவலி, அஜீரணம் என எது வந்தாலும் அது கொரோனாவின் பின் விளைவுதான் என்று அழுத்தமாக நம்புகிறார். கோவிட் தொற்றிலிருந்து குணமானவர்களுக்கு இப்படியெல்லாம் நிறைய பிரச்னைகள் வருவதாக விவாதிக்கிறார். சின்னச் சின்ன பிரச்னைகளைக்கூட கொரோனாவின் பின்விளைவாக யோசிப்பது உண்மையாக இருக்குமா அல்லது இது அவரது மன பிரமையாக இருக்குமா?

- ரேகா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் முத்துச்செல்லக்குமார்
மருத்துவர் முத்துச்செல்லக்குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.

``உங்கள் கணவர் உணர்வதாகச் சொல்கிற அத்தனை பிரச்னைகளும் உடல், மனம் இரண்டும் சார்ந்தவையாக இருக்கலாம். அவருக்கு இருப்பதாகச் சொல்லியிருக்கும் வயிற்றுவலி, அஜீரணம் போன்ற பிரச்னைகள் கோவிட் தொற்றிலிருந்து குணமான பிறகு சிலருக்கு வருகின்றன. குறிப்பாக, கொரோனா பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருந்து, ஆக்ஸிஜன் உதவியோடு சிகிச்சை பெற்றுத் திரும்பியவர்களுக்கு, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணைநோய்கள் உள்ளவர்களுக்கெல்லாம் இப்படி வர வாய்ப்புகள் அதிகம். ஹைப்பாக்ஸியா எனப்படும் ஆக்ஸிஜன் குறைந்தநிலைக்குப் போனவர்களுக்கு குணமான பிறகும் நுரையீரல் பாதிப்பு தொடர்கிறது. வறட்டு இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், படியேறுவதில் கஷ்டம் போன்றவையும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமிலம் மேலேறி வருகிற Gastroesophageal reflux disease (GERD) எனப்படுகிற பிரச்னையும் வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, வாந்தி போன்ற தொந்தரவுகள் இருக்கின்றன. இன்னும் சிலர் கோவிட் தொற்றுக்காக நீண்ட நாள்கள் மருந்துகள் எடுத்துக்கொண்டிருப்பார்கள். கபசுர குடிநீர் தொடங்கி, காய்ச்சலுக்கான மாத்திரைகள், ஆன்டிபயாடிக் வரை அது எதுவாகவும் இருக்கலாம். இதனால் டிரக் இண்டியூஸ்டு கேஸ்ட்ரோ இன்டெஸ்ட்டினல் டிஸ்ஆர்டர்ஸ் (Drug-induced Gastrointestinal Disorders) வரக்கூடும். வயிற்றெரிச்சல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறையும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவிட் தொற்று உறுதியானதுமே பெரும்பாலானவர்களுக்கும் நோய் குறித்த பயம் வந்துவிடுகிறது. அந்த பயம் பதற்றத்தைக் கூட்டுகிறது. அதனாலும் அசிடிட்டி பிரச்னை வரக்கூடும். கொரோனா தொடர்பான செய்திகளைப் படிப்பது, காட்சிகளைப் பார்ப்பது போன்றவையும் காரணம்.

இப்படிப்பட்ட அவதிகளை உணர்பவர்கள் அதீதமாக பயப்படவும் வேண்டாம். அலட்சியமாக இருக்கவும் வேண்டாம். மருத்துவரை அணுகி, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். எளிதான உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கலாம். நிறைய நீர் அருந்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனையோடு வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளுக்கான சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். நிறைய காய்கறிகள், கீரை, சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். போதிய ஓய்வும் தேவை.

Covid 19 Outbreak
Covid 19 Outbreak

உங்கள் கணவருக்கு இருப்பவை போஸ்ட் கோவிட் பாதிப்புகளாகவும் இருக்கலாம் அல்லது அவர் நோயைப் பற்றி அதிகம் சிந்தித்துக்கொண்டே இருப்பதன் விளைவாகவும் இருக்கலாம். அறிகுறிகள் எப்படியிருந்தாலும் நீங்களாக அது குறித்து ஒரு முடிவுக்கு வராமல், மருத்துவரை அணுகி, அவர் சொல்லும்படி நடந்துகொள்வதுதான் சிறந்தது."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!