Published:Updated:

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட காசநோய் தடுப்பு மருந்துகள் - 12,000 பேரிடம் பரிசோதித்துப் பார்க்க முடிவு!

லட்சுமணன்.ஜி

முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு காசநோய் தடுப்பு மருந்துகள் இந்தியர்களிடம் `கிளினிக்கல் ட்ரைல்' செய்து பார்க்க முடிவு செய்திருக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்.

தடுப்பூசி
தடுப்பூசி

`உலக காசநோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர்' என்கின்றன புள்ளிவிவரங்கள். காசநோய்க்கான சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்து அரை நூற்றாண்டு கடந்துவிட்ட பின்னரும் உலக அளவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாடில்லை. அதிலும் குறிப்பாக, இந்தியாவில் காசநோயின் தாக்கம் ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

எக்ஸ் ரே
எக்ஸ் ரே

`மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' (Mycobacterium Tuberculosis) எனும் பாக்டீரியாவின் மூலம்தான் காசநோய் பரவுகிறது. குழந்தைகளுக்கு காசநோய் வராமல் தடுப்பதற்கான பி.சி.ஜி. (BCG – Bacille Calmette-Guerin) என்னும் தடுப்பூசி மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. அனைத்து வயதினருக்கும் காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசிகள் எதுவும் இல்லை. புதிய தடுப்பூசிகளை உருவாக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகள் குறித்த பிரபல மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜி.பி.தல்வார் கண்டறிந்த எம்.ஐ.பி என்னும் `மைக்ரோபாக்டீரியம் இண்டிகஸ் ப்ராணி' (MIP (Mycrobacterium Indicus Pranii) என்ற தடுப்பு மருந்தும் புனே சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கண்டறிந்த `விபிஎம் 1002' என்ற இரண்டு தடுப்பு மருந்துகளையும் மனிதர்களிடம் பரிசோதித்துப் பார்க்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research - ICMR) முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, இரண்டு கட்டப் பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டமாக மனிதர்களிடம் பரிசோதித்துப் பார்க்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி
தடுப்பூசி

இதற்காக, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 12,000 பேரிடம் மூன்று ஆண்டுகள் வரை இந்தத் தடுப்பு மருந்துகள் பரிசோதனை செய்யப்படும். காசநோயாளிகளின் வீட்டில் நோய் பாதிப்பில்லாத குடும்ப உறுப்பினர்களிடமும் அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்களிடமும் இந்தத் தடுப்பு மருந்தை பரிசோதனை செய்துபார்க்கவுள்ளனர்.

Vikatan

`பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தால் ஒரு சில வருடங்களில் புதிய காசநோய் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும்' என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்.