Published:Updated:

``8 மணிநேரத்திற்கு ஒருமுறை மாஸ்க்கை மாற்ற வேண்டும்!" - விளக்கங்களும் வழிகாட்டுதலும் #Video

மாஸ்க்
மாஸ்க்

மாஸ்க்குகளில் காதில் பொருத்திக்கொள்ள இரண்டு வளையங்கள் காணப்படும். அடுத்து, இதில் உள்ள முக்கியமான பகுதிகள் நீலம் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் வெளிப்புறப் பகுதியும், வெள்ளை நிறத்தில் இருக்கும் உட்புறப் பகுதியும்.

கடந்த சில நாள்களாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிற செய்திகள் அனைத்தும் கொரோனா வைரஸைப் பற்றியவைதான். சீனாவில் பயணத்தைத் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது இந்தியாவரை வந்துவிட்டது. கடுமையான சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும் இந்த வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும், இதற்கென்று குறிப்பிட்ட தனியான சிகிச்சை முறைகள் எதுவும் இல்லை என்பதால் வரும் முன் காப்பதே சிறந்தது. நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக நாம் மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்று, மாஸ்க் எனப்படும் முகக் கவசங்களைப் பயன்படுத்துவது.

China Outbreak
China Outbreak
Photo: AP

தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் மற்றவர்களுக்குப் பரவி அதீத சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால்நோய்த்தாக்குதல் உள்ள இடங்களில் வசிப்பவர்கள் மாஸ்க் அணியவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாஸ்க்குகளின் முக்கியத்துவம் பற்றியும், அதை அணியக்கூடிய சரியான முறைகள் பற்றியும் மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரனிடம் பேசினோம்.

`இங்கு வசதியில்லை.. சீனாவிலேயே இருங்கள்!’ -கலங்கும் மாணவர்கள்; கைவிரித்த பாகிஸ்தான் அரசு #corona

``நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி, சாதாரணமாகத் தும்மும்போதோ, இருமும்போதோ வெளிப்படும் உமிழ்நீரிலிருந்தும், மூச்சுக்காற்றிலிருந்தும் வெளியேறும் நுண்ணுயிரிகள் காற்றில் பரவியிருக்கும். இந்தக் காற்றை மற்றவர்கள் சுவாசிக்கும்போது அவர்களுக்கும் இதே பாதிப்பு ஏற்படும். எனவே, தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள சில சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மருத்துவர் சசித்ரா தாமோதரன்
மருத்துவர் சசித்ரா தாமோதரன்

அதில் முதலாவது தூய்மையான கைக்குட்டை, மாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்துவது. ஆரம்பத்தில் துணியால் செய்யப்பட்ட மாஸ்க்குகள்தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. பிறகு அப்புறப்படுத்தக் கூடிய மாஸ்க்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்றுநோய் பரவாமல் தடுக்க இந்த மாஸ்க்குகள் உதவுகின்றன.

மாஸ்க்குகளில் காதில் பொருத்திக்கொள்ள இரண்டு வளையங்கள் காணப்படும். அடுத்து, இதில் உள்ள முக்கியமான பகுதிகள் நீலம் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் வெளிப்புறப் பகுதியும், வெள்ளை நிறத்தில் இருக்கும் உட்புறப் பகுதியும். இதில் வெள்ளை நிறப் பகுதி ஈரத்தை உறிஞ்சும் தன்மை உடையது. நீலநிறப் பகுதி ஈரத்தைத் தடுக்கும் தன்மை உடையது. மற்றவர்களிடமிருந்து நமக்கு நோய் பரவாமல் இருக்க வேண்டும் என்றால் வெள்ளை நிறப் பகுதி வெளியில் இருக்குமாறு மாஸ்க்கை அணிய வேண்டும்.

அதுவே நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருக்க வெள்ளை நிறப் பகுதி உள்ளே இருக்குமாறு மாஸ்க்கை பொருத்திக்கொள்ள வேண்டும். கூட்ட நெரிசல்கள் உள்ள இடங்களிலும், தொற்று நோய்கள் தீவிரமாகப் பரவி வரும் நேரங்களிலும் மாஸ்க்கின் வெள்ளை நிறப் பகுதி வெளியில் உள்ளவாறு மட்டுமே அணிய வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.

இவற்றை தவிர மாஸ்க்கில் மேல்பகுதி, கீழ்ப்பகுதி என்று இரண்டு பகுதிகள் இருக்கும். அதில் கீழ்ப்பகுதி மென்மையாகவும், மேல்பகுதியில் ஒரு தடிமனான, வளையக்கூடிய பட்டையும் காணப்படும். இந்தப் பட்டை மாஸ்க்கை நாம் அணியும்போது மூக்குப் பகுதியில் நன்றாகப் பொருந்தி இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்கிறது. மேலும், இந்த மாஸ்க்கின் நடுப்பகுதியில் மூன்று அடுக்குகள் இருக்கும். இவை மாஸ்க்கில் படியும் தூசிகள் போன்றவை சரிந்து விழ உதவுகின்றன.

China Outbreak
China Outbreak
Photo: AP

இந்த மாஸ்க்கை அணியும்போது மூக்கு மற்றும் வாய்ப்பகுதி முழுவதுமாக மறைவதுபோல அணிய வேண்டும். பேசுவதற்கும், சுவாசிப்பதற்கும் சிரமமாக இருக்கிறது என்று அரைகுறையாகவோ அல்லது இடைவெளிவிட்டோ அணியக் கூடாது.

கொரோனா வைரஸ்... உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரபூர்வ விளக்கங்கள்! #VikatanPhotoCards

மாஸ்க்கை அணிவதற்கு முன்பு கைகளை தூய நீரில் சோப்பு பயன்படுத்தி 20 விநாடிகள் நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு அணியப் போகும் புதிய மாஸ்க்கை எடுத்து அதில் சேதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்று பரிசோதித்த பின், மூக்கு மற்றும் வாய்ப்பகுதி முழுவதுமாக மறையும்படி அணிந்துகொள்ள வேண்டும். அப்புறப்படுத்தக்கூடிய ஒரு மாஸ்க்கை எட்டு மணி நேரத்துக்கு மேல் அணியக் கூடாது.

China Outbreak
China Outbreak
AP / Xiao Yijiu

மாஸ்க் என்பது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். இது முழுமையான நோய்த்தடுப்புக்கு உறுதியளிக்காது என்றாலும் முறையாகப் பயன்படுத்தி வந்தால் நோய் பரவுவதை முடிந்தவரை தடுக்கலாம்" என்றார் டாக்டர். சசித்ரா தாமோதரன்.

ஆக, நோய் பரவுவதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, மாஸ்க் அணிவது மட்டுமல்ல; அதை சரியான முறையில் அணிவதும் முக்கியம்.

அடுத்த கட்டுரைக்கு