Published:Updated:

`காபி டே' சித்தார்த்தா தற்கொலை முதல் தீபிகாவின் அழுகை வரை! - 2019-ன் உளவியல் சிக்கல்கள்

`மனசு சரியில்ல' என்ற சின்ன வாக்கியத்தில் தொடங்கும் இந்த மனநலப் பிரச்னை, மனஅழுத்தமாக உருவெடுத்து, சில நேரங்களில் தற்கொலையில் சென்று முடியும் ஆபத்துள்ளது.

உளவியல் சிக்கல்கள் 
#VikatanRewind2019
உளவியல் சிக்கல்கள் #VikatanRewind2019

இந்த உலகத்தில் உள்ளவர்களின் கை ரேகைகள் மட்டுமல்ல, மனநிலையும் வெவ்வேறுதான். மனிதர்களின் உளவியலைப் புரிந்துகொள்வதென்பது அவ்வளவு எளிதல்ல. அது நுட்பமான, அதே நேரத்தில் உணர்வுபூர்வமான விஷயமும்கூட.

ஒருவரின் உடலும் மனமும் நல்ல நிலையில் இருந்தால்தான் அவரால் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். ஆனால், தற்போதெல்லாம் `உடம்பு சரியில்ல என்பதைவிட `மனசு சரியில்ல' என்பதைத்தான் அதிகம் கேட்க முடிகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள்கூட இப்படிச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்பது வேதனைக்குரியது.

Representational Image
Representational Image

`மனசு சரியில்ல' என்ற சின்ன வாக்கியத்தில் தொடங்கும் இந்த மனநலப் பிரச்னை, மனஅழுத்தமாக உருவெடுத்து, சில நேரங்களில் தற்கொலையில் சென்று முடியும் ஆபத்துள்ளது.

ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஓர் உயிர் தற்கொலையால் பறிபோகிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 12 - 29 வயதுக்குட்பட்டவர்களின் இறப்புகளுக்கு இரண்டாவது காரணமாகத் தற்கொலை அமைகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO).

உலக சுகாதார நிறுவனத்தால் 2019-ம் ஆண்டுக்கான உலக மனநல தினத்தின் (அக்டோபர் 10) தீம் ஆக `தற்கொலைத் தடுப்பு' எடுத்துக்கொள்ளப்பட்டு, தற்கொலைகளைத் தடுப்பதற்கான முறைகள் உலகளவில் விவாதிக்கப்பட்டன.

தற்கொலை எண்ணத்துல இருக்கிறவங்களுக்கு அட்வைஸ் வேண்டாம், ஆனால்..! #WorldMentalHealthDay

2019-ல் நிகழ்ந்த தற்கொலைகளில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியவை இங்கே...

சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை:

கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப், சென்னை ஐ.ஐ.டி-யில் படித்து வந்தார். இவர் ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஹாஸ்டல் ரூமில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு இன்டெர்னல் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், பேராசிரியர்கள் கொடுத்த மன அழுத்தத்தின் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்தார் என்று வழக்கு பதியப்பட்டது.

ஃபாத்திமா லத்தீப் அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுப்பவர். தைரியமான பெண். தனக்குப் பேராசிரியர்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தைப் பெற்றோரிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இருப்பினும், இவ்வளவு தைரியமான, புத்திசாலியான ஒரு பெண்ணை சூழல் அழுத்தம் தற்கொலைக்குத் தள்ளிய புள்ளி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

பாத்திமா
பாத்திமா

இதுபோல் மற்றொரு சம்பவம் கர்நாடகாவில் நடந்தது. பெங்களூரில் அமிர்தா பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த மாணவர் ஹர்ஷா. இவர் கல்லூரியின் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இதற்குக் காரணம், கல்லூரி வளாகத்தில் அவர் எதிர்கொண்ட அழுத்தமும் அது தந்த மன அழுத்தமும்தான்.

கல்லூரியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், ஹாஸ்டலில் உணவு, தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளதெனவும் மாணவர்களுடன் சேர்ந்து ஹர்ஷா போராட்டம் நடத்தியுள்ளார். இதனால் அவரை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகம் அவருக்குக் கிடைத்த இரண்டு வேலைவாய்ப்புகளையும் ரத்து செய்வதாகக் கூறி மிரட்டியுள்ளது. இதனால் மனம் உடைந்து ஹர்ஷா தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்பட்டது.

இதுபோல் மாணவர்கள் பலர், தங்கள் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் தாங்கள் உள்ளாக்கப்படும் அடக்குமுறைகள், அழுத்தம் காரணமாக மனஉளைச்சல் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் தற்கொலை முடிவை எடுப்பது தொடர்கதையாகி வருவது வேதனை தரும் விஷயமாக உள்ளது. இது, கவனம் கொடுத்துக் களையப்பட வேண்டிய பிரச்னை.

கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவின் தற்கொலை:

கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளரான வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மூத்த மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. தொழிலதிபரான இவர், இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பிரபலமான கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளர். இவரது நிறுவனத்தில் 30,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தன் நிறுவனத்தில் ஏற்பட்ட சமாளிக்க முடியாத நஷ்டம் காரணமாக உருவான மன உளைச்சலில் இவர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

வி.ஜி.சித்தார்த்தா
வி.ஜி.சித்தார்த்தா

இறுதியாக அவர் எழுதிய கடிதத்தில், `கடும் முயற்சிகளை மேற்கொண்டும் எனது தொழிலை லாபகரமானதாக்க முடியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆறு மாதங்களுக்கு முன்பு நான் ஒரு வர்த்தகத்தை மேற்கொண்டிருந்தேன். இதற்காக என் நண்பர் ஒருவரிடமிருந்து பெரும் பணத்தைக் கடனாகப் பெற்றேன். ஆனால், நான் விற்ற பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு எனது பங்குகளை வாங்கிய ஒருவர் என்னை மிகவும் நெருக்குகிறார். நீண்ட காலம் நான் போராடிவிட்டேன். இனிமேலும் என்னால் போராட முடியவில்லை. எனவே, எனது போராட்டத்தை நிறுத்திக்கொள்ளத் தீர்மானித்துவிட்டேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

தொழிலில் ஏற்ற இறக்கம் இயல்பு. ஆனால், பிறருக்கு முன்னுதாரணமாக இருந்த ஒரு பிசினஸ்மேன் அதற்காகத் தற்கொலை முடிவெடுத்தது அதிர்ச்சியளித்த துயரம்.

`மன்னர் வகையறா' படத் துணை நடிகை யாஷிகா தற்கொலை:

`மன்னர் வகையறா' படத்தில் துணை நடிகையாகவும் பல நெடுந்தொடர்களிலும் நடித்து வந்த 21 வயதான நடிகை யாஷிகா சென்னையில் தன் ஆண் நண்பர் மோகன்பாபுடன் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்துள்ளது. இதனால் யாஷிகா வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார்.

யாஷிகா
யாஷிகா

அதற்கு முன்பாக, `நம்பி வந்த என்னை ஏமாற்றி, திருமணம் செய்துகொள்ளாமல் கொடுமைப்படுத்திய காதலன் மோகன்பாபுக்கு, நான் இறந்த பிறகு தக்க தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்' எனத் தன் அம்மாவுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி இருந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். ஒருவர் துயரமான சூழலில் தற்கொலை முடிவு எடுக்கும்போது, கூடவே தனது அந்த நிலைக்குக் காரணமானவரை பழிவாங்கும் நடவடிக்கையாகவும் அதை நினைத்துவிடுவது பரிதாபம். குற்றவாளிகளைத் தண்டிக்க சட்டம் இருக்கும்போது, தன் உயிரைக் கொடுத்து ஒருவரை தண்டிக்க நினைக்கும் மனநிலை மிகவும் வருத்தத்துக்கு உரியது.

பிரபல பெண் தொழிலதிபரின் தற்கொலை:

லங்காலிங்கம் என்பவர் பிரபல கார் விற்பனை நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரின் மனைவி ரீட்டா அதே நிறுவனத்தில் இணை இயக்குநராக இருந்தார். இவர் தன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரும் மனஅழுத்தத்தின் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

ரீட்டா
ரீட்டா

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் தற்கொலை:

வி.பி.சந்திரசேகர் இந்திய அணிக்காக 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 7 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 88 ரன்கள் எடுத்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேனான இவர் தமிழக அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 81 ஆட்டங்கள் ஆடி 4,999 ரன்கள் குவித்துள்ளார். ஓர் ஆட்டத்தில் 56 பந்தில் சதம் அடித்ததும் அடங்கும். தமிழக அணிக்குப் பயிற்சியாளராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார். மேலும், தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்து வந்தார்.

இவர், பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட மனஅழுத்தத்தின் பிடியில், தன் வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிக பரபரப்பை உண்டாக்கியது. விடாமுயற்சியும் மன வலிமையும் ஒரு விளையாட்டு வீரரின் அடிப்படை குணங்கள். ஆனால், அப்படிப்பட்ட ஒருவரே இப்படி ஒரு முடிவு எடுத்தது, மிகுந்த அதிர்ச்சியளித்தது.

வி.பி.சந்திரசேகர்
வி.பி.சந்திரசேகர்

இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் எல்லாம், மனஅழுத்தம் பற்றிய விழிப்புணர்வை, கலந்துரையாடல்களை இந்த வருடம் பொதுத்தளங்களில் எழுப்ப வைத்தன. பொதுவாக, நாம் உடல் நலத்துக்குத் தரும் முக்கியத்துவத்தை மன நலத்துக்குக் கொடுப்பதில்லை என்பதே உண்மை. ஒரு பல் வலி என்றாலோ, சிறு காய்ச்சல் என்றாலோ மருத்துவரை நாடி ஓடும் நம்மில் எத்தனை பேர் மன அழுத்தத்தின்போது மனநல மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ சென்று பார்த்துள்ளோம்? நாம் மன உளைச்சலிலிருந்து விடுபட யாராவது மனநல மருத்துவரைச் சென்று பார்க்கச் சென்னால் உடனே அவரிடம், `எனக்கு என்ன பைத்தியமா?' என்று சண்டைக்குப் போவோம்.

ஏனென்றால் நம்மில் பெரும்பாலானவர்களின் மனதில் பதிந்துள்ள ஒன்று, மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்தான் மனநல மருத்துவரிடம் செல்வார்கள் என்பது. இதுவே பல உளவியல் பிரச்னைகள் சரிசெய்யப்படாமல் போவதற்குக் காரணமாக உள்ளது. ஒருவருக்கு ஏற்படும் மன உளைச்சலை அதன் ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட்டால் அது தற்கொலை வரையில் செல்ல வாய்ப்பு உண்டாகாது.

இதை மருத்துவர் சொல்வதைவிடவும், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் சொல்லும்போது அனைவரின் மனதிலும் எளிதாகப் பதியும். இது ஒரு மருந்தில்லா சிகிச்சை முறை. அதுவும் அந்த மன உளைச்சலிலிருந்து மீண்டவர்கள் பிரபலங்கள் என்றால்..?

2019-ல் தங்கள் மன உளைச்சல் பற்றி மனம் திறந்த பிரபலங்களின் நம்பிக்கை பகிரல்கள் இதோ உங்களுக்காக!

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்:

``எனக்குக் குடும்பத்திலும் காதலிலும் எந்தப் பிரச்னையும் இல்லை என்றாலும் என்னவென்றே தெரியாத காரணத்தால் மன உளைச்சலுக்குச் சென்றுள்ளேன். என் குடும்பத்தினர் என்னுடன் தங்கிவிட்டுத் திரும்பிச் செல்லும்போது எனக்கு மன அழுத்தம் ஏற்படும். ஒரு முறை என் அம்மாவை விமான நிலையத்துக்கு வழியனுப்பச் சென்றபோது அவர் மடியில் படுத்துக் கதறி அழுதுள்ளேன். பிறகு, அவர் பரிந்துரையின்படி ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று இப்போது குணமடைந்துள்ளேன்.

மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் தனக்கு உதவி அல்லது சிகிச்சை தேவையெனக் கேட்க மாட்டார்கள். அதேபோல், அவர்களின் நண்பர்கள், `நீ நன்றாக இருக்கிறாய், கவலைப்பட வேண்டாம்' என ஆறுதல் கூறுவது மட்டுமே அவர்களுக்கு முழுமையான தீர்வைத் தராது. சோகமாக இருப்பது, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது என இரண்டும் வெவ்வேறான மனநிலை. என்னுடைய நிலை பற்றி நான் பேசும்போது, `நீ பாலிவுட்டின் சக்சஸ்ஃபுல் ஹீரோயின். நல்ல வருமானம், கார், வீடு, பணம், புகழ் எல்லாம் இருக்கும்போது வேறு என்ன வேண்டும். உனக்கு எப்படி மன அழுத்தம் ஏற்படும்' என்ற கேள்வியையே முன்வைத்தனர். உடல்நலன் மற்றும் ஃபிட்னஸ் குறித்தே மக்கள் பேசுகின்றனர். உடல்நலம் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு மனநலமும் முக்கியம்."

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா:

`எனக்கு இருந்த மன அழுத்தம், உடல் மற்றும் மனரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் சில காலம் நடிப்பிலிருந்து விலகியிருந்தேன். இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன். காபிக்கு அடிமையாக இருந்த எனக்கு, ஆயுர்வேத சிகிச்சை எடுப்பது கஷ்டமாக இருந்தது. என்றாலும், என் முயற்சியில் என் மனநலத்தை மீட்டேன்.'

இலியானா டி'க்ரூஸ்:

``எனக்கு 'உடல் டிஸ்மார்பிக் குறைபாடு (BDD)' என்ற மனநலக் கோளாற்றால் என் உடலைப் பற்றித் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. இதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளானேன். பிறகு முறையான சிகிச்சை மூலம் இதிலிருந்து விடுபட்டேன்'.

இலியானா டி'க்ரூஸ்
இலியானா டி'க்ரூஸ்

அக்‌ஷரா கவுடா (`துப்பாக்கி', `போகன்' போன்ற படங்களில் நடித்த குணச்சித்திர நடிகை)

என் வாழ்க்கை நல்லாத்தான் போய்ட்டு இருந்துச்சு. நிறைய படங்களில் வாய்ப்பு, அன்பான பெற்றோர்னு எந்தக் குறையும் இல்லை. ஆனால், எனக்கு மனசுல ஏதோ ஒரு கவலை இருந்துகிட்டே இருந்துச்சு. அதனால என்னை நானே தனிமைப்படுத்திக்க ஆரம்பிச்சேன். ராத்திரியெல்லாம் தூக்கமே வராது. மனசுல பதற்றம் (Anxiety) இருந்துகிட்டே இருந்தது. பதற்றத்தைத்தான் என் பிரச்னைக்கான முதல் அறிகுறியாக உணர்ந்தேன். ஆனாலும், எட்டு மாதம் வரை என்ன பிரச்னைன்னு உணரவே முடியல. பின்பு மன உளைச்சல் என்று உணர்ந்து சிகிச்சை பெற்று இதிலிருந்து வெளியே வந்தேன்.''

கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்:

தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் சம்பந்தமான பிரச்னைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசி, கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக ஓய்வு அறிவித்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்.

விராட் கோலி
விராட் கோலி

விராட் கோலி:

தன் மன உளைச்சல் பற்றி வெளிப்படையாகப் பேசிய மேக்ஸ்வெல்லை பாராட்டிய இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ``2014 இங்கிலாந்து தொடரின்போது எனக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது. அப்போது என்னுடைய கிரிக்கெட் உலகம் அழிந்துவிட்டதாக உணர்ந்தேன். ஆனால், என்ன செய்ய வேண்டும், இதுகுறித்து யாரிடம் சொல்ல வேண்டும் என்பது குறித்து ஏதும் தெரியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்படி 2019-ல் பல பிரபலங்கள் தாங்கள் எதிர்கொண்ட மனஅழுத்தம் மற்றும் அதிலிருந்து விடுபட்டது பற்றிப் பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

``அதை ஏற்றுக்கொள்ள முதலில் மிகவும் சிரமப்பட்டேன்"- மனம் திறந்த இலியானா டி'க்ரூஸ்!

உளவியல் டேட்டா!

* உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி உலக அளவில் 45 கோடி மக்கள் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் நான்கில் ஒருவர் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

* உலகம் முழுவதும் 10% கர்ப்பிணிப் பெண்களும், பிரசவித்த பெண்களில் 13% பேரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் காணப்படுகிறது. அதாவது, 15% கர்ப்பிணிப் பெண்களும் பிரசவித்த பெண்களில் 19.8% பேரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Representational Image
Representational Image

* மனஅழுத்தம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு 55 விநாடிக்கும் ஒரு மாணவர் தற்கொலைக்கு முயல்கிறார். இந்தியாவில் 1.2% குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குச் சரியான மருத்துவ உதவி கிடைக்காத பட்சத்தில், அது உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனையாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தத்திலிருந்து விடுபட..!

மன அழுத்தம் பற்றியும், தற்கொலை எண்ணம் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றியும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் பற்றியும் மனநல மருத்துவர் சுவாதிக் சங்கரலிங்கதிடம் பேசினோம்.

``கோப்பிங் ஸ்கில்ஸ் (Coping Skills) எனப்படும் சமாளிக்கும் திறன் குறைவதே தற்கொலை எண்ணம் வருவதற்கும், பலர் தற்கொலை செய்துகொள்வதற்குமான முக்கியக் காரணம். ஒருவருக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் போன்றவற்றை அதிகம் கவனிக்காதபோதும் அது அவரைத் தற்கொலை எண்ணத்துக்குத் தூண்டலாம்.

மனநல மருத்துவர் சுவாதிக் சங்கரலிங்கம்
மனநல மருத்துவர் சுவாதிக் சங்கரலிங்கம்

வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி, ஏமாற்றம் போன்ற நேரங்களிலும், வாழ்வின் லட்சியமாக நினைத்த ஒன்று கைகூடாமலோ, கைவிட்டோ போகும் தருணத்திலும் சம்பந்தப்பட்ட நபர் மன அழுத்தத்துக்கு உள்ளாகலாம். மேலும், ஒருவர் அதிக அடக்கு முறைக்கு உட்படும்போதோ, மற்றவர்களால் தான் முழுவதுமாக ஒதுக்கப்படுவதாகக் கருதும்போதோ ஏற்படும் மன அழுத்தம் அவரைத் தற்கொலை வரை கொண்டு செல்லலாம்.

எனவே, இதுபோன்ற மனநிலையில் உள்ளவர்களை நண்பர்களோ, குடும்பத்தினரோ அதிக கவனம் எடுத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். `தற்கொலை செய்துகொள்ளலாம்போல இருக்கிறது' என்று யாராவது சொல்லும்போது, அவரின் எண்ணத்தை மாற்றுவதாக நினைத்து நாம் அறிவுரை சொல்லுவதில் பலன் கிடைக்காது. முதலில் பாதிக்கப்பட்ட நபரைப் புரிந்துகொண்டு அவரிடம் அறிவுரை தொனி இல்லாமல் பேச வேண்டும். அறிவுரையாக இல்லாமல் `இந்த நிலை மாறும்' என்பதை மட்டும் அவருக்குப் புரிய வைக்க வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு ஏமாற்றம், தோல்விகளைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையையும் பிரச்னைகளைச் சமாளிக்கும் திறனையும் மேம்படுத்திக்கொள்ளக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

போதைப் பழக்கமும் தற்கொலைக்குத் தூண்டும் ஒரு முக்கிய காரணம். ஒருவர் மன அழுத்தத்தில் உள்ள நிலையில் அதனுடன் போதையும் சேரும்போது அவர் என்ன முடிவெடுக்கிறார் என்று அவருக்கே தெரியாத நிலையில் ஏதாவது விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம்.

மனநலம்
மனநலம்

ஒருவர் எப்போதும் விரக்தியாகப் பேசிக்கொண்டும் தனிமையை நாடிக் கொண்டும் இருக்கிறார் என்றால் அவரிடம் நேரடியாகச் சென்று தற்கொலை எண்ணம் இருக்கிறதா என்று கேட்பதில் தவறில்லை. இது அவரின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவரை வழி நடத்த உதவும். அப்படி ஒருவர் அதீத மன அழுத்தத்தில் இருக்கும்போது அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதன் மூலம் அவரை மீண்டும் ஒரு நல்ல மனநிலைக்குக் கொண்டு வரலாம்" என்றார்.

மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பே. நாம் அதிலிருந்து வெளிவருவதற்கான வழியைத்தான் தேட வேண்டுமே தவிர, வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

`வரலாறு முக்கியம் அமைச்சரே' என்றால், எதிர்காலம் அதைவிட முக்கியம். எனவே இனிதே வரும் 2020-ல் மனநலம் சார்ந்த விழிப்புணர்வை அனைவரும் ஏற்படுத்திக்கொள்வோம். எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை மனதில் வைப்போம்.