Published:Updated:

``செயற்கை முறை கருத்தரித்தல் குழந்தையின் ஆயுளைப் பாதிக்குமா?" - மகப்பேறு மருத்துவரின் விளக்கம்

ஐ.வி.எஃப் கருத்தரித்தல்
ஐ.வி.எஃப் கருத்தரித்தல்

ஐ.வி.எஃப் கருத்தரித்தல் மூலம் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம், பிறந்து ஒரு வருடத்திற்குள் மிக அதிகம் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.

இயற்கையான முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ளமுடியாத தம்பதிகளுக்கு, செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள உள்ள ஒரு வாய்ப்புதான் ஐ.வி.எஃப் (IVF - In Vitro Fertilisation) எனப்படும் செயற்கை முறை கருத்தரித்தல்.

ஐ.வி.எஃப் குழந்தை
ஐ.வி.எஃப் குழந்தை

செயற்கைக் கருத்தரித்தலுக்கென உள்ள ஐ.வி.எஃப் மருத்துவ ஆய்வகங்களில், பெண்ணின் கருமுட்டை மற்றும் ஆணின் விந்தணுக்களைத் தனித்தனியே பெற்று, அவற்றை இணையவைத்து, பிறகு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்துகின்றனர். அந்தக் கரு வளர்ந்து, "டெஸ்ட் டியூப் பேபி" என்று சொல்லப்படும் ஐ.வி.எஃப் குழந்தையாகப் பிறக்கிறது.

குழந்தையின்மை ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுத்துவரும் இன்றைய காலகட்டத்தில், அதற்கான ஒரு தீர்வாக ஐ.வி.எஃப் முறை உள்ளது. ஆனால், சமீபத்தில் வெளியான ஐ.வி.எஃப் கருத்தரித்தல் பற்றிய ஓர் ஆய்வு, அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

குழந்தை
குழந்தை

ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 'ஐ.வி.எஃப் கருத்தரித்தல் மூலம் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம், பிறந்து ஒரு வருடத்திற்குள் மிக அதிகம் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. இயற்கையாகவே கருத்தரிக்கப்பட்டு பிறந்த குழந்தைகளோடு ஒப்பிடும்போது, இந்தக் குழந்தைகளின் இறப்பு விகிதம் 45 சதவிகிதம் அதிகமாம்.

வாட்ஸ்அப், சாட், அடல்ட்ஸ் ஒன்லி வீடியோக்கள் சிதைக்கும் தாம்பத்யம்! விடுபட ஆலோசனைகள்

ஸ்வீடனில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 30 வருடங்களில் பிறந்த 28 லட்சம் குழந்தைகளில், 43,500 குழந்தைகள் ஐ.வி.எஃப் மூலம் பிறந்துள்ளனர். அதில் 7,236 குழந்தைகள், பிறந்து 7 வருடத்திற்குள்ளாகவே இறந்துள்ளனர்' என்றும் "ஐ.வி.எஃப் முறையைவிட ஐ.சி.எஸ்.ஐ (ICSI) என்ற இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் விந்து ஊசி மூலம் கருத்தரிக்கப்படும் குழந்தைகளில் இந்த ஆபத்து குறைவு" என்றும் தெரியவந்துள்ளது.

ஐ.வி.எஃப் கருத்தரித்தல்
ஐ.வி.எஃப் கருத்தரித்தல்

இந்த மருத்துவ ஆய்வின் முடிவுகள், "ஜர்னல் ஃபெர்டிலிட்டி அண்ட் ஸ்டெரிலிட்டி (Journal Fertility and Sterility)" இதழில் வெளியாகியுள்ளது.

ஐ.வி.எஃப் முறை மூலம் பெற்றுக்கொள்ளப்படும் குழந்தைகளின் இறப்பு பற்றியும், ஐ.சி.எஸ்.ஐ விந்து ஊசி பற்றியும் குழந்தயின்மை சிறப்பு மருத்துவர் கனிமொழியிடம் பேசினோம்.

"இயற்கையான முறையில் கருவுற முடியாத தம்பதியினர், செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான முறைகள்தான், ஐ.வி.எஃப் மற்றும் ஐ.சி.எஸ்.ஐ விந்து ஊசி. ஐ.வி.எஃப் வழியே பிறக்கும் குழந்தைகள், பிறந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே இறந்துபோக அதிக வாய்ப்புள்ளது என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

குழந்தயின்மை சிறப்பு மருத்துவர் கனிமொழி
குழந்தயின்மை சிறப்பு மருத்துவர் கனிமொழி

அதில் முதலாவது, ஐ.வி.எஃப் முறையில் கருவுற்ற பெண்களின் வயது. 40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு, கருத்தரித்தலில் சில பிரச்னைகள் உள்ளன. எனவே, இவர்கள் ஐ.வி.எஃப் மூலம் கருத்தரித்து குழந்தை பெறும்போது, பிறக்கும் குழந்தை ஆரோக்கியக் குறைபாடுகளுடனோ அல்லது குறைப்பிரசவத்திலோ பிறக்கலாம்.

அடுத்தது, ஐ.வி.எஃப் முறையில் உள்ள மல்டிபிள் பிரெக்னன்சி (Multiple Pregnancy). இதில் கருவுறும் பெண்களுக்கு, சில நேரங்களில் ஒரே கருவுறுதலில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இயற்கையாக நிகழும் கருத்தரித்தலில் இரட்டைக் குழந்தைகள் உருவாக உள்ள வாய்ப்பு 5 சதவிகிதம்தான். ஆனால், செயற்கை முறை கருத்தரித்தலில் இதுபோன்ற இரட்டைக் குழந்தைகள் உருவாகும் வாய்ப்பு 20 முதல் 25 சதவிகிதம்வரை உள்ளது.

ஐ.வி.எஃப் கருத்தரித்தல்
ஐ.வி.எஃப் கருத்தரித்தல்

மேலும், பிரசவம் ஏழு அல்லது எட்டு மாதங்களிலேயே நடந்துவிடுவதால், குழந்தை முழுமையாக வளர்ச்சியடையாமல் (Premature baby) இருக்கும். இப்படிப் பிறக்கும் குழந்தைகளை தொடர்ந்து பிழைக்கவைப்பது சற்று சிரமம்.

மேலும், 40 வயதிற்கு மேலுள்ள பெண்களையும் பலமுறை ஐ.வி.எஃப் சிகிச்சையில் தோல்வியடைந்த பெண்களையும் கருத்தரிக்க வைப்பதற்கு, விந்தணுக்களுடன் இணைக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருவை கருப்பையினுள் செலுத்தும்போது, அங்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உண்டாகிறது.

ஐ.வி.எஃப் கருத்தரித்தல்
ஐ.வி.எஃப் கருத்தரித்தல்

ஐ.வி.எஃப் முறையில் கருத்தரிக்கும் பெண்களுக்கு, அவர்களின் வயதைப் பொறுத்து கர்ப்பகால சர்க்கரைநோய், ஹைப்பர் டென்ஷன் போன்ற சில பாதிப்புகள் வரும் என்பதால், இவையும் பிறக்கப்போகும் குழந்தையைப் பாதிக்கும். தானமாகப் பெற்ற கருமுட்டைகளைக் கொண்ட பெண்களுக்கு ஐ.வி.எஃப் மூலம் பிறக்கும் குழந்தைகள் பலவீனமாகவும், ஆரோக்கியக் குறைபாட்டுடனும் இருக்கலாம்.

``தனிமையும் ஓர் உயிர்க்கொல்லிதான்!'' - அலெர்ட் அலசல்

இதுபோன்ற காரணங்களால் ஐ.வி.எஃப் முறையில் பிறக்கும் குழந்தைகள், பிறந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே இறக்க நேரிடலாம். ஆனால், ஐ.வி.எஃப் மூலம் நிறைய தம்பதியினர் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குழந்தை
குழந்தை

ஐ.வி.எஃப், ஐ.சி.எஸ்.ஐ இரண்டு சிகிச்சை முறைகளுமே அவற்றுக்கென உள்ள முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட தனிப்பட்ட மருத்துவ ஆய்வகங்களில் செய்யப்படுவதால், இங்கு உருவாகும் கருவில் தொற்றுகள் ஏற்பட்டு, அதனால் குழந்தைகள் இறக்க வாய்ப்பே இல்லை. சில குறைகளைத் தவிர்த்துப்பார்த்தால், ஐ.வி.எஃப், ஐ.சி.எஸ்.ஐ இரண்டுமே 'குழந்தையின்மை' பிரச்னைக்கு சிறந்த தீர்வாக உள்ளன" என்றார் மருத்துவர் கனிமொழி.

அடுத்த கட்டுரைக்கு