வெயில் காலத்தில் 20 அடி தூரத்துக்குப் பரவும் கொரோனா வைரஸ்... எப்படி தப்பிப்பது? #ExpertOpinion

தற்போது கோடைக்காலம் என்பதால் காற்றில் ஈரப்பதமின்றி வறட்சி நிலவுகிறது. இதனால் மனிதனிடமிருந்து வெளிப்படும் திரவத்துளிகள் மெல்லிய தூசுப்படலமாக மாறி அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்புள்ளது.
கொரோனா வைரஸ் நாள்தோறும் ஒரு படிப்பினையை அளித்து வருகிறது. நாம் கணிக்கும் எந்த வரையறைக்குள்ளும் அது நிற்பதில்லை. கொரோனா வைரஸ் மனிதனின் தும்மல், இருமலில் வெளிப்படும் நீர்த்துளிகள் (Droplets) மூலம் பரவுகிறது. அதனால் 6 அடி தூரம் தனி மனித இடைவெளி அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

தற்போது அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, `மனிதனின் தும்மல், இருமலில் வெளிப்படும் நீர்த்துளிகள் மெல்லிய தூசுப்படலம்போல மாறினால் (Aerosol), கொரோனா வைரஸ் கிருமியால் 20 அடி தூரம்கூடப் பரவ முடியும்.
குளிர்ப்பிரதேசங்களில் ஈரப்பதம் அதிகமாகக் காணப்படுவதால் மனிதனிலிருந்து வெளிப்படும் நீர்த்துளிகளால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அது தூசுப்படலமாக மாறாது. ஆனால், வெப்ப மண்டல நாடுகளில் தூசுப்படலமாக மாறிப் பரவும்' என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நமக்கு விளக்கமளித்தார் ரேடியாலஜி மருத்துவர் ஆனந்த்குமார்.
"கோடைக்காலம் வந்தால் கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தோம். எத்தகைய கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் வெயிலுக்கு உண்டு என்று நினைத்தோம்.
ஆனால், தமிழகத்தில் கோடைக்காலத்தின் உச்சநிலை ஏற்பட்டபோதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையாமல், அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்குக் காரணம் கொரோனா வைரஸ் மெல்லிய தூசுப்படலமாக மாறிப் பரவுவதே.
வைரஸ் பரவும் முறையும் தன்மையும் மாறிக்கொண்டேயிருப்பதால் முகக்கவசம் மட்டுமே நோய்ப் பரவுவலின் வாய்ப்பைக் குறைக்கும்.டாக்டர் ஆனந்த்குமார்
நீர்த்துளிகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவும்போது அந்த வைரஸ் முதலில் தொண்டைப் பகுதியைத்தான் தாக்கும். அதனால் முதலில் இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றி அதற்குப் பிறகுதான் நுரையீரலில் தொற்று ஏற்படும்.
ஆனால், கொரோனா வைரஸ் மெல்லிய தூசுப்படலத்தின் மூலம் பரவும்போது நேரடியாக நுரையீரலைத் தாக்கும். அதனால் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே அவர்களுக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருக்கும். சமீப நாள்களாக, நுரையீரல் தொற்று முதலில் ஏற்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது கோடைக்காலம் என்பதால் காற்றில் ஈரப்பதம் இன்றி வறட்சி நிலவுகிறது. இதனால் மனிதனிடமிருந்து வெளிப்படும் திரவத்துளிகள் மெல்லிய தூசுப்படலமாக மாறி அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்புள்ளது.
இதற்கு முன்னர், ஏ.சி பயன்படுத்தினால் வைரஸ் பரவலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஏ.சிக்குப் பதில் மின்விசிறிகளை இயக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்தக் காலநிலையில் வைரஸின் பரவலைத் தடுக்க குறிப்பிட்ட வெப்பநிலையில் இயக்கப்படும் ஏ.சியே சிறந்தது. ஏ.சியில் இருக்கும்போது திரவத்துளிகளாக மட்டுமே வைரஸ் பரவும். அதனால் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றினால் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

வெயில் நேரத்தில் மின்விசிறியைப் பயன்படுத்தும்போது திரவத்துளிகள் மெல்லிய தூசுப்படலமாக மாறி அந்தப் பகுதி முழுவதும் வைரஸை சிதறடித்துவிடும். அந்த நேரத்தில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றினாலும் வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க முடியாது. சிலர் டேபிள் ஃபேன்களை முகத்துக்கு நேராக வைத்துப் பயன்படுத்துவார்கள். அதுபோன்ற செயல்களையெல்லாம் தற்போது நிறுத்திவிட வேண்டும்.
இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால், முகக்கவசம் மிகமிக இன்றியமையாதது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றினாலும் வீட்டைவிட்டு வெளியே இறங்கிவிட்டால் முகக்கவசம் கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும். சிலர், பெரியவர்களிடமும் மூத்த அதிகாரிகளிடமும் பேசும்போது மரியாதைக்காக முகக்கவசத்தை கீழே இறக்கிவிட்டுப் பேசுகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒன்று. வைரஸ் பரவும் முறையும் தன்மையும் மாறிக்கொண்டேயிருப்பதால் முகக்கவசம் மட்டுமே நோய்ப் பரவலின் வாய்ப்பைக் குறைக்கும்.

கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் என அனைத்தையும் காற்றோட்டமுள்ளவையாக மாற்ற வேண்டும். அவற்றில் எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் பொருத்துவதும் கூடுதல் பயனளிக்கும்" என்றார் அவர்.