Published:Updated:

முதியோரை வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கிறீர்களா... மனஅழுத்தம் ஏற்படலாம்! #Alert

ஜெனி ஃப்ரீடா

முதுமை எய்திய கணவன், மனைவி இருவரில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றவர் தனிமையை உணர்வார். அப்போது மனஅழுத்தம், பதற்றம், பயம் போன்ற உணர்வுகள் ஏற்படும். அதுபோன்ற நிலையில் அவர்களைத் தனிமையில் விடுவது நல்லதல்ல.

Elders
Elders ( Pixabay )

இரவு நேரத்தில் வீடு புகுந்து தாக்கிய கொள்ளையர்களை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வயதான தம்பதி துணிச்சலுடன் அடித்து விரட்டியடித்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. தம்பதியின் தைரியமும் துணிவும் அனைவராலும் கொண்டாடப்பட்டது. சண்முகவேல், செந்தாமரை ஆகிய அந்தத் தம்பதிக்கு சுதந்திர தின விழாவில் தமிழக அரசின் 'அதீத துணிவுக்கான விருது' வழங்கப்பட்டது. ஆனால் இதேபோன்று அனைத்து முதியவர்களாலும் துணிச்சலாகச் செயல்பட முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. இன்றைய சூழலில் நடுத்தர வயதைக் கடந்து வயது மூப்படையும் நிலையில் தனிமையில் உள்ள பெரியவர்களுக்கு பாதுகாப்பு மிக முக்கியம். அதேவேளையில் அவர்களது உடல்நலன், மனநலனில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அதைவிட அவசியமாகும்.

Hello seniors
Hello seniors

இந்தியாவைப் பொறுத்தவரை 7.7 கோடி முதியோர் வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் 25 ஆண்டுகளில் 12.5 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. 1951-ம் ஆண்டில் 40 ஆக இருந்த இந்தியர்களின் சராசரி வயது, தற்போது 64 ஆக அதிகரித்துள்ளது. இதனால் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது.

முதியவர்களுக்கு ஏற்படும் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் குறித்து முதியோர் நல மருத்துவர் வி.அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம். "வயதானால் முதியோருக்கு மறதி, தகவல்தொடர்பில் பிரச்னை... அதாவது என்ன வார்த்தை பேசினார்கள் என்பதை மறப்பது, வாகனம் ஓட்டுவதில் தடுமாற்றம், மாத்திரை போட்டுக்கொண்டது தெரியாமல் மீண்டும் மீண்டும் சாப்பிடுவது, வலி தெரியாமலிருப்பது, பாத்ரூமின் உள்ளே பூட்டிக்கொண்டு வெளியே வரத்தெரியாமல் இருப்பதுபோன்ற பிரச்னைகள் அதிகம். வயதாகும்போது மூளை சுருங்குவதால் இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவை மறதி நோயான டிமென்ஷியாவுக்கான (Dementia) தொடக்க நிலை.

Old woman
Old woman
Pixabay

இதுபோன்ற நிலையில் உள்ள முதியவர்களை குழந்தைகளைப் போல பராமரிக்கவேண்டும். முடிந்தவரை `ஆம், இல்லை' என்ற பதிலை மட்டுமோ அல்லது ஒற்றை வார்த்தையில் அவர்கள் பதில் சொல்லும்விதமான கேள்விகளைக் கேட்கவேண்டும். நீண்ட வார்த்தைகள் உள்ள வாக்கியங்களைப் பேசும்போது அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பத் சொல்ல வேண்டியிருக்கும். அவர்கள் நிலை உணர்ந்து கோபப்படாமல் பேசவேண்டும். அவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை முழு அட்டையாகவோ, பாட்டிலாகவோ அவர்கள் அருகே வைக்கக்கூடாது. ஒருநாளைக்குத் தேவையான மாத்திரைகளை மட்டுமே அருகில் வைக்க வேண்டும்.

முதுமை எய்திய கணவன், மனைவி இருவரில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றவர் தனிமையை உணர்வார். அப்போது மனஅழுத்தம், பதற்றம், பயம் போன்ற உணர்வுகள் ஏற்படும். அதுபோன்ற நிலையில் அவர்களைத் தனிமையில் விடுவது நல்லதல்ல. 'யார் இல்லாவிட்டாலும் வாழ்க்கையை நகர்த்தியே ஆகவேண்டும். அதனால் வருத்தப்படுவதிலிருந்து வெளியே வாருங்கள். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்' என்று அவர்களுக்கு ஆதரவாகப் பேசவேண்டும். துயரத்திலிருந்து எளிதாக வெளியே வர ஆறுதல் வார்த்தைகள் உதவும். மனஅழுத்தத்திலிருந்து விடுபடவில்லை என்றாலோ, தற்கொலை உணர்வு இருக்கிறது என்றாலோ அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும்.

முதியவர்கள் சிலர் ஆரோக்கியமாகவே இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கே வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் பல வருகின்றன. அப்படியிருக்கும்போது வயதானோருக்குக் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டியது அவசியம்.
முதியோர் நல மருத்துவர் வி.அஷ்வின் கருப்பன்

முதியவர்கள் வீட்டிலேயே முடக்கி வைத்திருந்தால் அவர்களுக்கு கூடுதல் மனஅழுத்தம் ஏற்படும். உடல் பருமன், சர்க்கரையின் அளவு அதிகரிப்பதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இதனால் வீட்டில் இருப்பவர்கள் வெளியே போகும்போது வயதானவர்களையும் உடன் அழைத்துச் செல்லலாம். முதியோர் தங்கள் வயதையொத்த நண்பர்களுடன் சேர்ந்து நடைப்பயிற்சி செல்லலாம். முதியோரை வெளியே அனுப்பத் தயங்கினால் வீட்டின் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்ய வழி ஏற்படுத்திக்கொடுக்கலாம்.

முதியவர்கள் சிலர் ஆரோக்கியமாகவே இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல மாட்டார்கள். ரத்தஅழுத்தமோ, சர்க்கரை நோயோ ஓரிரு நாள்களில் வரப்போவதில்லை. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கே வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் பல வருகின்றன. அப்படியிருக்கும்போது வயதானோருக்குக் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டியது அவசியம்.

Regular checkup
Regular checkup
Pixabay

அந்தக் காலத்தில் பெண்கள் வேலைக்குப் போவது குறைவாக இருந்தது. அவர்கள் வீட்டிலிருந்து பெரியவர்களைப் பார்த்துக்கொண்டார்கள். ஆனால், இன்று பெண்களும் வேலைக்குப் போகிறார்கள். அதனால் அவர்களுக்கு தன் கணவன், பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்த யதார்த்தத்தை முதியவர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். பல வீடுகளில் குழந்தைகளைப் பராமரிப்பதுதான் முதியவர்களின் வேலையாக இருக்கும். இதனால் காலம் முழுவதும் வீட்டிலேயே அடைந்துகிடப்பது போன்று இருக்கும்.

அதுவே முதியோர் இல்லம் என்றால், அவர்கள் வயதையொட்டிய பலர் அங்கு இருப்பார்கள். தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள நண்பர்கள் கிடைப்பார்கள். நூலகங்கள், யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் இருக்கும். எல்லா முதியோரையும் முதியோர் இல்லத்தில்விடவேண்டும் என்பதில்லை. அதுபோன்ற ஏதேனும் சம்பவம் நடந்தால் அதை நேர்மறையாக அணுகி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முயற்சி செய்யலாம்" என்கிறார் டாக்டர் அஷ்வின்.

Elders
Elders
Pixabay

2018-ம் ஆண்டு `ஹெல்ப்ஏஜ்' இந்தியா நடத்திய ஆய்வில் முதியோருக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் 52 சதவிகிதம் மகன்களாலும் 34 சதவிகிதம் மருமகள்களாலும் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 82 சதவிகித முதியோர் தங்களுக்கு நடைபெறும் வன்முறைகளை வெளியே சொல்வதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

முதியோர் சாப்பிடுவதற்காக பழம் வாங்கிக்கொடுத்தால் அதிக செலவாகிறது என்று அதைத் தவிர்க்கும் குடும்பத்தினர், நடமாடிக்கொண்டிருக்கும் முதியோரிடம், 'வெளில எங்கயாவது போய் விழுந்து அடிபட்டா எங்களுக்குத்தான் தொந்தரவு. அதனால வீட்டைவிட்டு வெளியே போக வேண்டாம்' என்று தனிமைப்படுத்துதல், கடின வார்த்தைகளால் ஜாடைமாடையாகத் திட்டுவது போன்றவை நடக்கிறது. இதுபோன்ற செயல்களால் அவர்கள் உளவியல்ரீதியாக பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். இதனால் அவர்களது உடல்நலனும் மோசமடைகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு முதியோர் இல்லம் தீர்வாக அமையும் என்பதை மறுப்பதற்கில்லை.

Elders
Elders
Pixabay

குடும்பத்தினருடன் அல்லாமல் தனியாக வசிக்கும் முதியோரின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம். `ஹெல்ப்ஏஜ்' இந்தியாவின் ஆய்வின்படி 8 சதவிகித முதியோர் தங்கள் துணையுடன் தனியாக வசிக்கின்றனர். 6 சதவிகிதம் பேர் துணையை இழந்தபிறகும் தனியாகவே வசிக்கின்றனர்.

தனிமையில் வசிக்கும் முதியோருக்கான டிப்ஸ்!

hello seniors
hello seniors
  • முதிய பெற்றோர் தனியாக வசிக்கும்போது அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய, வீடுகளில் பொதுவான இடங்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தலாம்.

  • முதிய பெற்றோரின் வீட்டின் அருகே வசிப்பவர்களின் தொலைபேசி எண்களை பிள்ளைகள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் அவசர உதவி என்றால் அவர்களைத் தொடர்புகொள்ள எளிதாக இருக்கும்.

  • அவசரத்துக்கு அழைக்கவேண்டிய தொலைபேசி எண்களை வீட்டில் பார்வை படும் இடத்தில் எழுதி ஒட்டி வைக்கலாம்.

  • வீடுகளில் முதியோர் நடந்து செல்வதற்கு இடையூறாக இருக்கும் பொருள்கள் மற்றும் கத்தி போன்ற கூர்மையான பொருள்களை அவர்கள் நடமாடும் இடங்களிலிருந்து அகற்றிவிடுவது நல்லது.

  • முதியோர் பயன்படுத்தும் கழிவறைகளில் தாழ்ப்பாள்களை எடுத்துவிடலாம் அல்லது அவர் கழிவறையைப் பயன்படுத்தும்போது யாராவது ஒருவர் வெளியே நின்றுகொள்ள வேண்டும்.

  • சென்சாரில் இயங்கும் விளக்குகள் இப்போது வந்துவிட்டன. இரவில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்போது அவை தானாகவே எரியத் தொடங்கிவிடும். அதனை முதியோர் இருக்கும் அறைகளில் பொருத்தலாம்.

  • கழிவறைச் சுவரில் முதியோர் எளிதாக உட்கார்ந்து எழும்பும்விதமாக கைப்பிடியை அமைக்கலாம்.