Published:Updated:

மூளையை நேரடியாகத் தாக்குமா கொரோனா வைரஸ்..?! விடைசொல்லும் புது ஆய்வு

Human brain
Human brain

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலைவலி, குழப்பம் போன்ற அறிகுறிகள் தென்படுவதற்கு, கொரோனா தொற்று மூளையைத் தாக்குவதே காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

கோவிட்-19 நோயின் காரணியான SARS CoV-2 வைரஸ் மனிதகுலத்தைத் தாக்கிவரும் புதுவகை வைரஸ்.

இந்த வைரஸ் கண்டறியப்பட்ட நாளிலிருந்து, உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் அதைப் பற்றிய புதுப்புது தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. கொரோனா வைரஸ் பிரதானமாக சுவாசப் பாதையைத் தாக்கக் கூடியது என்பது நாம் அறிந்த ஒன்று. தற்போது, தொற்று மூளையையும் நேரடியாகத் தாக்கலாம் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலைவலி, குழப்பம் போன்ற அறிகுறிகள் தென்படுவதற்கு, கொரோனா தொற்று மூளையைத் தாக்குவதே காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

அமெரிக்கா, யேல் பல்கலைக்கழகத்தின் எதிர்ப்பு சக்தி நோயியலாளரான அகிகோ இவாசாகி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ``கொரோனா வைரஸால் மூளையில் பல்கிப் பெருக முடியும், வைரஸ் மூளையைத் தாக்குவதால் மூளையில் உள்ள செல்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது" என்று கண்டறிந்துள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை தலைவரான ஆண்ட்ரூ ஜோசப்சன், கொரோனா தொற்றால் மூளையில் நேரடி பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை, இன்னும் பல ஆராய்ச்சிகள் மூலம் அறிந்துகொள்வது மிக அவசியம் என்று கூறியுள்ளார்.

வெளியிலிருந்து வரும் நச்சுப் பொருள்களும் நுண்ணுயிரிகளும் நம் மூளையைத் தாக்காமல் இருக்க உதவும் பாதுகாப்புப் படலம், பிளட் பிரைன் பேரியர் (Blood Brain Barrier). கொரோனா வைரஸ் அந்தப் பாதுகாப்புப் படலத்தைத் தாண்டிச் சென்று மூளையைத் தாக்க வல்லது என, தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு உலகை உலுக்கிய ஸிகா வைரஸ் (Zika Virus) எனும் கொடிய வைரஸும் இதேபோல் பாதுகாப்புப் படலத்தைக் கடந்து குழந்தைகளின் மூளையைத் தாக்கக்கூடியதாக இருந்தது.

கொரோனா பாதித்தவர்களுக்கு ஏற்படும் நரம்பு மண்டலம் சார்ந்த அறிகுறிகளுக்கு, அதீத எதிர்ப்பு சக்தி தூண்டுதலான சைட்டோகைன் சுழல்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் கொரோனா வைரஸ் நேரடியாக மூளையைத் தாக்கக்கூடும் என்பது, இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

மூளைக்கும் கொரோனா வைரஸுக்குமான தொடர்பை வெளிக்கொணரும் இந்த ஆராய்ச்சியை, இவாசாக்கி மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினர் மூன்று வகையாக மேற்கொண்டனர். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை மூளையில் (Brain organoids) கொரோனா வைரஸை செலுத்துதல், எலிக்குக் கொரானா தொற்றை ஏற்படுத்தி ஆராய்தல், கோவிட்-19-ல் இறந்த மனிதர்களின் மூளை திசுக்களை ஆராய்தல் என மூன்று வகையாக ஆராய்ந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

செயற்கையாக உருவாக்கப்பட்ட மூளையில் SARS -CoV- 2 வைரஸை செலுத்தி ஆராய்ந்தபோது, வைரஸ் நியூரான்களைத் தாக்கி, மூளையில் தங்களைப் பெருக்கிக்கொண்டு, சுற்றியுள்ள செல்களையும் ஆக்ஸிஜன் குறைபாட்டால் மரணிக்கச் செய்ய வல்லது என்றும், மூக்கு வழியாக இந்த வைரஸ் மூளையை அடையும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் ஓர் உறுப்புக்குள் நுழைய ACE 2 (Angiotensin Converting Enzyme 2) என்ற புரதம் அதிக அளவில் இருக்க வேண்டும். அந்தப் புரதம் நுரையீரலில் அதிகம் காணப்படும். தற்போது ஆராய்ச்சி மூலம், செயற்கை மூளை மற்றும் இறந்தவர்களின் மூளையிலும் ACE 2 புரதம் வைரஸை உள்ளிழுக்கும் அளவுக்கு உள்ளது எனக் கண்டறிந்துள்ளனர்.

கொரோனாவின் தாக்கம் மூளையில் எவ்வாறு பரவலாக உள்ளது என்பதைக் கண்டறிய மேலும் பல உடற்கூறு ஆய்வுகள் அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு