Published:Updated:

ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகம் எடுக்கும் இந்தியர்கள்... ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன?

ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகம் எடுக்கும் இந்தியர்கள்

சில மருத்துவர்களும் தேவைக்கு அதிகமாகவும், வைரஸ் தொற்றுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளையும் பரிந்துரைக்கின்றனர். வைரஸ் தொற்றுக்கு எதிராக ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யாது.

ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகம் எடுக்கும் இந்தியர்கள்... ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன?

சில மருத்துவர்களும் தேவைக்கு அதிகமாகவும், வைரஸ் தொற்றுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளையும் பரிந்துரைக்கின்றனர். வைரஸ் தொற்றுக்கு எதிராக ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யாது.

Published:Updated:
ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகம் எடுக்கும் இந்தியர்கள்

கோவிட்-19 பரவலின்போதும் அதற்கு முன்பும் இந்தியர்கள் அதிக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக் கின்றனர் என்று லேன்செட் மருத்துவ இதழில் ஆராய்ச்சி முடிவு ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அப்படி இந்தியர்கள் அதிகம் எடுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் பெரும்பாலானவை, மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாதவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்திரை
மாத்திரை

அதிக அளவில் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் இந்தியாவில் மருந்து எதிர்ப்புத்திறன் (Drug Resistance) அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும், இந்தியாவில் ஆன்டிபயாடிக் விற்பனையைப் பொறுத்தவரை 12 மூலக்கூறுகள்தான் அதிகம் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

ஒட்டுமொத்த ஆன்டிபயாடிக் பயன்பாட்டில் இந்த 12 மூலக்கூறுகள்தான் 75% எடுக்கப்படுகின்றன. இவற்றில் அசித்ரோமைசின் (500 மி.கி.) மாத்திரைகள்தான் அதிக அளவில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்றும் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மருந்து எதிர்ப்புத்திறன் என்றால் என்ன?

நோயாளிகள் `ஆன்டிபயாடிக்' மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாகச் சாப்பிடுவது, அந்த மருந்துகளை இரண்டு அல்லது மூன்று நாள்கள் சாப்பிடுவதும், திடீரென நிறுத்துவது போன்ற காரணங்களால் மருந்து எதிர்ப்புத் திறன் அதிகமாக ஏற்படும். மருந்தைப் பாதியில் நிறுத்துவதால் நோய்க் கிருமிகளின் வீரியம் அதிகரிக்கும்.

ஒரு மருத்துவரிடம் சென்று குணமாகவில்லை என்றால் வேறொரு மருத்துவரிடம் செல்வது, அவர் கொடுக்கும் மருந்துகளைச் சாப்பிடுவது என்று மாற்றிக்கொண்டே இருந்தாலும் மருந்து எதிர்ப்புத் திறன் உருவாகும். இதனால் எந்த மருந்து கொடுத்தாலும் நோய் குணமாகாத நிலை ஏற்படும்.

ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகம் எடுக்கும் இந்தியர்கள்
ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகம் எடுக்கும் இந்தியர்கள்

இந்த ஆராய்ச்சி முடிவு பற்றி சென்னையைச் சேர்ந்த இன்டர்னல் மெடிசின் துறை மருத்துவர் ஸ்பூர்த்தி அருணிடம் பேசினோம்:

பொதுவாக ஆன்டிபயாடிக் மருந்துகள் மருத்துவர் பரிந்துரையில்லாமல் மருந்துக் கடையிலேயே நேரடியாக வாங்கிக்கொள்ளும் OTC (Over the Counter) மருந்தாகக் கிடைக்கின்றன. இதனால் மருத்துவரிடம் செல்லாமல் மருந்துக்கடைகளுக்குச் சென்று அறிகுறிகளைச் சொல்லி ஆன்டிபயாடிக் மருந்துகளை வாங்கி உட்கொள்கின்றனர்.

அப்படி வாங்கிச் சாப்பிடும் மருந்தையும் முழுமையாக (complete Course) எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நோயின் தீவிரம் சற்றுக் குறைந்ததும் மருந்துகளை உடனடியாக நிறுத்திவிடுகிறார்கள். பாக்டீரியா தொற்றுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும். சில மருத்துவர்களும் தேவைக்கு அதிகமாகவும், வைரஸ் தொற்றுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர். வைரஸ் தொற்றுக்கு எதிராக ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யாது.

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்
மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

சில நோயாளிகள் தங்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும்போது ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பிட்டால்தான் கேட்கும் என்ற பழக்கத்துக்கு ஆளாகிவிடுகின்றனர். இதனால் மருத்துவரிடம் கட்டாயப்படுத்தி கேட்டு வாங்கிப் பயன்படுத்துகின்றனர். சளி, காய்ச்சல், சைனஸ் தொந்தரவு, வைரஸ் தொற்று எனப் பல்வேறு பிரச்னைகளுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்.

அடிக்கடி ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்வது, மருந்துகளை முழுமையாகச் சாப்பிடாமல் பாதியிலேயே நிறுத்துவது போன்ற பழக்கத்தால் அதிக மருந்துகளுக்கான எதிர்ப்புத்திறன் (Multi Drug Resistance) உருவாகும்.

உதாரணத்துக்கு ஒரு பாக்டீரியா சுமார் பத்து ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படும். ஆனால், அந்த மருந்துகளை அடிக்கடி எடுப்பது அல்லது முழுமையாக எடுத்துக் கொள்ளாததால் அந்த மருந்தைக் காட்டிலும் பாக்டீரியாவின் வீரியம் அதிகரித்து அந்த மருந்துகளால் பாக்டீரியாவைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

பாக்டீரியா
பாக்டீரியா
சித்திரிப்புப் படம்

இதுபோன்ற பிரச்னை ஏற்படும்போது நோயாளிக்கு கொடுக்க வேறு மருந்துகள் இல்லாமல் போகும். இல்லையென்றால் அதிக வீரியம் கொண்ட மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில்தான் இந்தப் பிரச்னை அதிகமாகக் காணப்படுகிறது. காரணம், இது மருத்துவரின் பரிந்துரையின்றியே வாங்கிக்கொள்ள முடியும். பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஆன்டிபயாடிக் மருந்துகள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் மட்டும்தான் கொடுக்கப்படுகின்றன.

கோவிட் காலத்தில் மட்டும்தான் அதிகரித்துள்ளதா?

பல ஆண்டுகளாக இந்தப் பிரச்னை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. மெள்ள மெள்ள பிரச்னை தொடங்கி தற்போது மிகவும் அதிகரித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். அதிக மருந்து எதிர்ப்புத்திறன் பிரச்னை அதிகரித்துள்ளதால் சில மருத்துவர்கள் தங்கள் மாத்திரைப் பரிந்துரையை மாற்றியிருக்கின்றனர்.

கோவிட்-19
கோவிட்-19

ஆனால், சுயமாக மருந்துக்கடைகளில் மாத்திரையை வாங்கிச் சாப்பிடுபவர்களுக்கு இந்த விழிப்புணர்வு இல்லாமல் அதிகமாக, தவறாக எடுத்துக்கொள்கின்றனர். இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை மருத்துவர்களும் பொறுப்புணர்வுடன் தேவையானவர்களுக்கு மட்டும் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும். பொதுமக்களும் மருத்துவரின் பரிந்துரையின்றி சுயமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது'' என்றார்.