Published:Updated:

இரட்டை உருமாறிய வைரஸ்... இந்தியாவில் கொரோனா அதிவேகமாகப் பரவ காரணம் என்ன?! #DoubleMutant #Explained

கொரோனா பரவல் ( Manish Swarup )

பரிணாம உயிரியல் விதியின் அடிப்படையில் ஒரு வைரஸ் எப்போதுமே உருமாறிக் கொண்டேயிருக்கும். Mutation என அழைக்கப்படும் இந்த உருமாற்ற நிகழ்வு சில சமயம் அந்த வைரசினுடைய வீரியத்தைக் குறைக்கும், சில சமயம் அதிகரிக்கும்.

இரட்டை உருமாறிய வைரஸ்... இந்தியாவில் கொரோனா அதிவேகமாகப் பரவ காரணம் என்ன?! #DoubleMutant #Explained

பரிணாம உயிரியல் விதியின் அடிப்படையில் ஒரு வைரஸ் எப்போதுமே உருமாறிக் கொண்டேயிருக்கும். Mutation என அழைக்கப்படும் இந்த உருமாற்ற நிகழ்வு சில சமயம் அந்த வைரசினுடைய வீரியத்தைக் குறைக்கும், சில சமயம் அதிகரிக்கும்.

Published:Updated:
கொரோனா பரவல் ( Manish Swarup )

கடந்த ஆண்டு நிகழாமல் போன எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன. 2020ல் நிகழ்த்தப்பட்ட பல சாதனைகள் இந்த ஆண்டு வேகமாக முறியடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த வேகத்தையும் தாண்டி, 2020ல் தான் செய்தவற்றை 2021ல் இன்னும் வேகமாக, மோசமாகச் செய்துகொண்டிருக்கிறது கொரோனா.

2020-ல் நடைபெற்ற கொரோனா Vs மனிதர்கள் போரில் கொரோனாவே வென்றது என சொல்லுமளவுக்கு உலகமே ஸ்தம்பித்தது. இந்த ஆண்டும் இப்போது கொரோனா கையே ஓங்கியிருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், பகுதிநேர லாக்டௌன் கொண்டுவரும் அளவிற்கு பாதிப்பு எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதிப்பு உச்சம் தொட்டதற்கு இரட்டை உருமாறிய கொரோனா வைரஸ் காரணமா என்பதே தற்போது மருத்துவ உலகின் முன்னிருக்கும் கேள்வி.

பரிணாம உயிரியல் விதியின் அடிப்படையில் ஒரு வைரஸ் எப்போதுமே உருமாறிக் கொண்டேயிருக்கும். Mutation என அழைக்கப்படும் இந்த உருமாற்ற நிகழ்வு சில சமயம் அந்த வைரசினுடைய வீரியத்தைக் குறைக்கும், சில சமயம் அதிகரிக்கும். அவ்வகையில், கோவிட் 19 கொரோனா வைரஸ் பல உருமாற்றங்களை இதுவரை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் உருவான B.1.1.7 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க வேண்டும் என விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அதைத் தொடர்ந்து பிரேசிலில் P.1 வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் B.1.351 என பல உருமாறிய கொரோனா வைரஸ் திரிபுகள் கண்டறியப்பட்டன.

கொரோனா B.1.617
கொரோனா B.1.617

இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் B.1.617 என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபு இருப்பதாக ஓர் ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். இந்த கொரோனா வைரஸ் E484Q மற்றும் L452R என்ற இரு உருமாற்றங்களுடன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. மத்திய அரசு, இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பதை 2021 மார்ச் மாதம் உறுதி செய்தது. ஆனால், இதுகுறித்து வெளிப்படையான தகவல்கள் எதையும் அரசு வெளியிடவில்லை. ''இந்தியாவின் 18 மாநிலங்களில் கவலையளிக்கக் கூடிய புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது'' என்று மட்டும் சொன்னது மத்திய சுகாதாரத் துறை.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை எடுக்கப்பட்ட மாதிரிகளில் சுமார் 61 சதவிகித மாதிரிகளில் இந்த இரட்டை உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், ''எங்களுக்கு இதுகுறித்து மத்திய அரசிடமிருந்து எந்த வழிகாட்டலும் கிடைக்கவில்லை. மருத்துவ ஆராய்ச்சி நிலையங்களும் வாய் வார்த்தையாக மட்டுமே இதுபற்றிச் சொல்கிறார்கள்'' என குற்றம் சாட்டுகிறார், மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப்.

இந்தியாவின் B.1.617 வைரஸ் சமீபத்திய தரவுகளின் படி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பத்து நாடுகளுக்குப் பரவியிருப்பது கண்டறியபட்டுள்ளது. 'தேசி (Desi) வைரஸ்’ என அடையாளப்படுத்தப்படும் இந்த வைரஸ், முதலில் பரவிய வைரசினை விட ஆபத்தானதா, வேகமாக பரவ கூடியதா, இதற்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுமா, ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்தவர்களை இந்த வைரஸ் மீண்டும் தாக்குமா எனப் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

மத்திய அரசு இதுகுறித்து கடந்த ஏப்ரல் 16-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ''இதுவரையில் இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் என உறுதி செய்ய படவில்லை'' என கூறியுள்ளது. ஆனால், இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் மிக அதிகம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு இந்த புதிய வைரஸ் திரிபு காரணம் என நிபுணர்களால் சந்தேகிக்கப்படுகிறது. இதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க போதுமான அளவு இந்தியாவில் பரிசோதனைகள் செய்யப்படவில்லை என்பதே அவர்களின் குற்றசாட்டு. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் வைரஸ் மாதிரிகளில் சுமார் 1% மட்டுமே genome sequencing எனும் கொரோனா வைரசின் மரபணுத் தொடரை அறியும் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதிக பரிசோதனைகள் செய்யப்பட்டால் மட்டுமே உறுதியாக புதிய வைரஸ் பற்றி அறிய முடியும்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கொரோனா வைரசின் L452R வைரஸ் உருமாற்றம் அமெரிக்காவில் அதிக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பழைய வைரஸை விட 20% அதிகமாக பரவும் எனவும். ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டவர்கள், தடுப்பூசி போட்டுகொண்டவர்களிடம் இருக்கும் 'நோய் எதிர்ப்பணு' செயல்திறன் 50% அளவிற்கு குறைந்து காணப்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மறுமுறை பாதிப்படையும் சாத்தியக்கூறுகளையும் அதிகப்படுத்துகிறது.

இந்நிலையில் இந்தியாவின் புதிய இரட்டை உருமாறிய கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சி உலகம் முழுக்கவே கவனம் பெற்றிருக்கிறது.

வில்லியம் ஏ. ஹசீல்டின் எனும் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் முன்னாள் பேராசிரியர் இந்தியாவின் B.1.617 வைரஸ் பற்றி ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “இந்த இந்திய வைரஸ் வகைப்பாடு, மிகவும் ஆபத்தானது என சொல்வதற்கு ஏற்ற எல்லா தன்மைகளையும் கொண்டிருக்கிறது. இந்த வைரசின் தன்மையை கண்டறிந்து, அதன் பரவலை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வது அவசியம்" எனக் கூறியிருக்கிறார்.

இந்த புதிய வகை கொரோனா வைரசிற்கு எதிராக தற்போதைய தடுப்பூசிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படும் என்பதும் தற்போது சந்தேகிக்கப்படுகிறது. அதிகப்படியான பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளை மிகத் துரிதமாக செய்வதன் மூலமே இதற்கு தீர்வு காண முடியும். கொரோனாவின் வேகத்தைவிட நாம் வேகமாகச் செயல்பட வேண்டும். கொரோனாவுக்கும் மனிதர்களுக்குமான போரில் இந்த ஆண்டு கொரோனாவை நாம் வெல்வதற்கு இந்த வேகமும் விவேகமும் முக்கியம்.