Published:Updated:

இதயம், மூளை, நரம்பு, ரத்தநாள அறுவை சிகிச்சைகள்... வெற்றி சதவிகிதத்தை அதிகரிக்கும் ஹைப்ரிட் ஓ.ஆர்!

Hybrid Operating Room
Hybrid Operating Room ( Photo: Vikatan / Priyanka )

மேலை நாடுகளில், ஹைப்ரிட் ஆபரேட்டிங் ரூம் சிக்கலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்போது, அந்த மருத்துவமனையில் தவறாமல் இருக்க வேண்டுமென்பது, அந்த நாடுகளின் மருத்துவ நெறிமுறைகளில் ஒன்று.

இன்றைய நவீனத் தொழில்நுட்பங்களால் நன்மைகள் பல பெற்றிருக்கும் ஒரு துறை, மருத்துவத்துறை. இருப்பினும், மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் மருத்துவ வளர்ச்சியில் இந்தியா சற்றே பின்னோக்கி இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கு மருத்துவர்கள் முன்வைக்கும் காரணங்களில் ஒன்று, மருத்துவத் தொழில்நுட்ப வசதிகள். குறிப்பாக, அறுவை சிகிச்சைகள் நடைபெறும் தியேட்டர்களில் உள்ள வசதிகள்.

Hybrid Operating Room
Hybrid Operating Room
Photo: Vikatan / Priyanka

``இந்திய மருத்துவத் துறையில், அறுவை சிகிச்சை அறைகள் குறித்து தனி நெறிமுறைகள் எதுவும் கிடையாது என்பதால், அதற்கு இன்றுவரை நாம் அமெரிக்க நெறிமுறைகளைத்தாம் பின்பற்றி வருகிறோம். அந்த வகையில், அறுவை சிகிச்சை நடைபெறும் தியேட்டர் குறித்த நெறிமுறைகளில் நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அறுவை சிகிச்சைகளில் இதயம், மூளை, நரம்பு, ரத்த நாளங்கள் போன்ற உடல் உள்ளுறுப்புகளுக்கான அறுவை சிகிச்சைகள் மிகமிக நுட்பமானவை. அதிக கவனமெடுத்துச் செய்யப்படவேண்டியவை. ஏனெனில், இந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது, எதிர்பாரா சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உதாரணத்துக்கு, இதய அறுவை சிகிச்சையின்போது ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல் போன்ற சிக்கல்களுக்கு வாய்ப்பு உண்டு. ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில், தமிழகம் எப்போதுமே தனித்து இருக்கும். அந்தவகையில், ஹைப்ரிட் ஓ.ஆர். தொடங்குவதிலும் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாகவே இருக்கின்றது’’ என்கிறார், சென்னையைச் சேர்ந்த மூத்த `இன்டெர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் (Interventional Cardiologist)' கோபாலமுருகன்..

TAVR அல்லது TAVI போன்ற அறுவை சிகிச்சை இல்லாத இதய வால்வுகளுக்கான நுண் சிகிச்சைகளை மேற்கொள்ள, ஹைப்ரிட் ஓ.ஆர். அவசியம்.
அமெரிக்க மருத்துவ நெறிமுறை.

அதேபோல இதயத் தமனிகளை மாற்றும் அறுவை சிகிச்சையின்போது இதயத்துடிப்பில் ஏதேனும் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அறுவைசிகிச்சை செய்யும்போது சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல்நிலை, மனநிலை மாற்றங்கள், அவருடைய மெடிக்கல் ஹிஸ்டரி போன்றவற்றின் அடிப்படையில் மேற்கூறிய சிக்கல்கள் ஏற்படும் என்பதால், இவற்றை முன்கூட்டியே கணிப்பது இயலாதது. இருப்பினும், மருத்துவர்கள் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்.

Hybrid Operating Room
Hybrid Operating Room
Photo: Vikatan / Priyanka

உதாரணத்துக்கு, அறுவை சிகிச்சையின்போது இதயத்துடிப்பில் பிரச்னைகள் ஏற்படும்பட்சத்தில், செயற்கையாக அந்த இதயம் இயக்கப்படத் தேவையான உபகரண வசதிகள் அருகிலேயே இருக்க வேண்டும். அதேபோல, இதயத்துடிப்பைக் கவனிப்பதற்கான இயந்திரங்கள், ரத்த அடைப்புகள் இருக்கின்றனவா எனக் கண்டறிய கணினி வசதிகள், ரத்த நாளங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் இயந்திர வசதிகள் போன்றவை யாவும் அறுவை சிகிச்சை நடைபெறும் குறிப்பிட்ட அந்த ஓர் அறைக்குள் இருக்க வேண்டும்.

இவை அனைத்தும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் எனில், அறுவை சிகிச்சை நடைபெறும் அறையில் முதலில் அதற்கான இடவசதி இருக்க வேண்டும். அத்தகைய வசதிகள் அனைத்தும் பொருந்திய அறுவை சிகிச்சை அறைகளை, மருத்துவத் துறையில் `ஹைப்ரிட் ஆபரேட்டிங் ரூம் (Hybrid operating room)' எனக் குறிப்பிடுவோம்.

மேலை நாடுகளில், ஹைப்ரிட் ஆபரேட்டிங் ரூம் அனைத்து மருத்துவமனைகளிலும் தவறாமல் இருக்க வேண்டுமென்பது, அந்த நாடுகளின் மருத்துவ நெறிமுறைகளில் ஒன்று.

இப்படி அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் இருக்கும்போது மிக நுணுக்கமாகச் செய்யப்படவேண்டிய அறுவை சிகிச்சைகள்கூட மருத்துவர்களுக்கு மிக எளிதான காரியமாக மாறிவிடும்.

Hybrid Operating Room
Hybrid Operating Room
Photo: Vikatan / Priyanka

நலம் காப்போம்!

அடுத்த கட்டுரைக்கு