Published:Updated:

`எண்ணங்கள் அனைத்துக்கும் காது கொடுக்காதீர்கள்..!' மனச்சோர்வுக்குத் தீர்வு சொல்லும் மருத்துவர்

sushant singh rajput
sushant singh rajput ( Instagram / sushantsinghrajput )

நீண்டகால டிப்ரெஷன் பற்றித்தான் தற்போது இந்தியா முழுக்க பேச்சாக இருக்கிறது. காரணம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் எதிர்பாராத தற்கொலை.

மும்பையில் அவருடைய வீட்டில் நேற்றைய தினம் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 34 வயதான சுஷாந்த்தின் தற்கொலைக்குக் காரணம் கடந்த 6 மாதங்களாக இவருக்கு இருந்த டிப்ரெஷன் என்கிறது, வழக்கை விசாரித்து வருகிற மும்பை காவல்துறை.

சுஷாந்த்தின் மரணத்தை நம்ப முடியவில்லை என்று பாலிவுட்டின் அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கன், தீபிகா படுகோன் என எல்லோரும் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். பணமும் புகழும் பகட்டுமே ஒருவரை மனச்சோர்விலிருந்து காப்பாற்றிவிடுவதில்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது. சரி, மனச்சோர்வு என்றால் என்ன, அந்த உணர்வு எப்படியிருக்கும், அதிலிருந்து எப்படி மீண்டு வருவது... மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் கேட்டோம்.

``மனச்சோர்வு என்பது ஒருவகை மனநோய். இது பீடிக்கப்பட்டவர்கள் எதிலும் விருப்பமில்லாமல் இருப்பார்கள். எல்லா விஷயத்திலும் நம்பிக்கையற்று இருப்பார்கள். தான் செய்வது எதுவும் வெற்றிபெறாது என்று இவர்களுக்குத் தோன்றும். இவர்களுக்கு நம்மைப் போன்று பசிக்காது. யாருடனும் பேசவும் தோன்றாது. தூக்கம் குறைவாக இருக்கும். விரக்தி மனநிலை, தனிமையை நாடுதல் என்று வாழ்வார்கள். இந்தப் பிரச்னைகளெல்லாம் நம் எல்லோருக்குமே வரும், போகும். அதனால் அதை ஒரு நிலை என்று சொல்வோம். ஒரு சிலருக்கு மட்டும் மூளையில் இருக்கிற நியூரோட்ரான்ஸ்மிட்டர் கோளாறுகளால் இந்தப் பிரச்னைகள் அடிக்கடி வரும்.

Sushanth Singh Rajput
Sushanth Singh Rajput

சுஷாந்த் சிங் ராஜ்புத் விஷயத்துக்கே வருகிறேன். அவருக்கு பணம், புகழ் எதற்குமே குறைவில்லை. வேலையிலும் அவர் திருப்தியாகத்தான் இருந்திருக்கிறார். அவற்றையெல்லாம் மீறித் தான் மனச்சோர்வு அவரை தற்கொலைவரை கொண்டு சென்றிருக்கிறது. தன்னம்பிக்கை இல்லாமலே இருப்பது, இதற்குப் பிறகு நான் வாழ்வதே வேஸ்ட் என்று அடிக்கடி தோன்றிக்கொண்டே இருப்பது என்று அவர் அவஸ்தைப்பட்டுக் கொண்டே இருந்திருப்பார். அந்த மன வலி தாங்க முடியாமல்தான் தற்கொலை முடிவைக் கையில் எடுத்திருப்பார்.

தொடர்ந்து இந்தப் பிரச்னைக்கான கவுன்சலிங் மற்றும் மருந்துகள் எடுத்துக்கொண்டு வந்தால், சரி செய்துவிடலாம். ஆனால், சுஷாந்த் 6 மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும், அவர் மருந்துகளைச் சரியாக எடுத்துக்கொண்டாரா என்பது தெரியவில்லை.

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

மனச்சோர்வில் இருப்பவர்களுக்குத் தற்கொலை எண்ணம் வருவது சகஜம். நம்முடைய எண்ணங்கள் அத்தனைக்கும் நாம் காதுகொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்தப் பிரச்னைக்கு இதுதான் முதல் தீர்வு. இதற்கான கவுன்சலிங் மற்றும் மருந்து எடுத்துக்கொள்வதுதான் இரண்டாவது தீர்வு. மற்றபடி, இசை கேட்பது உள்ளிட்ட நமக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதெல்லாம் மனச்சோர்வுக்குத் தீர்வாகாது’’ என்று முடித்தார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

அடுத்த கட்டுரைக்கு