Published:Updated:

தொடரும் கொரோனா வார்டு தற்கொலைகள்! காரணம் என்ன? - மனநல மருத்துவர்கள் விளக்கம்

Suicide
Suicide

இந்தக் கொரோனா தொற்று நமக்குச் சரியாகிவிடுமா என்ற பயத்தை விட, இதிலிருந்து மீண்ட பிறகு இந்த சமுதாயம் எப்போதும் போல நம்மை ஏற்றுக்கொள்ளுமா அல்லது ஒதுக்கி வைத்துவிடுமா என்றே பயமே முக்கிய காரணமாக உள்ளது அவர்களின் தற்கொலைக்கு!

'எனக்கு வாழவே புடிக்கல; இந்த உலகத்துல உயிரோட இருந்தாதானே எல்லா இன்ப, துன்பத்தையும் அனுபவிக்கணும்? தற்கொலை பண்ணிட்டு செத்துடலாம்போல இருக்கு' - வயது வித்தியாசமின்றி அனைவரும் கூறும் வார்த்தைகளாகிவிட்டன இவை!

suicide
suicide

பலர் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வாகவே தற்கொலை எண்ணத்தைக் கையிலெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். நிச்சயமாக இது ஆரோக்கிய மனநிலை அல்ல.

ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஓர் உயிர் தற்கொலையால் பறிபோகிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 12 - 29 வயதுக்குட்பட்டவர்களின் இறப்புகளுக்கு இரண்டாவது காரணமாகத் தற்கொலை அமைகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO).

WHO
WHO

அதுவும் இந்தக் கொரோனா லாக்டெளன் நேரத்தில் மக்களிடையே தற்கொலை எண்ணம் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து தற்கொலை! -சென்னையில் அதிர்ச்சி #Corona

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 50 வயதுடைய நபர், தனக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தின் காரணமாகக் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயதுடைய நபரும் தற்கொலை செய்துள்ளார். இதேபோல் இந்தியாவில் பல இடங்களில் உள்ள மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் தற்கொலைக்கு முயல்வதாகவும் அல்லது உட்சபட்ச மனஅழுத்தத்திற்கு ஆளாவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

corona
corona

தனக்கு ஏற்பட்ட நோய் குணமாகி இயல்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நம்பிக்கையிலேயே ஒவ்வொருவரும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் அந்த நம்பிக்கையைப் பாதியிலேயே உடைத்து தற்கொலை செய்யும் அளவிற்கு அவர்களைக் கொண்டு செல்வது எது என்பது குறித்து கொரோனா வார்டில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மனநல மருத்துவர் அபிராமியிடம் பேசினோம்.

`நேற்று அட்மிட்; இன்று விபரீத முடிவு!’ - சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொரோனா வார்டு அதிர்ச்சி

"கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் அதீத மன உளைச்சலுக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ள முக்கியக் காரணம் 'பயம்'. அதாவது இந்தக் கொரோனா தொற்று நமக்குச் சரியாகிவிடுமா என்ற பயத்தை விட, இதிலிருந்து மீண்ட பிறகு இந்தச் சமுதாயம் எப்போதும் போல நம்மை ஏற்றுக்கொள்ளுமா அல்லது ஒதுக்கி வைத்துவிடுமா என்றே பயமே அவர்களின் தற்கொலைக்கு பிரதான காரணமாக உள்ளது. ஏனென்றால் நாம் கொரோனாவை சாதாரண காய்ச்சலாக அணுகுவதற்கு பதிலாகத் தெரிந்தோ தெரியாமலோ அதை ஒரு தீண்டத்தகாத நோயாக, கிட்டத்தட்ட ஹெச்.ஐ.வி தொற்றுக்கு இணையான நோயாகவே அணுகிக்கொண்டிருக்கிறோம்.

மனநல மருத்துவர் அபிராமி
மனநல மருத்துவர் அபிராமி

கொரோனா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் தொற்று என்பதால் வேறு வழியில்லாமல் இதனால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவேண்டியுள்ளது. அவர்களைக் காணச் செல்லும் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் PPE முழுக் கவச உடையில் செல்லவேண்டியுள்ளது. இந்த அசாதாரணச் சூழலே அவர்களுக்கு ஒருவித அசௌகர்யத்தை ஏற்படுத்தலாம். நோய் நம்மிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவிவிடுமோ என்ற எண்ணமும் சிலருக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்தலாம்.

கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களைப் பாதிக்கும் மற்றொரு விஷயம் தனிமை. பலநாள்களாக குடும்பத்தினரைப் பிரிந்து இருக்கிறார்கள். உறவினர்கள், நண்பர்கள் யாரையும் நேரில் பார்த்துப்பேச முடியாத நிலை. தனிமை என்பது நாமாகவே எடுத்துக்கொண்டால் இனிமையாகத்தான் இருக்கும். அதுவே மற்றவர்கள் நம்மை வலிந்து தனிமையில் தள்ளும்போது அதைச் சமாளிப்பது ரொம்பவே கடினம்தான். இந்த இரண்டாவது வகை தனிமையில் இருக்கும் கொரோனா தொற்றாளர்கள் தாங்கள் தனிமையில் இருக்கும் நேரத்தில் தேவையில்லாத பல விஷயங்களைப் பற்றிச் சிந்தித்துக் கவலை கொள்கிறார்கள்.

Stress
Stress
pixabay.com

ஒருவேளை இந்த நோயிலிருந்து தாங்கள் குணமடைந்தாலும் இந்தச் சமுதாயம் நம்மை ஏற்றுக்கொள்ளுமா, முன்பு வேலை செய்த இடத்தில் மீண்டும் வேலை பார்க்க அனுமதிப்பார்களா, முன்புபோல் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்ச முடியுமா போன்ற பல கேள்விகள் அவர்களுக்கு அதீத மன உளைச்சலைத் தரலாம். ஏற்கெனவே மனநலப் பாதிப்புகள் இருப்பவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவர்கள் மேலும் பாதிக்கப்படலாம். இந்தக் காரணங்கள் எல்லாம் சிகிச்சையில் இருக்கும் ஒருவரைத் தற்கொலையை நோக்கித் தள்ளுகின்றன.

நாம் கொரோனாவை சாதாரணக் காய்ச்சலாக அணுகுவதற்குப் பதிலாகத் தெரிந்தோ தெரியாமலோ அதை ஒரு தீண்டத்தகாத நோயாக, கிட்டத்தட்ட ஹெச்.ஐ.வி தொற்றுக்கு இணையான நோயாகவே அணுகிக்கொண்டிருக்கிறோம்.
மனநல மருத்துவர் அபிராமி

இதிலிருந்து அவர்களை எப்படி மீட்கலாம்?

Corona virus
Corona virus

'புறக்கணிக்க வேண்டியது கொரோனா தொற்றைத்தானே தவிர கொரோனா தொற்றாளர்களை அல்ல' என்ற கருத்தை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும். மனநல ஆலோசனை தேவைப்படும் கொரோனா தொற்றாளர்களுக்குத் தகுந்த விதத்தில் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும். கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்குப் பொழுதுபோக்கிற்காக மொபைல், புத்தகம் போன்றவற்றைத் தரலாம். மொபைல், புத்தகம் இவற்றின் வழியாகவும் வைரஸ் பரவும் என்பதால் இது எந்த அளவிற்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. வசதிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றாளர்களின் பொழுதுபோக்கிற்குத் தொலைக்காட்சி வசதி செய்து தரலாம்.

`வயிற்றுக்குள் நுழைந்த குவார்ட்டர் பாட்டில்!’ -அறுவை சிகிச்சையின்றி காப்பாற்றிய அரசு மருத்துவர்

அவர்கள் ஏற்கெனவே மனநலப் பாதிப்பு இருப்பவர்களாக இருந்தால் அதற்கேற்ப மருந்துகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும். குழந்தைகளுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் 10 வயதிற்குக் கீழான குழந்தைகளைத் தனியே விடக்கூடாது. மருத்துவமனை தனிமைப்படுத்தலில் குழந்தையின் தாயோ அல்லது யாரேனும் உறவினரோ அருகில் இருக்க வேண்டியது அவசியம். கொரோனா, தனிமைப்படுத்துதல் பற்றி ஓரளவு புரிந்துணர்வு உள்ள குழந்தைகளைத் தனியே விடலாம். அவர்களின் பொழுதுபோக்கிற்கு வீடியோ கேம்ஸ் போன்றவற்றைப் பரிந்துரைக்கலாம்.

child
child

இவை எல்லாவற்றிக்கும் மேலான ஒரு மருந்து ஆறுதலும், நம்பிக்கையும். குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் வார்த்தைகளினால் சிகிச்சை அளிக்க வேண்டும். இதனால் அவர்களை மன உளைச்சல், வருத்தம் முதலியவற்றிலிருந்து காப்பாற்றாவிட்டாலும் தற்கொலை முடிவு, எண்ணத்திலிருந்து மீட்க முடியும்" என்றார் மனநல மருத்துவர் அபிராமி.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களையும் தாண்டி கொரோனா பரவலினால் ஏற்பட்ட ஊரடங்கு, தனிமை, வேலையிழப்பு, பணக்கஷ்டம் காரணமாகவும் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்!

ஊரடங்கில் வேலையில்லாமல் பணக் கஷ்டத்தில் இருந்த டிவி பிரபலம் மற்றும் மாடலான மன்மீத் க்ரேவால் சமீபத்தில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்தவர் 26 வயதான சேஜல் ஷர்மா. சீரியல் பிரபலமான இவர் தனக்கு ஏற்பட்ட பணக்கஷ்டம் மற்றும் தன் தந்தையின் உடல்நலப் பிரச்னையால் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டார்.

அபிநய்
அபிநய்

நடிகை வாணிஸ்ரீயின் மகனும், மருத்துவருமான அபிநய வெங்கடேஷ் கார்த்திக் சமீபத்தில் மரணமடைந்தார். இவர் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது. மருத்துவரான இவருக்கு நான்கு வயதில் ஒரு மகனும் பிறந்து எட்டே மாதங்கள் ஆன ஒரு மகளும் இருக்கின்றனர். அபிநய்யின் மனைவியும் மருத்துவரே! அகமதாபாத்தில் கொரோனா வார்டில் வேலை பார்த்து வந்த நர்ஸ் மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் மனதைப் பதற வைக்கிறது.

வாணிஶ்ரீயின் மகன் அபிநய் தற்கொலைக்குக் காரணம் என்ன... திருக்கழுக்குன்றத்தில் என்ன நடந்தது?

இந்த வரிசையான தற்கொலைகள் நமக்குச் சொல்லும் பாடம் ஒருவரின் மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் ஒவ்வொருவரின் சூழ்நிலைக்கு ஏற்ப பல காரணங்கள் இருக்கலாம் என்பதையே! மனஅழுத்தம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு 55 விநாடிக்கும் ஒரு மாணவர் தற்கொலைக்கு முயல்கிறார்.

Suicide
Suicide
pixabay

இந்தியாவில் 1.2% குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குச் சரியான மருத்துவ உதவி கிடைக்காத பட்சத்தில், அது உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னையாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்குத் தற்கொலை எண்ணம் எதனால் எல்லாம் ஏற்படலாம். அந்த எண்ணத்திலிருந்து மீள்வது எவ்வாறு? என்பதைப் பற்றி மனநல மருத்துவர் டி.வி.அசோகனிடன் பேசினோம்.

இதெல்லாம் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குப் பெரிய பிரச்னையா என்றுகூடத் தோன்றலாம். ஆனால் தற்கொலை செய்துகொண்டவரின் மனநிலையையும், சூழலையும் வைத்துப் பார்க்கும்போது அந்தச் சின்ன பிரச்னைகூட அவருக்கு எந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர முடியும்.
மனநல மருத்துவர் டி.வி.அசோகன்

தற்கொலை எண்ணம் ஏற்படக் காரணங்கள் என்னென்ன?

மனநல மருத்துவர் டி.வி.அசோகன்
மனநல மருத்துவர் டி.வி.அசோகன்

"தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்படலாம். மனஅழுத்தம், பணக்கஷ்டம், வேலையிழப்பு, குடும்பப் பிரச்னை, உடல்நலக் கோளாறு, உறவுச்சிக்கல் என்று எதுவேண்டுமானாலும் மனதளவில் பலவீனமாக இருக்கும் ஒருவருக்குத் தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஏன்...? மனதளவில் உறுதியாக இருப்பவர்களில் சிலரும் தற்கொலை செய்து இறந்ததையோ, தற்கொலைக்கு முயன்றதையோ கேள்விப்பட்டிருப்போம்.

பிரச்னைகளைச் சமாளிக்கும் திறன் குறைவதே தற்கொலை எண்ணம் வருவதற்கும், பலர் தற்கொலை செய்துகொள்வதற்குமான முக்கியக் காரணம். வெளியிலிருந்து பார்க்கும்போது சாதாரணமாகத் தெரியும் ஒரு பிரச்னைகூட ஒருவருக்குப் பூதாகரமாகத் தோன்றி அவரை தற்கொலை முடிவுக்குத் தூண்டியிருக்கலாம். ஒருவருக்கு ஏற்படும் மன உளைச்சலைக் கவனிக்காமல் விடும்போதும் அது அவரைத் தற்கொலை எண்ணத்துக்குத் தூண்டலாம்.

Stress
Stress

வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி, ஏமாற்றம் போன்ற நேரங்களிலும், வாழ்வின் லட்சியமாக நினைத்த ஒன்று கைகூடாமலோ, கைவிட்டோ போகும் தருணத்திலும் சம்பந்தப்பட்ட நபர் மன அழுத்தத்துக்கு உள்ளாகலாம். ஒருவர் அதிக அடக்குமுறைக்கு உட்படும்போதோ, பிறரால் அவமானப்படுத்தப்படும்போதோ, மற்றவர்களால் தான் முழுவதுமாக ஒதுக்கப்படுவதாகக் கருதும்போதோ ஏற்படும் மன அழுத்தம் அவரைத் தற்கொலை வரை கொண்டு செல்லலாம்.

ஏதேனும் உடல்நலக் குறைவால் ஒருவர் பாதிக்கப்பட்டு அதீத துன்பத்தை அனுபவிக்கும்போதும், சிலநேரங்களில் மரணம் பற்றிய பயமே கூட ஒருவரைத் தற்கொலைக்குத் தள்ளலாம். இதுபோல் ஒருவருக்குத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் காரணங்கள் எக்கச்சக்கமாக உள்ளன.

Breakup
Breakup

ஒரு நபர் காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, வேலையின்மை போன்ற ஏதேனும் ஒரு காரணத்தின் பேரில் தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். நம்மைப் பொறுத்தவரை இதெல்லாம் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குப் பெரிய பிரச்னையா என்றுகூடத் தோன்றலாம். ஆனால் தற்கொலை செய்துகொண்டவரின் மனநிலையையும், சூழலையும் வைத்துப் பார்க்கும்போது அந்தச் சின்ன பிரச்னைகூட அவருக்கு எந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர முடியும்.

தற்கொலை எண்ணத்திலிருந்து எவ்வாறு மீளலாம்?

Stress
Stress
Pixabay

மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பே. நாம் அதிலிருந்து வெளிவருவதற்கான வழியைத்தான் தேட வேண்டுமே தவிர, வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

முதலில் ஓர் எண்ணத்தை மனதில் தெளிவாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா, லாக்டெளன் பிரச்னைகள் என்றாலும் சரி, பணக்கஷ்டம், உறவுச்சிக்கல் போன்ற மற்ற பிரச்னைகள் என்றாலும் சரி, இவை எல்லாம் எல்லாருக்கும் பொதுவானவையே.

`இன்சோம்னியா பிரச்னையால் தூக்கத்தைத் தொலைத்தவரா நீங்கள்?'- நிபுணர் தரும் தீர்வுகள்!

பிரச்னைகளைச் சந்திக்காத மனிதர்களைப் பார்க்கவே முடியாது. ஒவ்வொருவரும் தங்களின் வயது, சூழ்நிலை, மனநிலைக்கேற்ப ஏதாவதொரு பிரச்னையைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். என் வாழ்க்கையில் பிரச்னையே வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தும் சக்தி நம் யாரிடமும் இல்லை. ஆனால் நமக்கு வரும் பிரச்னைகள் நம் மனநிலையைப் பாதிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவெடுக்கும் வாய்ப்பு நமக்கு உள்ளது. பிரச்னைகளே இல்லாத வாழ்க்கை வெற்றிகரமானது இல்லை. அந்தப் பிரச்னைகளைச் சமாளித்து மீண்டுவந்து எப்படி வெற்றிகரமாக வாழ்கிறோம் என்பதிலேயே நம் திறமை இருக்கிறது.

relax
relax

தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட மற்றொரு தீர்வு நேர்மறையான எண்ணங்களும், வார்த்தைகளும். மரணத்தின் வாசல்வரை சென்றவரை கூட நம்பிக்கையை ஏற்படுத்தும் வார்த்தைகளால் உயிர்ப்பிக்கலாம் என்பார்கள். எனவே நம் எண்ணங்களையும், வார்த்தைகளையும் எல்லா நேரங்களிலும் நேர்மறையாகவே வைத்துக்கொள்ள வேண்டும்.

நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நேர்மறையாகச் சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு ஏமாற்றம், தோல்விகளைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையையும் பிரச்னைகளைச் சமாளிக்கும் திறனையும் மேம்படுத்திக்கொள்ளக் கற்றுக்கொடுக்க வேண்டும். இவையெல்லாம் தற்கொலை எண்ணத்திலிருந்து நம்மை மீட்பதுடன் தற்கொலை எண்ணம் நமக்கு ஏற்படாமல் இருக்கவும் வழிவகுக்கும்" என்றார் மனநல மருத்துவர் டி.வி.அசோகன்.

Happy
Happy

'தற்கொலை' செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் அந்த ஒருநொடியைக் கடந்துவிட்டால் போதும். அழகான வாழ்க்கை உங்களுக்காகக் காத்திருக்கும். எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இந்த உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களையும்விட உங்களின் உயிர்தான் உங்களுக்கு முக்கியம். இதை மனதில் கொண்டால்போதும். தற்கொலை எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு