Published:Updated:

கொரோனா: ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்களால் காத்திருக்கும் சிக்கல்... எதிர்கொள்வது எப்படி?

Laborers queue up to register for COVID-19 test in New Delhi
Laborers queue up to register for COVID-19 test in New Delhi ( AP Photo / Manish Swarup )

ஒருமுறை கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டு குணமடைந்தவர்கள், `நமக்குத்தான் ஏற்கெனவே தொற்று வந்து குணமடைந்துவிட்டோமே. இனிமேல் எதுவும் ஏற்படாது' என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த தீவிர லாக்டௌன் நடைமுறைகள் முழுவதுமாகத் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால், வைரஸின் பரவல் முன்பைவிட தீவிரமாகவே உள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வியல் காரணங்களை முன்னிட்டு மட்டுமே லாக்டௌனுக்கு விலக்கு அளிக்கிறோம் என்று அரசின் சார்பில் விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், `இனி உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்' என்று மக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள் மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும்.

இந்நிலையில், தெலங்கானாவில் உள்ள டி.என்.ஏ பகுப்பாய்வு மற்றும் நோயறிதலுக்கான மையம் (CDFD-Centre for DNA Fingerprinting And Diagnostics) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில், கொரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாத ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்கள் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களுக்குத் தொற்று அதிகமாகப் பரவுவதாகக் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவத் தொடங்கிய ஆரம்பத்திலேயே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR), `இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் ஏசிம்ப்டமடிக். மற்ற 20% பேரில் 15% பேர் கொரோனாவுக்கான அனைத்து அறிகுறிகளுடன் உள்ளனர். மீதமுள்ள 5% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளனர்' எனக் கூறியிருந்தது.

ஏசிம்ப்டமடிக் கொரோனா தொற்றாளர்களுக்கும் ஆபத்து அதிகம்... புது ஆய்வு!

ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பவர்களுக்கு எந்தவித அறிகுறிகளும் வெளிப்படாது என்பதால் இந்த வகையினரைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதே பெரும் சவால். தற்போது லாக்டௌனும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்களால் முன்பைவிட அதிகமாகக் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இது குறித்து தொற்றுநோய் மருத்துவர் சித்ராவிடம் பேசினோம்.

தொற்றுநோய் மருத்துவர் சித்ரா
தொற்றுநோய் மருத்துவர் சித்ரா

``ஏசிம்ப்டமடிக் (Asymptomatic) என்பது ஒருவர் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு அந்த நோய்க்குரிய எந்த அறிகுறிகளும் தென்படாத நிலை. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் ஏசிம்ப்டமடிக்காக இருக்கும்போது அவருக்குக் காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற எந்த அறிகுறியும் இருக்காது. ஆனால், அதே நேரத்தில் அவரின் வழியே மற்றவர்களுக்குத் தொற்று பரவ நிறைய வாய்ப்பிருக்கிறது. தன் மூலமாக மற்றவர்களுக்கு நோய் பரவுவதே இந்த ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பவர்களுக்குத் தெரியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக இளைஞர்களும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களும் அறிகுறிகளை வெளிப்படுத்தாத ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பார்கள். ஒருவரின் உடலில் இருக்கும் வைரஸின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஏசிம்ப்டமடிக் நிலை ஏற்படும். இவர்களின் எச்சில், தொடுதல் மூலம் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பலவீனமானவர்களுக்கு எளிதில் நோய்த் தொற்று பரவலாம். இந்தியாவில் 80 சதவிகிதம் பேர் ஏசிம்ப்டமடிக் வகையினர் என்று ICMR ஏற்கெனவே அறிவித்திருக்கும் நிலையில் தற்போது முழுவதுமாகத் தளர்த்தப்பட்டுள்ள லாக்டௌன் நமக்குப் பெரிய சவால்தான்.

ஏசிம்ப்டமடிக்
ஏசிம்ப்டமடிக்

நாட்டில் அதிகரித்துள்ள பொருளாதார பிரச்னைகளைக் கட்டுக்குள் கொண்டு வரவே இந்த லாக்டௌன் தளர்த்தப்படுகிறது. ஆனால், லாக்டௌன் முழு அமலிலிருந்த கடந்த மார்ச் மாதத்தைக் காட்டிலும் தற்போது கொரோனாவின் பரவல் பன்மடங்கு அதிகமாகவே உள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு இனி ஒவ்வொரு தனி நபரும் அதீத முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும் குழந்தைகளும், 55-வயதுக்கு மேற்பட்டவர்களும் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. ஏற்கெனவே சுவாச பிரச்னை உள்ளவர்களும், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களும் வீட்டுக்குள்கூட தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.

ஊரடங்கில் தளர்வுகள்... அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்... எப்படிக் குறைப்பது? - மருத்துவர் விளக்கம்

`கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தீவிர அறிகுறிகள் வெளிப்படுவோர் மட்டும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும். லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தால் போதுமானது' என்று மருத்துவர்கள் மற்றும் அரசின் சார்பில் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், சமீபத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆரம்பத்தில் லேசான கொரோனா அறிகுறிகளுடனேயே காணப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகும், நாள்கள் ஆக ஆக அவரின் உடல்நலம் தீவிரமாகப் பாதிக்கப்பட்டது. நிலைமை இவ்வாறு இருக்க, லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாமா அல்லது மருத்துவமனைக்குச் செல்வது நல்லதா என்று மருத்துவரிடம் கேட்டோம்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

`கொரோனா பாசிட்டிவ் என்று வந்த பிறகு முதலில் ஒரு ஸ்க்ரீனிங் பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனை செய்யப்படும். இதன் வழியே கொரோனா பாதிக்கப்பட்டவரின் நுரையீரலை வைரஸ் எந்த அளவுக்கு பாதித்துள்ளது. அவரின் உடலில் வைரஸின் எண்ணிக்கை குறைவாக உள்ளதா அல்லது அதிகமாக உள்ளதா என்று தெரிந்துகொள்ளலாம். இந்த ரிசல்ட்டைப் பொறுத்தே பாதிக்கப்பட்டவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாமா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை நாங்கள் தீர்மானிப்போம். பாதிக்கப்பட்டவரின் உடலில் வைரஸின் அளவு குறைவாக இருந்து அவர் ஆரோக்கியத்துடனும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளவராகவும் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். அதுவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவராகவும், ஏற்கெனவே சுவாசப் பிரச்னைகள் உள்ளவராகவும் இருந்தால் அவசியம் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒருமுறை கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டு குணமடைந்தவர்கள், `நமக்குத்தான் ஏற்கெனவே தொற்று ஏற்பட்டு குணமடைந்துவிட்டோமே. இனிமேல் ஏற்படாது' என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. ஏற்கெனவே பாசிட்டிவ் ஆனவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட (Reinfection) நிறையவே வாய்ப்புள்ளது. அதனால் அவர்களும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்" என்றார் தொற்றுநோய் மருத்துவர் சித்ரா.

ஹாங்காங், தெலங்கானாவில் மறுதொற்று... மீண்டவரை மீண்டும் பாதிக்குமா கொரோனா?
அடுத்த கட்டுரைக்கு