Published:Updated:

`` `அம்மாவுக்கு நாப்கின் வேணும் மிஸ்'னு வாங்கிக்குவாங்க!’’ - மகாலெட்சுமி மிஸ் #UnderstandingGender

நாப்கின்
நாப்கின்

`தன்னைப் போலவே, தன் எதிர்பாலினத்தவருக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கும் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்தப்பட வேண்டும்.’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவண்ணாமலையின் ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கான பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன், பள்ளியில் கிடைக்கப்பெறும் இலவச நாப்கின் பாக்கெட் ஒன்று தன் தோழிக்குத் தேவைப்படுவதாகக்கூறி, தனது ஆசிரியையிடம் கேட்டிருக்கிறான். அவன் கையில் அதை இயல்பான முகத்துடனும், மனதில் மகிழ்ச்சியுடனும் கொடுத்தனுப்பும் ஆசிரியை மகாலட்சுமி, இதை தன் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

"Miss....girlsங்களுக்கு நாப்கின் வேணுமாம்...எடுத்துக்கிறேன்." "எடுத்துக்கோங்கமா"... என்னடா இது ஓர் ஆண்குழந்தை...

Posted by Maha Lakshmi on Tuesday, November 19, 2019
`பெண்களுக்கான மாதாந்தர விஷயங்களில் ஒன்றான மாதவிடாயை, `பேசக்கூடாத விஷயம்' என நினைத்துக்கொண்டு மறைத்து மறைத்துப் பேசும் பழக்கம், நம் அடுத்த தலைமுறையிலாவது மறையட்டும்' என்ற புரிந்துணர்வை, ஆசிரியை மகாலட்சுமி தன் மாணவ, மாணவிகளிடம் பல காலமாக விதைத்து வந்ததன் பலன், அந்த அழகிய, அற்புதக் காட்சி.

மேலும் தன்னுடைய பதிவில் மகாலெட்சுமி, `தன்னைப் போலவே, தன் எதிர்பாலினத்தவருக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கும் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில், வகுப்பறைகளிலிருந்து பாலினப் பாகுபாடுகளற்ற வாழ்க்கையை குழந்தைகள் பழக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முன்னெடுப்பு. தொடர்ந்து கலந்துரையாடுவதன் மூலம், எங்கள் பள்ளியில் இதை வலுப்படுத்தி, வளப்படுத்தி வருகிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆசிரியை மகாலட்சுமியை தொடர்புகொண்டு இதுகுறித்துப் பேசினோம்.

ஆசிரியை மகாலட்சுமி
ஆசிரியை மகாலட்சுமி
இதுபோன்ற நிகழ்வுகள் எங்கள் பள்ளியில் எப்போதும் நடைபெறுவதுதான். நான் இப்போது அதை உலகத்துடன் பகிர்ந்திருக்கிறேன், அவ்வளவே
ஆசிரியை மகாலட்சுமி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``சில வருடங்களுக்கு முன்புவரை, எங்கள் பள்ளியில் பயிலும் பெரும்பாலான பெண் குழந்தைகள் மாதவிடாய் காலத்தில் துணியையே உபயோகித்து வந்தனர். காரணம், அவரவர்களின் அம்மாக்களும் அவர்களின் குடும்பச் சூழல்களும்தான். இந்தப் பகுதியில் பெரும்பாலான பெண்கள், நாப்கின் குறித்த விழிப்புணர்வு இன்றியே இருக்கின்றனர் என்பதால், தங்களின் குழந்தைகளையும் துணிக்கே அவர்கள் பழக்கியிருக்கின்றனர்.

ஆசிரியை மகாலட்சுமி
ஆசிரியை மகாலட்சுமி

இந்த விஷயத்தை அறிந்துகொண்டபோது, குழந்தைகளை மட்டுமன்றி அவர்களின் அம்மாக்களையும் நாப்கின் உபயோகிக்கப் பழக்கப்படுத்த வேண்டும் என நான் முடிவெடுத்தேன். `அம்மாக்களை எப்படிப் பழக்கப்படுத்துவது?' என யோசித்துப் பார்த்தபோது, வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு நாப்கின் பற்றிப் புரியவைப்பதே அதற்கான முதல்படி எனப் புரிந்தது. இங்கு நான் குழந்தைகள் எனக் குறிப்பிடுவது, மாணவர்கள், மாணவிகள் என இருபாலரையும்தான். அப்படித் தொடங்கியதுதான் இந்தப் பயணம்.

மகாலட்சுமி ஆசிரியரைப்போல அனைத்து ஆசிரியர்களும் நல்லதையே எழுதினால், விளைவும் நல்லதாகவே அமையும்
குழந்தைகள் உளவியல் ஆலோசகர் பூங்கொடி பாலா

பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் என்றால் என்ன, ரத்தப்போக்கு எந்தளவுக்கு இருக்கும் என்பதெல்லாம் ஏற்கெனவே தெரியுமென்பதால் துணிக்கும் நாப்கினுக்குமான வேறுபாட்டைச் சொல்வதில் சிக்கலோ நெருடலோ இல்லை. ஆண் குழந்தைகளிடம் சொல்லும்போது, சின்ன நெருடல். காரணம், அவர்களுக்கு மாதவிடாய் குறித்து ஏற்கெனவே தெரிந்திருக்கவில்லை.

மாதம் ஒருமுறை தன் அம்மா வீட்டுக்குத் தூரமாவாள் என்பது மட்டுமே அவர்கள் அறிந்ததாக இருந்தது. வீட்டுக்குத் தூரமாவதென்றால் என்ன என்பதுகூட அவர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. ஆகவே அந்த நாள்களில் பெண் உடலில் என்ன நடக்கும் என்பதை அறிவியல் ரீதியாக நான் அவர்களுக்குப் பாடம் எடுக்கத் தொடங்கினேன்.

குறிப்பாக `மாதவிடாயின்போது பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படும். அதைக் கட்டுப்படுத்த உங்க வீட்டுப் பெண்கள் என்ன பொருளை உபயோகிக்கின்றனர் என்பதில் இருக்கிறது அவர்களின் சௌகரியமும் சங்கடமும். துணி என்றால் சிரமம். அது மிகவும் அசௌகரியமாக இருக்கும். நாப்கின், அசௌகரியத்தைக் குறைக்கும்' எனக் கூறுவேன்.

பள்ளி
பள்ளி

அரசுப் பள்ளி என்பதால், இலவச நாப்கின் பாக்கெட்டுகள் அட்டைப் பெட்டியில் இங்கு வரும். அவற்றை எடுத்துக்கொண்டு வருவதற்கு, ஆண் குழந்தைகளையே நான் அனுப்புவேன். பாடம் எடுக்கும்போது, நாப்கின் எப்படி இருக்கும் என்பதையும் அவர்களுக்கு `மாதிரி'யாகக் காட்டிவிடுவேன். பெண் பிள்ளைகளுக்கு, அதை எப்படி உபயோகிப்பது எனத் தனி வகுப்புகள் எடுப்பேன். இவற்றையெல்லாம் செய்யும்போது, குழந்தைகள் தங்களின் அம்மாக்களிடம் சென்று, `அம்மா நீயும் நாப்கின் பயன்படுத்து' என்று எந்தச் சங்கடமுமின்றி அவர்களைச் சொல்லவைக்க முடிந்தது. இந்தப் பகுதியில் நாப்கின் விற்பனை மிகக் குறைவு என்பதால், `அம்மாவுக்கு நாப்கின் வேணும் மிஸ்' என்று கேட்டுப் பெற்றுச் செல்லும் பிள்ளைகளும் இங்கு இருக்கின்றனர். அவர்களுக்கும்கூட நாங்கள் நாப்கின் வழங்குகிறோம்.

`பெண்களுக்கு மட்டும்தான் பதின்பருவத்தில் மாற்றங்கள் ஏற்படுமா, ஆண்களுக்கு மாற்றங்களே நிகழாதா' என்பதற்கான விளக்கத்தையும் மாணவ, மாணவிகளுக்கு நான் தருவேன். ஆண் உடலில் பருவ வயதில் என்ன மாதிரியான வேறுபாடுகள் ஏற்படும் எனச் சொல்லுவேன். குறிப்பாக ரோம வளர்ச்சி, குரல் வளத்தில் மாற்றம், வெள்ளைப்படுதல் போன்றவற்றைக் குறிப்பிடுவேன்.

திருவண்ணாமலையின் ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கான பள்ளி
திருவண்ணாமலையின் ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கான பள்ளி

அடுத்தடுத்த வகுப்புகளில், மாதவிடாயின்போது துணிகளை உபயோகிப்பதால் பெண்ணுக்கு என்னென்ன அசௌகரியங்கள் ஏற்படும், அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்பதைச் சொல்லுவேன். இப்படி ஆர்டராகச் சொல்லும்போது நாப்கின் பயன்பாட்டின் அவசியத்தையும், துணி உபயோகத்தின் பிரச்னைகளையும் குழந்தைகள் தெளிவாக உணர்ந்துகொள்வார்கள். தாங்கள் கேட்ட தகவல்களை வீட்டில் அம்மா, அக்கா, தங்கை என அனைவரிடமும் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.

Vikatan

வீட்டில் குழந்தைகள் இதுகுறித்துத் தொடர்ச்சியாகச் சொல்லும்போது, ஒருகட்டத்தில் அம்மாக்கள் என்னை அணுகிப் பேசுவார்கள். பெரும்பாலும், அவர்கள் என்னை அணுகுவதற்கு முன்பாகவே நான் அவர்களை அணுகிவிடுவேன். அவர்களிடம் நாப்கின் உபயோகத்தைப் பேசுவது எளிது என்பதால், சீக்கிரமாக விஷயத்தைப் புரிய வைத்துவிடுவேன். இப்படியாக துணி உபயோகத்திலிருந்து நாப்கின் உபயோகிக்கத் தொடங்கிய எத்தனையோ குடும்பங்களை நான் பார்த்துள்ளேன். இந்த மாற்றங்கள்தான் எங்களது வெற்றி.

மாதவிடாய்
மாதவிடாய்

எல்லா ஆண்களின் வாழ்விலும் அம்மா, சகோதரி, மனைவி, மகள், தோழி என ஏதாவதோர் உறவு நிலையில் பெண்கள் இருக்கிறார்கள். அப்படி எதிர்காலத்தில் இந்த மாணவர்கள் தங்கள் வாழ்வில் உள்ள பெண்களைக் காணும், புரிந்துகொள்ளும் கண்ணோட்டம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கான அடிப்படையை, அவர்களின் சக வகுப்பு மாணவிகளை, தோழிகளை வைத்தே அவர்களுக்குள் இப்போதே கட்டமைக்கிறோம். அதற்கான முன்னெடுப்பாகவே எங்கள் பள்ளியில் இதையெல்லாம் நாங்கள் செய்கிறோம்" என்றார் புன்னகையுடன்.

குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலாவிடம், பள்ளியின் இந்த முன்னெடுப்பு குறித்துப் பேசினோம்.

குழந்தைகள் உளவியல் ஆலோசகர் பூங்கொடி பாலா
குழந்தைகள் உளவியல் ஆலோசகர் பூங்கொடி பாலா

``பதின்பருவத்தில் உடல் சார்ந்த மாற்றங்கள் நிகழும்போது, தன் எதிர்பாலினத்தவருக்கும் இதேபோன்ற மாற்றம் ஏற்படுமா என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் குழந்தைகளுக்கு ஏற்படும். பெண் குழந்தைகளின் உடலமைப்பிலேயே மாற்றங்கள் ஏற்படும் என்பதால், ஆண் குழந்தைகளுக்கு அது ஏன் எனத் தெரிந்துகொள்ளும் எண்ணம் அதிகமிருக்கும். ஹார்மோன் மாற்றங்களால் நிகழும் அறிவியல் ரீதியான மாற்றம் இது. அப்போதே நாம் அவர்களுக்கு அறிவியில் ரீதியான புரிந்துணர்வைக் கொடுத்துவிட்டால், அவர்களும் அதை எளிதாகக் கடந்துவிடுவார்கள். இது இல்லாதபட்சத்தில், மாணவர்கள் வேறு வழிகளில் விஷயத்தை தெரிந்துகொள்ள முயல்வார்கள். அவர்களின் எண்ணம் தடுமாறத் தொடங்கும். அப்படித் தடுமாறும்போது, நடத்தை பிரச்னைகள் ஏற்படலாம்.

``இந்த முன்னெடுப்பை, ஆசிரியர்கள் சரியாக, கவனமாக முன்னெடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்"
உளவியல் ஆலோசகர் பூங்கொடி பாலா

பெண் குழந்தைகளுக்கு உடல்ரீதியான மாற்றங்கள் ஏற்படும்போது, தொடக்கக் காலத்தில் கூச்சப்படுவர். அதுவரை இயல்பாகப் பழகிய தன் தோழர்களிடம் சற்று அசௌகரியமாகவும் கூச்சமாகவும் உணர்வார்கள். குறிப்பாக மாதவிடாய் நேரத்தில் மனரீதியான மாற்றங்கள் (மூட் ஸ்விங்ஸ்) இருக்கும் என்பதால், சற்று அதிகமாகத் திணறுவார்கள். மாதவிடாய், முழுக்க முழுக்க வயதுக்கான மாற்றம்தான் என்றும், பதின்பருவத்தில் இவற்றையெல்லாம் மனதளவில் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும் இவர்களுக்குப் பெற்றோரும் ஆசிரியரும் முறையாகச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இல்லையெனில், மேற்சொன்ன நடத்தை பிரச்னைகள் மாணவிகளுக்கும் ஏற்படும்.

நாப்கின்
நாப்கின்

விஷயம் ரொம்ப சிம்பிள்! குழந்தைகள், எழுதப்படாத காகிதங்கள். நாம் (பெற்றோர், ஆசிரியர்) என்ன எழுதுகிறோமோ... அதுவே அவர்கள்! மகாலட்சுமி ஆசிரியரைப்போல அனைத்து ஆசிரியர்களும் நல்லதையே எழுதினால், விளைவும் நல்லதாகவே அமையும். வரவேற்கத்தக்க இந்த முன்னெடுப்பை, ஆசிரியர்கள் சரியாக, கவனமாக முன்னெடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்" என்றார்.

Vikatan

வரும் தலைமுறை எதிர்பாலினத்தவர் மீது பாகுபாடு காட்டாமல் அவர்களை புரிந்துணர்வோடும் மரியாதையோடும் நன்மதிப்போடும் நடத்தினால், அதைவிட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு