Published:Updated:

கொரோனா: எச்சரிக்கை உணர்வு அச்சமாக மாறினால் சமாளிப்பது எப்படி? - மனநல மருத்துவர் ஆலோசனை #FightCovid19

கொரோனா பயம்
கொரோனா பயம் ( pixabay )

`நம்மைச் சுற்றியுள்ள இவர்களுக்கு எல்லாம் நோய் பாதிப்பு இருக்குமோ, ஒருவேளை நமக்கும் ஏற்பட்டால் நம்மால் அதிலிருந்து மீளமுடியாமல் போய்விடுமோ' போன்ற தேவையில்லாத அச்சங்கள் உங்கள் மனதை அழுத்திக்கொண்டிருக்கலாம்.

சாலையில் நடந்து போகும்போதும், பேருந்துகளில் செல்லும்போதும் உடன் பயணிப்பவர்களைக் கடந்த சில நாள்களாகச் சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கிவிட்டன நம் கண்கள். பத்தடி தூரத்திலிருக்கும் ஒருவர் இருமினாலோ, தும்மினாலோகூட அந்தச் சத்தம் அடங்கும்வரை கஷ்டப்பட்டு மூச்சைப் பிடித்துக்கொள்கிறோம்.

கொரோனா பயம்
கொரோனா பயம்

நம் உடலின் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தால்கூட, `இது அதுவாக இருக்குமோ?' என்ற பயம் கலந்த சந்தேகம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. இவை எல்லாவற்றுக்கும் காரணம்... தற்போது உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் கோவிட்-19 கொரோனா வைரஸால் நம் மனதில் எழுந்துள்ள கவலையே!

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டனர்; மால்கள், ஜிம்கள், தியேட்டர்களைத் தற்காலிகமாக மூடிவிட்டனர். கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலைபார்க்கச் சொல்கிறார்கள். இவையெல்லாம் நம்மை அச்சத்தின் உச்சியில் கொண்டுசென்று நிறுத்துகின்றன.

கொரோனா
கொரோனா

ஆனால, இவையெல்லாம் தற்காப்பு நடவடிக்கைகள்தானே தவிர, இவற்றைப் பார்த்து பீதியடைந்தோ, கவலைப்பட்டோ நம் நிம்மதியைத் தொலைக்க, மனநலனைக் கெடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

கொரோனா வைரஸ் குறித்து நமக்குள் எழும் பயம் தேவைதானா? கொரோனாவை வெல்ல முதலில் கவலையை விட்டொழிப்பது எப்படி? மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் பேசினோம்.

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

"தற்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்றுநோய். இதை யாரும் மறுக்க முடியாது. எனவே, நம்மிடையே இதைப் பற்றிய கவலையும் பயமும் ஏற்படுவது இயல்புதான்.

நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு விஷயத்தைப் பற்றிப் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருக்கும்போது நம் மனம் இயல்பாகவே அதைப்பற்றி யோசிக்கத் தொடங்கும். அது அந்த விஷயத்தின் தன்மையைப் பொறுத்து பயமாகவோ, கவலையாகவோ நம் மனதில் உருவாகும்.

தற்போது பெரும்பாலானோருக்கு மனதில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்த இந்தக் கவலையும் பயமும் தேவைதானா? என்னைக் கேட்டால், நிச்சயமாக அவசியம் என்று சொல்லுவேன். நாம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கவலைப்படும்போதுதான் அதைப் பற்றி அதிகம் யோசிக்கத் தொடங்குவோம்.

கொரோனா
கொரோனா
கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!  #FightCovid-19

மேலும் அதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி என்றும் அறிந்துகொள்வோம். பயம் ஏற்படாதவரை ஒரு விஷயத்தின் தீவிரத்தன்மை நமக்குப் புரிவது கொஞ்சம் கடினம்தான். எனவே, தற்போது கொரோனா விஷயத்தில் நமக்கு ஏற்பட்டுள்ள பயம் அவசியமானது.

ஆனால், அந்த பயம் நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க வேண்டுமே தவிர நமக்குத் தேவையில்லாத தலைவலியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துவிடக் கூடாது.

கொரோனா பயம்
கொரோனா பயம்

சிலர் இந்த விஷயங்களில் கற்பனையுடன் கவலைகொள்வார்கள். `நம்மைச் சுற்றியுள்ள இவர்களுக்கு எல்லாம் நோய் பாதிப்பு இருக்குமோ, ஒருவேளை நமக்கும் ஏற்பட்டால் நம்மால் அதிலிருந்து மீளமுடியாமல் போய்விடுமோ' போன்ற தேவையில்லாத அச்சங்கள் அவர்கள் மனதை அழுத்திக்கொண்டிருக்கும். அவர்கள் பாசிட்டிவிட்டியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

'நமக்கு பாதிப்பு ஏற்படாது, ஒருவேளை ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டுவிடலாம், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் டேட்டா அந்த நம்பிக்கையைத் தரும் விதமாகத்தான் இருக்கிறது' என்று நினைக்க வேண்டும். அநாவசியமாகக் கவலைகொள்வது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வாகாது.

பயம்
பயம்
`தும்மல் கொரோனாவின் அறிகுறியா?!' - சாதாரண சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள்

கொரோனா வைரஸ் குறித்து நிறைய தகவல்கள் தற்போது இணையதளத்தில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் உண்மையான தகவல்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். சிலருக்குக் கொரோனா பற்றிய செய்திகள் பயத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் வேண்டுமானால் கொரோனா பற்றி பயத்தை ஏற்படுத்தக்கூடிய செய்திகளைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்.

ஆனால், அனைவரும் கொரோனா குறித்து நடைமுறைத் தகவல்களை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை உங்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் அருகில் இருப்பவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருக்காமல் மருத்துவமனைக்குச் செல்வது மேலானது" என்றார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

மனநலம்
மனநலம்

கொரோனா வைரஸ் விஷயத்தில் மக்களின் மனநலத்தைக் கருத்தில்கொண்டு உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளப் பக்கத்தில் மனநலம் தொடர்பான சில உளவியல் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அவை இதோ...

* கோவிட்-19 கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவக்கூடிய ஒரு தொற்றுநோய். இதை எந்தவோர் இனத்துடனும் தேசியத்துடனும் இணைக்க வேண்டாம். அனைவரும் மற்றவர்கள் மீது அனுதாபத்துடன் இருங்கள்.

* கொரோனா வைரஸ் பற்றி உங்களுக்குக் கவலை அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் செய்திகளைப் பார்ப்பது, படிப்பது அல்லது கேட்பதைக் குறையுங்கள்.

WHO
WHO
`ஜிம் முதல்... ஹேர்கட் வரை' - கொரோனாவிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? #SocialDistancingIsGood

* நம்பகமான மூலங்களிலிருந்து மட்டுமே தகவல்களைத் தேடுங்கள். வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை நம்பாதீர்கள்.

* வதந்திகளிலிருந்து உண்மைகளை வேறுபடுத்துங்கள். இது உங்கள் அச்சத்தைக் குறைக்க உதவும்.

* உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு ஆதரவாக இருங்கள். மற்றவர்களுக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்யுங்கள்.

* வேலைகளுக்கு நடுவே தேவையான அளவு ஓய்வெடுங்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்.

* புகையிலை, ஆல்கஹால் போன்றவை உங்கள் மனம் மற்றும் உடலை மோசமடைய வைக்கும்... தவிர்த்திடுங்கள்.

* உங்களை உளவியல்ரீதியாகத் திடமாக வைத்திருங்கள். உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து இயல்பாக இருக்க முயலுங்கள்.

மனநலம்
மனநலம்

உடல் நலம்போலவே நம் மனநலனும் முக்கியம். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, வீட்டிலிருந்தே வேலை என்பதெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான். கொரோனா வைரஸ் பற்றி தேவையில்லாமல் பயம்கொள்ளவும், கவலைப்படவும் வேண்டாம்.

வருமுன் காத்திடுவோம்... கொரோனாவிலிருந்து மீண்டெழுவோம்!

அடுத்த கட்டுரைக்கு