இன்றைய சூழலில் உலகம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. ஒரு ஸ்மார்ட்ஃபோன் இருந்தாலே போதும். உலகின் எந்த மூலையிலிருக்கும் எந்தவொரு பொருளையும் வாங்கிவிட முடியும். விரும்பிய பொருளை மட்டுமல்ல, உணவையும்கூட இருக்கும் இடத்துக்கே வரவழைத்துவிட முடியும். உலகம் சுருங்கிவிட்டது. உண்மைதான், நவீன யுகம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பல படிகள் முன்னேறிவிட்டது.

பல வேலைகளை உட்கார்ந்த இடத்திலேயே முடித்துக்கொள்கிறோம். எல்லாவற்றுக்கும் மொபைல் போனையே நாடுகிறோம். விளைவு, நடைப்பயிற்சி குறைந்துவிட்டது. பக்கத்துத் தெருவில் உள்ளவரைக்கூட நடந்து சென்று பார்த்து, பேசுகிற வழக்கத்தைக் குறைத்துவிட்டோம். உணர்வுகள் எதுவாயினும் அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டு, ஒதுங்கி நிற்கிறோம். விளைவு, உடற்பருமன், அதீத உணர்வுகள், மனவெழுச்சி போன்றவற்றுக்குள் சிக்கிக்கொள்கிறோம்.
முன்னோர்கள் வகுத்துக்கொடுத்த வாழ்க்கைமுறையைத் தொலைத்துவிட்டோம். இதனால் பல நோய்கள் தாக்கும் அபாயத்துக்குள் சிக்கிக்கொண்டுள்ளோம். அவற்றில் ஒன்று, மாரடைப்பு!

`ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதுக்குப் பல காரணங்கள் உண்டு’ என்கிறார் இதயநோய் நிபுணர் வி.சொக்கலிங்கம். மேலும், மாரடைப்புக்கான அறிகுறிகள் என்னென்ன, எந்த வயதிலிருந்தே உடல்நலப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும், நெஞ்சுவலிக்கு நாக்குக்கு அடியில் நைட்ரேட் மாத்திரை வைப்பது ஏன் போன்ற கேள்விகளுக்கும் இங்கே விரிவாகப் பதிலளிக்கிறார்.
மாரடைப்புக்கான அறிகுறிகள் என்னென்ன?
``மாரடைப்புக்கான சாத்தியங்கள் 100% உள்ள ஒருவருக்கு இந்த அறிகுறிகள் தென்படலாம்: நடக்கும்போதும், படிக்கட்டுகளில் நடக்கும்போதும், சிலருக்கு உணர்ச்சிவசப்பட்டுப் பேசும்போதும் வலி ஏற்படும். இதுமட்டுமன்றி அதிகமான உணவு உட்கொண்ட பின்னர் நடக்கும்போதும்கூட வலி ஏற்படும். இதை `அஞ்சைனா (Angina)' என்போம். இந்த அஞ்சைனா அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

அவர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர், சம்பந்தப்பட்டவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பைக் கண்டறிந்து, ரத்தக்குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பைக் கண்டறிந்து, அதற்கேற்ற மாத்திரைகளைப் பரிந்துரைப்பார். அதை உட்கொள்ளும்போது மாரடைப்பிலிருந்து நிவாரணம் பெற முடியும்.
சிலருக்கு சைலன்ட்டாக மாரடைப்பு வரலாம். இவர்களுக்கு வலி ஏற்படுவதே தெரியாது. இவர்கள் தோள்பட்டையில் வலியை உணரலாம். வாயுத் தொந்தரவு, மூச்சுத்திணறல், படபடப்பு மற்றும் சட்டென்று வியர்ப்பது போன்றவை தென்பட்டால் அது மாரடைப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம். அவர்கள் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

நெஞ்சுவலிக்கு நாக்குக்கு அடியில் மாத்திரை வைப்பது ஏன்?
அஞ்சைனா அறிகுறிகள் ஏற்பட்டால் அல்லது முதல் அட்டாக் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு நெஞ்சு வலி வரும்போது நாக்குக்கு அடியில் வைக்கும் மாத்திரைதான் `நைட்ரேட்’ (Nitrate tablets). அது ஐந்து மில்லி கிராம் இருக்கும். நாக்குக்குக் கீழே வைத்தவுடன் அரை நிமிடத்தில் கரைந்துவிடும். உடனே ரத்தத்தில் சென்று கலந்துவிடும் என்பதால்தான் நாக்குக்கு அடியில் இந்த மாத்திரையை வைக்கிறோம்.
இந்த மாத்திரையானது இதய ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து, இதயத் தசைகளுக்கு ரத்தவோட்டத்தை அதிகரிக்கும். இதனால் வலி குறையும். பிற மருந்துகள் எல்லாம் வயிற்றுக்குப்போய் ஜீரணமாகி பின்னரே ரத்தத்தில் கலக்கும். நரம்பில் போடப்படும் ஊசியான `இன்ட்ராவைனஸ் (Intravenous)'க்கு இணையாது இந்த நைட்ரேட் மாத்திரை.

எந்த வயதில் பரிசோதனை மேற்கொள்ளலாம்?
கடந்த 51 வருடங்களாக இதயநோய் நிபுணராகப் பணியாற்றி வருகிறேன். நான் மருத்துவத் துறையில் நுழைந்து பணியாற்றும்போது 70, 80 வயதுக்காரர்களுக்குத்தான் மாரடைப்பு வந்தது. அது 60 ஆகக் குறைந்து, 40 ஆகக் குறைந்து தற்போது 20 - 25 வயதுள்ள ஆண், பெண்களுக்கே மாரடைப்பு ஏற்படுகிறது.
இது மருத்துவ ரீதியாகக் கண்டறியப்பட்டுள்ள உண்மை. 20 வயதைக் கடந்துவிட்டாலே பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஒவ்வொரு ஐந்து வருட இடைவெளியில் பிளட் சுகர், கொலஸ்ட்ரால், எக்ஸ்ரே, இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.
இந்தியாவில்தான் மாரடைப்பு, சர்க்கரைநோய், மூளையில் ஏற்படும் வலிப்பு, புற்றுநோய் போன்றவற்றால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்களைக் கட்டுக்குள் கொண்டுவர அனைவருமே முன்வர வேண்டும். இந்த விழிப்புணர்வுத் தகவல்கள் அனைவரையும் சென்று சேரும்போது, மாரடைப்பு இல்லா சமுதாயத்தை நம்மால் உருவாக்க இயலும்” என்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.