Published:Updated:

மனையா, மருத்துவமனையா?

மனையா, மருத்துவமனையா?
பிரீமியம் ஸ்டோரி
News
மனையா, மருத்துவமனையா?

வயதானவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது, அவர்களுக்குத் துணையாக இளவயதினர் ஒருவர் உடன் செல்வது மிக மிக முக்கியம்.’’

லேசான காய்ச்சலுக்கும் தலைவலிக்கும் மருத்துவமனையைத் தேடி ஓடிக்கொண்டிருந்த மக்களுக்கு ஸ்பீடு பிரேக்கர் போட்டிருக்கிறது கொரோனா. லாக்டௌன் மற்றும் நோய்த்தாக்கம் அச்சத்தால் அவசரத் தேவைகளுக்குக்கூட மருத்துவமனைக்குச் செல்லத் தயங்குகிறோம். இந்நிலையில், மருத்துவமனை செல்வதை முடிந்தவரை எப்படியெல்லாம் தவிர்க்க வேண்டும் மற்றும் சிகிச்சையைத் தவிர்க்கக்கூடாத உடல்நலக் குறைபாடுகள் என்னென்ன என்று பல்துறை மருத்துவர்களிடம் கேட்டோம்.

மனையா, மருத்துவமனையா?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டாக்டர் செந்தில்குமரன், பல் மருத்துவர்

“பல் மருத்துவர் சிகிச்சை அளிக்கும்போது, நோயாளியின் எச்சில் திவலைகள் மூலம் கொரோனாத் தொற்றுக்கான வாய்ப்பு அதிகமாகும் என்பதால், பல் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கச் சொல்கிறோம். டெலிமெடிசின் முறையைத்தான் பரிந்துரைக்கிறோம். ஒருவேளை தாங்கமுடியாத பல் வலி, ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல் இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் நேரடி சிகிச்சை தருகிறோம்.

மனையா, மருத்துவமனையா?

குழந்தைகளுக்குப் பல் பிரச்னைகள் ஏற்பட்டால் அந்த வலியை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து வரச் சொல்வோம். சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன்பு சிகிச்சை பெறுவோரை ஒருமுறை மௌத்வாஷ் பயன்படுத்தி வாயை நன்றாகக் கொப்பளிக்கச் செய்கிறோம். அவசரமில்லாத பட்சத்தில் தற்போது வேர்க்கால் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனையா, மருத்துவமனையா?

டாக்டர் வி.எஸ்.நடராஜன், முதியோர்நல மருத்துவர்

‘`வயதானவர்கள் உணவு செரிக்கவில்லை, லேசான உடல்வலி என்றால்கூட அச்சத்தில் மருத்துவமனைக்குச் செல்ல நினைப்பார்கள். ஆனால் அவர்கள் இப்போது மருத்துவமனைக்கு வருவதில் பிரச்னைகள் இருப்பதால் ‘டெலிமெடிசின்’ முறையில் வீடியோ அல்லது ஆடியோ கால் மூலம் ஆலோசனை வழங்குகிறோம். ப்ரிஸ்க்ரிப்ஷனை மெயில் அல்லது வாட்ஸப்பில் அனுப்பிவிடுகிறோம். மருத்துவமனைக்கு வந்தே ஆக வேண்டிய சூழலில், வந்தால் போதும். அதேபோல, தவிர்க்க முடியாத, தள்ளிப்போட முடியாத எலும்பு முறிவு, மாரடைப்பு, தலைக்காயம், குடலிறக்கத் தீவிர நிலை போன்ற எமர்ஜென்சி அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. சர்க்கரை, ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே சோதிக்கும் கருவிகொண்டு டெஸ்ட் செய்து, ரிசல்ட்டை மருத்துவரிடம் போனில் சொல்லி ஆலோசனை பெறலாம். பொதுவாக ரத்த அழுத்தம் எல்லா நேரத்திலும் அதிகரிக்காது. அப்படி அதிகரித்தால் மயக்கம், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். அப்போது மருத்துவரிடம் செல்லலாம். வயதானவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது, அவர்களுக்குத் துணையாக இளவயதினர் ஒருவர் உடன் செல்வது மிக மிக முக்கியம்.’’

டாக்டர் கனிமொழி, குழந்தையின்மை சிறப்பு மருத்துவர்

“மாதவிடாய் தள்ளிப்போகும் பெண்களை வீட்டிலேயே ப்ரெக்னன்ஸி டெஸ்ட் ஸ்ட்ரிப்(Pregnancy Test Strip) மூலம் சிறுநீர் பரிசோதனை செய்து பார்க்கச்சொல்கிறோம். ரிசல்ட் பாசிட்டிவ் என்றால் கர்ப்பத்தை உறுதிசெய்ய ஸ்கேன் எடுக்க 11-14 வாரத்தில் மருத்துவமனைக்கு வரச் சொல்வோம். 19-21 வாரங்களில் கருவின் வளர்ச்சியைக் கண்காணிக்க ஸ்கேன் எடுக்கச் சொல்வோம். ஸ்கேன் எடுக்க வரும்போதே கர்ப்பகாலத் தடுப்பூசியையும் போட்டுவிடுவோம். அடுத்ததாக, 36 வாரங்களுக்குப் பிறகு உள்ள நான்கு வாரங்களும் மருத்துவமனைக்கு நேரடியாக வந்து பரிசோதித்துக்கொள்வது நல்லது. கர்ப்பிணி ஐந்து மாதங்களைக் கடந்த நிலையில், குழந்தை வயிற்றில் அசையவில்லை, பனிக்குடம் உடைவது, ரத்தப்போக்கு போன்ற அவசர சூழல்களில் மருத்துவமனைக்கு வரச்சொல்கிறோம். சிகிச்சை பெறவரும் கர்ப்பிணியை மட்டுமே மருத்துவமனைக்குள் அனுமதிப்போம், உடன் வந்தவர்கள் வெளியேதான் நிற்க வேண்டும்.

மனையா, மருத்துவமனையா?

கொரோனா அறிகுறிகள் தென்படும் கர்ப்பிணிகளுக்குப் பிரசவத்துக்கு முன்னர் கோவிட்-19 பரிசோதனை செய்துவிடுகிறோம். மருத்துவமனை செல்ல வேண்டிய தவிர்க்க முடியாத உடல்நிலைக் காரணங்கள் தவிர, கர்ப்பிணிகள் டெலிமெடிசின் மூலமாகவே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். திருமணமாகாத பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கும் டெலிமெடிசின் ஆலோசனையே வழங்குகிறோம். அதிக ரத்தப்போக்கு, தாங்கமுடியாத வலி போன்ற பிரச்னைகளுக்கு மட்டுமே மருத்துவமனை சிகிச்சை வழங்குகிறோம். தள்ளிப்போடக்கூடிய கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகள் இப்போது மேற்கொள்ளப்படுவதில்லை. இப்போது புதிதாக யாருக்கும் ஐ.வி.எஃப் கருத்தரித்தல் சிகிச்சையும் செய்யப்படுவதில்லை.’’

மனையா, மருத்துவமனையா?

டாக்டர் வி.அஷ்வின் கருப்பன், சர்க்கரைநோய் மருத்துவர்

“எல்லா மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குப் பரிசோதனை, சானிட்டைசிங், சமூக இடைவெளி பின்பற்றப்படுகின்றன. சிகிச்சை பெற வருவோரைக் கைகளால் தொட்டு சிகிச்சை அளிப்பதை முடிந்தவரை தவிர்க்கிறோம். இந்த லாக்டௌன் நேரத்தில் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாகவும், சரியான உடல் இயக்கம் இல்லாததாலும் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்திருக்கிறது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்வது நல்லது. வீட்டிலேயே குளுக்கோமீட்டர்(Glucometer) கருவி வாங்கி வைத்துக்கொண்டு ரத்தச் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக்கொள்ளலாம். தொடர்ந்து எடுத்துவரும் மாத்திரைகளையும் மருந்துகளையும் இடையில் நிறுத்தக் கூடாது. ஏதாவது சந்தேகம் எனில் போனில் மருத்துவ ஆலோசனை பெறலாம். சர்க்கரைநோய் உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ள காரணத்தால் எளிதில் தொற்று ஏற்படலாம். இவர்கள் சர்க்கரைநோய்க்குத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதும், சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதும் இன்றியமையாதது.”