Published:Updated:

Doctor Vikatan: குழந்தை பெற்று இரண்டு வருடங்களுக்குப் பிறகும் வடியாத வயிறு; குறைக்க வழிகள் உண்டா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

என் வயது 34. இரண்டு வயதில் குழந்தை இருக்கிறது. பிரசவமாகி இரண்டு வருடங்கள் கழித்தும் என் வயிறு 6 மாத கர்ப்பம்போலவே இருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லோரும் அது குறித்துக் கேட்கும்போது தர்மசங்கடமாக இருக்கிறது. சிசேரியன் பிரசவம் என்பதால் டெலிவரி ஆன உடனேயே என்னால் எந்த உடற்பயிற்சியையும் செய்ய முடியவில்லை. இப்போது அதை சரிசெய்யவே முடியாது என்கிறார்கள். வயிற்றைக் கட்டுவது பலன் தருமா?

- மைத்ரேயி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

``கர்ப்பகாலத்தில் ஒரு பெண் சராசரியாக 11 முதல் 15 கிலோவரை எடை கூடுவாள். குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப வயிறு விரிந்துகொடுத்து உதவும். குழந்தை பிறந்ததும் உங்கள் எடையும் குறையும், வயிறும் படிப்படியாகக் குறையத் தொடங்கும். வயிறானது எலாஸ்டிக் போன்றது. ரப்பர் பேண்டை கற்பனை செய்துகொள்ளுங்கள். அது பலமுறை ஸ்ட்ரெச் செய்யப்பட்ட பிறகு மீண்டும் தன் பழைய நிலைக்கு வர வாய்ப்பே இல்லை. அது ஓரளவுக்குத்தான் சாத்தியம். அதுபோலதான் வயிறும்.

நம் வயிற்றில் இரண்டுவகையான தசைகள் உள்ளன. அவைதான் வயிற்றுப்பகுதியின் இறுக்கத்தைத் தீர்மானிப்பவை. அந்தத் தசைகளை நீங்கள் டோன் செய்வதன் மூலம் ஓரளவுக்கு உங்கள் வயிற்றுப் பருமனைக் குறைக்க முடியும். அதற்கென்றே பிரத்யேக உடற்பயிற்சிகள் நிறைய உள்ளன.

Covid Questions: அடுத்த மாதம் பிரசவம்; பிறக்கும் குழந்தைக்கு தொற்று வராமல் எப்படிப் பாதுகாப்பது?

உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அந்தப் பயிற்சிகள் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு செய்ய ஆரம்பிக்கலாம். வயிற்றைக் கட்டுவது இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

அது நிச்சயம் தீர்வல்ல. அது ஓர் உணர்வு. அதாவது வயிற்றைக் கட்டுவதால் வயிறு குறைவதாக உளவியலாக உங்களை நம்பவைக்கிற விஷயம் அது. அதற்கு மேல் அது எந்தப் பலனையும் தராது.

இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்னையின் தீவிரம் இன்னும் அதிகமாக இருக்கும். அதாவது இரண்டு குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ப, வயிறு சராசரியாக விரிவதைவிடவும் கூடுதலாக விரியும். அப்படிப்பட்ட பெண்களுக்கு வயிறு பழைய நிலைக்கு வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. அவர்களும் பயிற்சிகளின் மூலம் ஓரளவுக்கு வயிற்றுப் பருமனைக் குறைக்கலாம்.

Baby (Representational Image)
Baby (Representational Image)
Photo by Omar Lopez on Unsplash
``After Pregnancy, Weightloss-க்கு இதெல்லாம்தான் பண்ணேன்" - Actress Anandhi | Fitness Transformation

எனவே, நீங்கள் இனியும் தாமதிக்காமல் வயிற்றுத்தசைகளை டோன் செய்யும் பயிற்சிகளைச் செய்யத் தொடங்குங்கள். அடி வயிற்றுத் தசைகளுக்கான பயிற்சிகள், ஆப்ஸ் (Abs), பிளாங்க்ஸ் ( Planks) போன்ற பயிற்சிகளைச் செய்வது விரைவான பலனைத் தரும். இந்தப் பயிற்சிகளை நீங்களாக முயற்சி செய்யாமல் தகுந்த ஃபிட்னஸ் எக்ஸ்பெர்ட் அல்லது பிசியோதெரபிஸ்ட் வழிகாட்டுதலின் பேரில் முறையாகச் செய்வதே பாதுகாப்பானது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு