இஸ்ரேல் 60%, இந்தியா வெறும் 5.8%... தடுப்பூசி விநியோக சிக்கலும், திடீர் தட்டுப்பாடும்!

தடுப்பூசி தட்டுப்பாட்டைக் களைவதற்கான முயற்சியில் இறங்காமல் மத்திய, மாநில அரசுகள் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன.
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான ஆயுதமாகப் பார்க்கப்படும் தடுப்பூசிகள் குறித்து அண்மையில் வரும் செய்திகள் கவலை கொள்ள வைப்பதாக இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில். தன் நாட்டு மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதில் எந்தெந்த நாடுகள் உலக அளவில் முன்னிலையில் இருக்கின்றன எனப் பார்த்தால் இந்தியாவின் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் Our World in Data என்ற தளம் இந்தத் தகவல்களை தினந்தோறும் இணையதளத்தில் அப்டேட் செய்துவருகிறது.

முதலிடத்தில் இஸ்ரேல்!
அந்தத் தரவுகளின் அடிப்படையில் உலகிலேயே அதிக அளவில் இஸ்ரேல் நாட்டில் சுமார் 60 சதவிகிதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணையை ஈடுசெய்வது போன்று இரண்டாவது தவணை ஊசியும் 55% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் மக்கள் தொகை சுமார் 92 லட்சம். பிப்ரவரி மாதம் முதல் தீவிர தடுப்பூசி போடும் பணி நடைபெற்றதால் பெரும்பாலானவர்களுக்கு போடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பும் அந்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனில் 48 சதவிகிதம் பேருக்கு முதல் தவணையும் 8.5% பேருக்கு முழுமையான தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. தீவிர பாதிப்புள்ள நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் முதல் தவணை 33%, இரண்டாம் தவணை 19% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான பேருக்கு மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலை!
மக்கள்தொகை அதிகமாக உள்ள நாடும், தடுப்பூசி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்தியாவில் இதுவரை 5.8% பேருக்கு மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் தவணையைப் பொறுத்தவரையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக வெறும் 0.8% பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும் காணப்படுகிறது. நாட்டின் தலைநகரான தில்லியில் பல்வேறு மையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதிக கோவிட்-19 நோயாளிகள் காணப்படும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சில மையங்கள் தடுப்பூசி ஸ்டாக் இல்லாததால் மூடப்பட்டுள்ளன.
தட்டுப்பாட்டைக் களைவதற்கான முயற்சியில் இறங்காமல் மத்திய, மாநில அரசுகள் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன.
தடுப்பூசி விவகாரம் தொடர்பாகப் பேசியிருக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மகாராஷ்டிரா அரசும், முன்களப் பணியாளர்களும் சரியாகப் பணியாற்றததால் பாதிப்பு அதிகரித்துள்ளது என்றும் 5 லட்சம் டோஸ் தடுப்பூசியை அம்மாநில அரசு வீணாக்கிவிட்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மறுபக்கம் மகாராஷ்டிரா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப், ``பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்களுக்கு அதிகம் தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் மகராஷ்டிரா மாநிலத்துக்கு அந்த மாநிலங்களைவிட குறைவான தடுப்பூசியே ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் மாநிலத்தைவிட பாதி மக்கள்தொகை கொண்ட குஜராத்துக்கு ஒரு கோடி டோஸ் தடுப்பூசி அனுப்பப்பட்ட வேளையில், மகாராஷ்டிராவுக்கு வெறும் 1.04 லட்சம் மட்டுமே அனுப்பப்பட்டது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தீவிர பாதிப்பு!
இந்தியாவில் கோவிட் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு, கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்டால் தீவிர பாதிப்பையும் உயிரிழப்புகளையும் தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு கவலையளிக்கும் விஷயமாக மாறுகிறது.

நோயைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி கூறிய Five Fold Stratergy-யை செயல்படுத்த வேண்டும் என்றால் தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகார வர்க்கங்களுக்கு இடையில் நடக்கும் வார்த்தைப் போர் கொரோனா வைரஸுக்கு எதிராகச் செயல்படாது.