கோவிட்-19 தொற்றுக்கு இந்தியாவில் பெரும்பாலும் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள்தான் செலுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக, முதல் இரண்டு தவணையில் எந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களோ அதையே வழங்க வேண்டும் என்று அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இரண்டு தவணைகளில் வெவ்வேறு தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு, இரண்டு தவணைகளிலும் ஒரே தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களைக் காட்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது தொடர்பான ஆராய்ச்சி அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இந்த கிராமத்திலுள்ள மக்களுக்கு முதல் டோஸ் கோவிஷீல்டு வழங்கப்பட்டது.
இரண்டாம் டோஸாக கோவாக்சின் தடுப்பூசி தவறுதலாக வழங்கப்பட்டுவிட்டது. இவர்களிடம் 6 மாதங்களுக்குப் பிறகு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதே மாநிலத்தில் இரண்டு தவணைகளும் ஒரே தடுப்பூசியைச் செலுத்தியவர்களிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆராய்ச்சி முடிவில் இரண்டு தவணைகளிலும் ஒரே தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்களிடம் குறைவாகக் காணப்பட்ட ஆன்டிபாடி, இரண்டு தவணைகளுக்கும் வெவ்வேறு தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு அதிகமாகக் காணப்பட்டது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாகப் பேசிய ஐசிஎம்ஆரின் கூடுதல் இயக்குநர் மருத்துவர் சமீரான் பாண்டா, "ரத்த ஓட்டத்தில் காணப்படும் IgG ஆன்பாடி ஒரே மருந்தை இரண்டு தவணைகளுக்கும் செலுத்திக்கொண்டவர்களிடம் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் மிக்ஸ்-அண்ட்-மேட்ச்சாக வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவர்களுக்கு IgG ஆன்டிபாடி அதிகமாகக் காணப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.