Published:Updated:

கொரோனா எச்சரிக்கை; முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க முடியுமா? எப்படி?

தொடுதல்
தொடுதல்

எப்போதும் கைகளில் கைக்குட்டைகளை வைத்திருக்கலாம். இதன் மூலம் நேரடியாக முகத்தைத் தொடுவது குறையும்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே தற்காப்பு நடவடிக்கைகள் பலவற்றை உலக சுகாதார நிறுவனம் வழங்கி வருகிறது. அவற்றுள் ஒன்று நம் கைகளால் முகம், வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றைத் தொடுவதைத் தடுக்க வேண்டும் என்பது. நம் கைகளால் அனைத்து வேலைகளையும் செய்கிறோம், நம் உடலில் உள்ள மற்ற பாகங்களை விட கைகளே பொருள்கள் அல்லது மனிதர்களுடன் தொடர்பில் இருப்பது. கூட்டமான இடங்களில் மற்றவர்களைத் தொடர்பு ஏற்படுத்தாமல் கடக்க வேண்டும் என்றால் கைகளை உயர்த்திக்கொள்வோம். அதனாலேயே கைகளின் மூலம் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கைகளை முகத்தின் அருகே கொண்டு செல்வதனைத் தவிர்ப்பதன் மூலம் நோய்த் தொற்றுக்கான வாய்ப்பைக் குறைக்கலாம் என அறிவுறுத்துகின்றன சுகாதார நிறுவனங்கள்.

முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்
முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்

கைகளால் முகத்தைத் தொடக் கூடாது, அவ்வளவு தானே என்று தோன்றும். ஆனால், நாம் நினைக்கும் அளவுக்கு அது எளிது அல்ல. நமக்குத் தெரியாமலேயே அனிச்சையாக நாம் நம் முகங்களைத் தொடுகிறோம். அந்தச் செயல் நடைபெறுவதைப் பற்றிக் கவனிப்பது நமக்கு முக்கியம் இல்லை என்பதால் நமக்கு அது தெரியவில்லை. நம் கைகளைக்கொண்டு எந்த வேலையும் செய்யாதிருக்கும் பட்சத்தில் ஒரு சராசரி நபர் ஒரு மணி நேரத்திற்கு 23 முறை முகத்தைத் தொடுகிறார். சராசரியாக 2.5 நிமிடத்திற்கு ஒரு முறை நாம் நம் முகத்தைத் தொடுகிறோம். நாம் இதைக் கவனித்து, இனி முகத்தைத் தொடக் கூடாது என நினைக்கும் போதுதான் அதிகமாக முகத்தைத் தொட நேரிடும் என்கிறது ஓர் ஆய்வு.

5 வருடங்கள்; 13 லட்சம் கொலைகள்; மரண ஓலத்தின் சாட்சியம்... ஆஸ்விச் வதைக்கூடம்!

முகத்தைத் தொடுதல் என்பது அனிச்சை செயல் என்றாலும், நம் மனநிலைக்கும் இந்தச் செயலுக்கும் தொடர்பிருக்கிறது என்கிறது அறிவியல் ஆய்வு ஒன்று. நாம் பிறந்த பின்தான் என்றில்லை, நாம் பிறக்கும் முன் கருவில் இருக்கும்போதே கைகளால் முகத்தைத் தொடுவது என்பது இயல்பாக நடக்கின்ற ஒரு செயலாகவே இருக்கிறது. 24 வாரங்கள் முதல் 36 வாரங்கள் வரை ஆன கர்ப்பிணிப் பெண்களிடம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தன் தாய் சோகமாகவோ அல்லது மன அழுத்தத்திலோ இருக்கும்போது அவர்கள் வயிற்றில் இருக்கும் கருவானது தன் இடது கையை முகத்தின்மீது வைக்கிறதாம்.

தொடுதல்
தொடுதல்

கருவிற்குள் இருக்கும் சிசு குறித்து மட்டுமல்ல, வளர்ந்த சிலரிடமும் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. மன அழுத்தம் தரக்கூடிய வகையிலான ஒலியை ஒருவர் கேட்கும்போது அல்லது மன அழுத்தம் தரக் கூடிய செயலைச் செய்யும்போது, அவர்களுக்கு தங்களை அறியாமல் தங்கள் இடது கையானது முகத்தின் இடப்பக்கத்தைத் தொடுகிறது. இதன் மூலம் அந்த நபருக்கு ஏற்படும் உணர்ச்சிகளைச் சமன் செய்ய முற்படுகிறது மூளை.

நம் மூளையில் உணர்ச்சிக்கான பகுதியானது வலப் பக்கத்தில் இருக்கும். வலப் பக்க மூளைக்கான செய்கைகள் யாவும் இடப்பக்கமே செய்யப்படுகின்றன. அதனால்தான் இடப் பக்க முகத்தைத் தொடுவதன் மூலம் உணர்ச்சிகளைச் சமன் செய்ய முயல்கிறது.

தொடுதல்
தொடுதல்

இந்தப் பழக்கமானது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் உண்டு. பூனை மற்றும் நாய் போன்ற விலங்குகள் தன் முன்னங்கால்களின் மூலம் மூக்கைத் தொடுவதைக் கவனித்திருக்கிறீர்களா. மனிதர்களைப் போலவே சிம்பன்சி, உர்ராங்உடான் மற்றும் கொரில்லா ஆகிய விலங்குகளுக்கும் முகத்தை அடிக்கடி தொடும்பழக்கம் இருக்கிறது. நாம் பதற்றமாக இருக்கும் போதும் அடிக்கடி முகத்தைத் தொடுவோம். உதாரணத்திற்கு, கிரிக்கெட் மேட்சின் கடைசி நிமிடப் பரபரப்பைச் சொல்லலாம். அது போன்ற பதற்றமான நேரங்களில் முகத்தைத் தொடுவது நம் பதற்றத்தைக் குறைக்க உதவுகிறது.

கைக்குட்டைகளைப் பயன்படுத்தலாம்
கைக்குட்டைகளைப் பயன்படுத்தலாம்

இவையனைத்தையும் மீறி நாம் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதால்தான் அதையும் அறிவிப்பில் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். கைகளால் முகத்தைத் தொடாமல் தவிர்க்க சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.

  • எப்போதும் கைகளில் கைக்குட்டைகளை வைத்திருக்கலாம். இதன் மூலம் நேரடியாக முகத்தைத் தொடுவது குறையும்.

  • கைகளுக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருக்கலாம்.

  • மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அதைக் குறைத்துக்கொண்டாலே கைகள் முகத்திற்குச் செல்வதைப் பாதிக்கும் மேல் குறைத்துக்கொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு