Published:Updated:

Covid Questions: கோவிட்டிலிருந்து மீண்டு 2 மாதங்கள்; இன்னும் முதுகுவலி குறையவில்லை; என்ன செய்வது?

Covid Questions
Covid Questions ( AP Illustration/Peter Hamlin )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

எனக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து குணமாகி இரண்டு மாதங்களாகின்றன. ஆனாலும் இன்னும் முதுகுவலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு என்ன காரணம்? நான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

- சின்னசாமி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் முத்துச்செல்லக்
குமார்
மருத்துவர் முத்துச்செல்லக் குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.

``உங்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகின்றன. உங்களுடைய வயதைக் குறிப்பிடவில்லை. வயதாக, ஆக எலும்புத் தேய்மானம் காரணமாக பலருக்கும் முதுகுவலி வருவது சகஜமான ஒன்று. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முதுகுவலி, கோவிட் தொற்றிலிருந்து குணமானவர்கள் சந்திக்கும் `போஸ்ட் கோவிட்' அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம்.

கொரோனா தொற்றிலிருந்து குணமானாலும் பலருக்கும் அதன் பிறகு சில மாதங்களுக்கு உடல்வலி, முதுகுவலி உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுவதை இரண்டாவது அலையில் அதிகம் பார்த்தோம். வைரஸானது உடலுக்குள் நுழைந்ததும் எதிர்ப்பாற்றல் புரதங்கள், எதிர்ப்பாற்றல் செல்களின் செயல்பாடுகளின் காரணமாகத்தான் பல்வேறு திசுக்கள் மற்றும் தசைகளில் இதுபோன்ற பாதிப்புகள் வருகின்றன.

Covid Questions: தொட்டாலே நமக்கு தொற்றுமா கோவிட்?

முதுகுவலிக்கான காரணங்கள் பல. அங்குள்ள தசைகளில் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாகவோ, முதுகெலும்புத் தொடரில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவோ இருக்கலாம். வலி வரும் போது பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொண்டாலே வலி குறைந்துவிடும். அல்லது ஒத்தடம் கொடுக்கலாம்.

உங்கள் விஷயத்தில் நீங்கள் கொரோனாவிலிருந்து குணமாகி இரண்டு மாதங்களே ஆவதால் ஜிம்முக்குப் போவது, டிரெட்மில்லில் வொர்க் அவுட் செய்வது போன்றவற்றையெல்லாம் தவிர்ப்பது நல்லது. அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்கக் கூடாது. நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு முதுகுவலி வரலாம். அதனால் நீண்ட நேரம் ஒரே பொசிஷனில் உட்கார்ந்திருக்காமல் அவ்வப்போது சிறு பிரேக் எடுத்துக்கொண்டு நடக்க வேண்டும். அதே போல படுத்திருக்கும்போதும் ஒரே பொசிஷனில் படுத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வயதானவர்களுக்கு நீண்ட நாள்களாக முதுகுவலி தொடர்ந்தால் முதுகெலும்புப் பகுதிக்கு ஸ்கேன் பரிசோதனை தேவைப்படலாம். இரண்டு எலும்புகளுக்கு இடையிலுள்ள வட்டு விலகுதல் உள்ளிட்ட வேறு சில பிரச்னைகளாலும் முதுகுவலி வரலாம். எனவே வலி குறையாமல் தொடர்கிறது என்றால் எலும்பு, மூட்டு மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

Back Pain
Back Pain
Image by mohamed Hassan from Pixabay
Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்டால் இணை நோய்க்கான மருந்துகளை நிறுத்த வேண்டுமா?

முதுகுவலிக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தொற்று ஏற்பட்டவர்கள் மூன்று மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மற்றபடி வேறு பிரச்னைகளுக்காக எடுத்துக்கொண்டிருக்கும் எந்தச் சிகிச்சைகளையும் நிறுத்தத் தேவையில்லை.

வலி குறையவில்லை என்பதற்காக அதை உடனே குறைக்க ஊசி போடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். கோவிட் தொற்றின் தொடர் விளைவாக வந்த முதுகுவலி என்றால் அது படிப்படியாகத்தான் குறையும். வேறு பிரச்னைகளின் காரணமாக வந்தது என்றால் அதற்கான காரணம் அறிந்து, சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!

அடுத்த கட்டுரைக்கு