Published:Updated:

``அதை ஏற்றுக்கொள்ள முதலில் மிகவும் சிரமப்பட்டேன்"- மனம் திறந்த இலியானா டி'க்ரூஸ்!

இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் தம்மைப் பிறருடன் உடலளவில் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

இலியானா டி'க்ரூஸ்
இலியானா டி'க்ரூஸ் ( instagram.com )

பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவர் இலியானா டி'க்ரூஸ். இவர் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில்தான் டிஸ்மார்பிக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்ததைப் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார். இதனால் தனக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் அதிலிருந்து வெளியேற நிறைய காலம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இலியானா டி'க்ரூஸ்
இலியானா டி'க்ரூஸ்
instagram.com

``உடல் டிஸ்மார்பிக் குறைபாடு (BDD)" என்பது ஒருவகையான மனநலக் கோளாறு. இதனால் பாதிக்கப்பட்டவர்களால் தங்களின் உடலில் ஏற்படும் சிறு குறைபாட்டைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச ஒ.சி.டி நிறுவனத்தின் (International OCD Foundation) கூற்றுப்படி, 60% பெண்கள் உடல் டிஸ்மார்பிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

நம்மில் பலருக்கு நம் உடல் உறுப்புகளின் வடிவங்களைப் பற்றி பெரிதாக ஒன்றும் கவலை இருக்காது. அது எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்வோம். ஆனால், சிலரால் அப்படி ஏற்றுக்கொள்ள முடியாது. ``எனக்கு மட்டும் மூக்கு ஏன் தட்டையாக இருக்கிறது?', ``காது ஏன் நீளமாக இருக்கிறது" என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். எப்போதும் கண்ணாடியைப் பார்த்துக் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

இலியானா டி'க்ரூஸ்
இலியானா டி'க்ரூஸ்
instagram.com

இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் தம்மைப் பிறருடன் உடலளவில் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உண்மையிலேயே அவர்களின் உடல் பாகங்கள் சரியான வடிவத்தில் இருந்தாலும் கூட ஏதோ குறை இருப்பதாகவே நினைத்துக்கொள்வார்கள். சரியாக இல்லை என்று நினைக்கும் பாகத்தின் வடிவத்தை அறுவை சிகிச்சை செய்து மாற்றி அமைத்தும் கூட அது சரியாகாதது போலவே அவர்களுக்குத் தோன்றும். இலியானாவுக்கும் இந்தக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

`நாம் திருமணம் செய்து கொள்ளலாமா..?'- சைஃப் அலிகானுக்கு கரீனா கபூரின் முதல் ரெஸ்பான்ஸ்

உடல் டிஸ்மார்பிக் குறைபாட்டால் தான் சுய நம்பிக்கை குறைந்து காணப்பட்டதையும், மன அமைதியின்றி இருந்ததையும் கூறிய இலியானா அதிலிருந்து தான் மீண்டு வந்ததையும் புதுடெல்லியில் நடந்த 21-வது உலக மனநல மாநாட்டின்போது, பகிர்ந்திருக்கிறார்.

``என் உடல் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். அதை நான் மதிக்கிறேன். இன்னும் நன்றாக அதை கவனித்துக்கொள்கிறேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். குறைபாடு என்பது வாழ்வின் ஒரு பகுதி. அதைக் குறைபாடாகக் கருதாமல் தனித்துவமாகக் கருதி அதில் உள்ள அழகைப் பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இலியானா டி'க்ரூஸ்
இலியானா டி'க்ரூஸ்
instagram.com

மனநல பிரச்னைகளைக் கையாள்வதற்கான முதல் படி, சிக்கலை ஏற்றுக்கொள்வதுதான். இலியானவைப் போல் பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன், சோனம் கபூர் மற்றும் பரினிதி சோப்ரா ஆகியோரும் தங்கள் மனநலம் அல்லது உருவப் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர்.