Published:Updated:

`காற்று மாசுபாட்டால் ஓர் இந்தியரின் வாழ்நாள் எவ்வளவு குறைகிறது... தெரியுமா?!' - எச்சரிக்கும் ஆய்வு

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு

"பொறுப்பில் இருப்பவர்கள், கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்'' - மருத்துவர்கள்.

இரு தினங்களுக்கு முன், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காற்று மாசுபாடு ஏற்படுத்தும் பிரச்னைகள் குறித்து சில விஷயங்களை முன்வைத்தார். அப்போது, "காற்று மாசுபாடு, ஒருவரின் வாழ்நாளைக் குறைக்கும் என்ற தகவல் பொய்யானது. இந்தியாவில் செய்யப்பட்ட எந்த ஆய்வின் முடிவிலும் அப்படியான ஒரு கருத்து நிரூபிக்கப்படவில்லை. போலியான விஷயங்களை நம்பி மக்கள் பீதியடைய வேண்டாம்" எனக் குறிப்பிட்டிருந்தார் அவர்.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர பிரகாஷ் ஜவடேகர்
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர பிரகாஷ் ஜவடேகர்

அமைச்சரின் இந்தக் கருத்துக்கு எதிராக, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் பலரும் தங்களின் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்துவருகின்றனர். ''நம்மைச் சூழ்ந்துள்ளது பனியா, மாசுபட்ட காற்றா எனத் தெரியாமல், சாலைகளில் எதிரில் இருப்பவரைக்கூட அடையாளம் காணமுடியாமல் நிற்குமளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறோம். அப்படியிருக்கும்போது, `பீதியடையும் அளவுக்கு இது கவலைக்குரிய விஷயம் இல்லை' என்பதுபோல அமைச்சர் பேசியிருப்பது, கண்டிக்கத்தக்க விஷயம்" என்று பலரும் கூறியிருந்தனர்.

செயற்பாட்டாளர்களின் குரல்களைத் தொடர்ந்து, அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளும் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மரியா, "இந்தியாவின் மத்திய சுற்றுச்சுழல் அமைச்சரின் கருத்து உண்மையாக இருக்க வேண்டுமென்றே நாங்களும் விருப்பப்படுகிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது உண்மைக்குப் புறம்பானதாக இருக்கிறது'' என்று கூறி ஆதங்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்து, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மரியா, `காற்று மாசுபாடு உடல் நலத்துக்கு ஏற்படுத்தும் தீங்குகள் குறித்த எங்களின் ஆய்வுகள் அனைத்துமே ஆதாரபூர்வமானவை' என்பதை அழுத்தமாகக் கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில், மரியா கூறிய மற்ற விஷயங்கள் இதோ...

Dr Maria Neira, WHO
Dr Maria Neira, WHO

'காற்று மாசுபாடு ஏற்படுத்தும் தீமைகள் குறித்து, உலகம் முழுவதும் இதுவரையில் லட்சக்கணக்கான ஆய்வுகளை நாங்கள் செய்துவிட்டோம். அந்த ஆய்வு முடிவுக்கான ஆதாரங்கள் அனைத்துமே, எங்கள் தளங்களில் உலகின் பார்வைக்குக் கிடைக்குமாறு இருக்கின்றன. முடிவுகளில் சந்தேகம் ஏதும் இருப்பின், இந்திய அரசு தங்களிடம் உள்ள மிகச் சிறந்த நிபுணர் குழுவைக் கொண்டு அவற்றை க்ராஸ் செக் செய்யலாம். தவறிருந்தால், தாராளமாகச் சொல்லலாம்.

இந்தியாவின் பல பகுதிகளில், ஏற்கெனவே காற்று மிக மோசமாக மாசுபட்டுள்ளது என்பதால், எங்களின் ஆய்வு முடிவுகள் குறித்த விசாரணைகளை, இந்திய அரசு தாமதமின்றி உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இனியும் பொறுமைகாத்து மக்களை மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாக்க வேண்டாம். பிரச்னையின் தீவிரத்தை வேகமாக உணர்ந்து, காற்றைச் சுத்தப்படுத்தி, மக்களைப் பிரச்னையிலிருந்து காப்பதற்கான முயற்சிகளை அரசு தொடங்க வேண்டும்.'

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு
வீட்டுக்குள்ளிருக்கும் காற்று மாசு எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? #ExpertOpinion
எங்களின் ஆய்வு முடிவுகள் குறித்த விசாரணைகளை, இந்திய அரசு தாமதமின்றி உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மரியா.

இந்நிலையில்,

`காற்று மாசுபாடு, ஒருவரின் வாழ்நாளைக் குறைக்கும் என்ற தகவல் பொய்யானது'

என்ற அமைச்சரின் கருத்து குறித்து, ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரனிடம் பேசினோம்.

ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்
ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்

"இந்தியக் குடிமக்களான நாம் அனைவருமே, கடந்த சில மாதங்களாகவே காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சூழலியல் மாற்றங்களையும், அது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் கண்கூடாகப் பார்த்தும் அனுபவித்தும் வருகிறோம். டெல்லியில் மட்டுமல்ல, சென்னையிலும் இதுதான் நிலையாக இருந்தது. மாசு காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தால், தொடர்ச்சியாக இரண்டு மூன்று தினங்களுக்கு, எதிரிலிருப்பவரே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கான பாதிப்பு ஏற்பட்டதை நாம் மறந்திருக்க மாட்டோம்.

இந்த அளவுக்கு மாசுபட்ட காற்றை நேரடியாகச் சுவாசித்தால், மூச்சுக்குழாய் பாதிக்கப்படும். இது நிரூபிக்கப்பட்ட உண்மை. மூச்சுக்குழாய் பாதிப்புகள், அடுத்த கட்டமாக நுரையீரல் மற்றும் சுவாசப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, வாழ்நாள் சுவாசப் பிரச்னைகளான ப்ரான்கைடிஸ், ஆஸ்துமா, சி.ஓ.பி.டி, அலர்ஜி பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இந்தப் பிரச்னைகள் அனைத்துமே ஆயுட்காலத்தை குறைக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பிலிருக்கும் அமைச்சர், இப்படித் தவறான கருத்துகளைக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.
மருத்துவர்கள்
காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு

ஒருவருக்கு, ஏற்கெனவே வாழ்நாள் சுவாசப் பிரச்னைகள் இருக்கிறதென்றால், காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் காலத்தில், சம்பந்தப்பட்ட பிரச்னையின் தீவிரம் அவருக்கு இன்னும் அதிகரிக்கும். அவருக்கு ஆஸ்துமா அட்டாக் ஏற்படக்கூட வாய்ப்புள்ளது.

நிச்சயம் வாழ முடியாது!
காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவரால், ஆரோக்கியமான வாழ்க்கையை நிச்சயம் வாழ முடியாது.

நிலைமை இப்படியிருக்க, பொறுப்பிலிருக்கும் அமைச்சர் இப்படித் தவறான கருத்துகளைக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சொல்வதால், மக்களுக்கு தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும், விழிப்புணர்வும் கிடைக்காமல்போகும். பொறுப்பில் இருப்பவர்கள், கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்" என்றார் ஶ்ரீதரன்.

நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமனிடம், அமைச்சரின் கருத்து குறித்துப் பேசினோம். முக்கியமான சில புள்ளிவிவரங்களை முன்வைத்து பேசத் தொடங்கினார் அவர்.

நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமன்
நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமன்

"மத்திய அமைச்சர் கூறியது உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல். காற்று மாசுபாடு என்பது ஆயுளை மட்டுமல்ல, ஒருவரின் வாழ்நாள் தரத்தையும்கூட குறைத்துவிடும். அதாவது, காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவரால், ஆரோக்கியமான வாழ்க்கையை நிச்சயம் வாழ முடியாது. நோய்த்தொற்றுகள், சளி, இருமல், சுவாசத் தொந்தரவுகளுடனேயேதான் வாழ்நாள் முழுவதும் அவர் வாழ வேண்டும். சில சந்தர்ப்பங்களில், நுரையீரல் புற்றுநோய்க்குக்கூட காற்று மாசு காரணமாக அமைவது குறிப்பிடத்தக்கது.

`காற்று மாசுபாடு, மக்களின் ஆயுளைக் குறைக்கிறது' என்பதை நிரூபித்த சில முக்கியமான ஆய்வு முடிவுகள் இதோ...

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு
Vikatan

* ஸ்கைமெட் ரிப்போர்ட் - அதிகம் மாசுபட்ட உலகின் டாப் 10 நகரங்களில் ஏழு, இந்தியாவில் உள்ளவை. அவற்றுள் முக்கியமானவை டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா.

* லேன்செட் 2017 - இந்தியாவில், எட்டுப் பேரில் ஒருவர் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் பாதிப்புகள் காரணமாக இறக்கிறார்.

* சி.எஸ்.இ - ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், காற்று மாசுபாடு ஏற்படுத்தும் சுவாசப் பிரச்னைகள் காரணமாக, ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர்.

* லேன்செட் 2016 - வெளிப்புற காற்று மாசுபாட்டால் (Outdoor Air Pollution) இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைவிட அதிகம். இவர்கள் அனைவருக்குமே, உரிய காலத்துக்கு முன்னரே இறப்பு (Premature Death) ஏற்பட்டுள்ளது.

* சென்டர் ஃபார் சயின்ஸ் அண்டு என்விரான்மென்ட் - காற்று மாசுபாட்டால், சராசரியாக இந்தியர்களின் வாழ்நாள் 2.6 ஆண்டுகள் குறைகின்றன.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு

இதைவிட ஆழமாகவும் ஆதாரபூர்வமாகவும் பிரச்னையின் வீரியத்தை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. காற்று மாசுக்கான தீர்வுகளை முன்னெடுக்கவேண்டிய அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருப்பவர்கள், விரைந்து செயலாற்றவேண்டிய நேரமிது" என்கிறார் டாக்டர் ஜெயராமன்.

அடுத்த கட்டுரைக்கு