Published:Updated:

இந்த தீபாவளியிலிருந்து இந்த டயட்டை மறக்காதீர்கள்!

தகவல் பத்தியம்
பிரீமியம் ஸ்டோரி
தகவல் பத்தியம்

உடல்நலம்

இந்த தீபாவளியிலிருந்து இந்த டயட்டை மறக்காதீர்கள்!

உடல்நலம்

Published:Updated:
தகவல் பத்தியம்
பிரீமியம் ஸ்டோரி
தகவல் பத்தியம்

``எப்போ டி.வி-யைப் பார்த்தாலும் ஒரே நெகட்டிவ் செய்திதான்; அதனால் நான் நியூஸ் சேனல்கள் பார்க்கிறதையே நிறுத்திட்டேன். பத்திரிகைகளை எடுத்தாலே முழுக்க முழுக்க நெகட்டிவிட்டிதான்; அதனால் இப்பல்லாம் அதைப் பார்க்கிறதே இல்லை!'' - கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் உச்சத்தில் இருந்த சமயம், இப்படி ஸ்டேட்மென்ட் விட்டவர்களின் பட்டியலில் நீங்களோ, உங்கள் நண்பரோ நிச்சயம் இருக்கக்கூடும். ஊடகங்கள் பற்றிய இந்தப் புலம்பல்களும் விமர்சனங்களும் இங்கு மட்டுமல்ல; உலகம் முழுக்கவே எழுந்தது உண்மைதான். அதுவும் உலகமே பெரும் போராட்டத்தை எதிர்கொண்டிருந்த சூழலில், எங்கெங்கும் மரணங்களையும் துயரங்களையும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னவாகும் மனித மனம்? அதன் விளைவுகள்தான் இந்தப் புலம்பல்களும் விமர்சனங்களும்.

இப்படி எந்நேரமும் எதிர்மறையான செய்திகளையே இணையத்தில் தேடித் தேடிப் பார்த்தும் படித்தும் கொண்டிருப்பதை `Doomscrolling’ என்கிறார்கள். உண்மையில் ஒருவர் எதிர்மறைச் செய்திகளை அதிகம் படிப்பதற்கு ஊடகங்கள் காரணமல்ல; நம் உளவியல்தான் காரணம். ஆம், நம்முடைய ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் ஆதிகால மனிதனின் சர்வைவல் எண்ணமே எதிர்மறைச் செய்திகளை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது. இதை `நெகட்டிவிட்டி பயாஸ்' (Negativity Bias) என்கின்றனர் நிபுணர்கள். விஷயம் இதுதான். நம்மைச் சுற்றி நடப்பவையெல்லாம் சுபமாக இருக்கும் வரையில் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஏதோ ஒரு விஷயத்தால் மட்டும் நமக்குப் பிரச்னை எனத் தெரியவந்தால் உடனே அது என்ன, அதனால் நமக்கு என்ன பாதிப்பு, அதைச் சரிசெய்வது எப்படி என ஒரு குறுகுறுப்பு தோன்றுமல்லவா? அதுதான் இதற்கும் காரணம். அதாவது, உலகில் எது நடந்தாலும் அதற்கேற்ப நம் இருப்பை, பாதுகாப்பை உறுதிசெய்துகொள்வது. இணைய யுகத்தில் இந்த Doomscrolling பலரையும் பாதிக்கவே, இதிலிருந்து விடுபட நிபுணர்கள் பல்வேறு விஷயங்களை முன்வைத்தார்கள். அவற்றில் ஒன்றுதான் Information Diet. தமிழில் சொல்வதென்றால் `தகவல் பத்தியம்.’

இந்த தீபாவளியிலிருந்து இந்த டயட்டை மறக்காதீர்கள்!

`இருக்கிற டயட்களில் இது வேறா' எனக் கேட்பவர்களுக்கு சின்ன தகவல். `தினமும் எத்தனை பேர் செய்தித்தாள்களைப் படிப்பீர்கள்' எனக் கேட்டால், உங்களில் எத்தனை பேர் கைதூக்குவீர்களோ தெரியாது. ஆனால், தினமும் சராசரியாக உங்களில் ஒவ்வொருவரும் 174 செய்தித் தாள்களில் அடங்கியிருக்கும் அளவுக்கான தகவல்களை நுகர்கிறீர்கள் என்றால் நம்புவீர்களா? `நீங்க நம்பலைன்னாலும் அதான் நிஜம்' என்கிறது 2007-ல் நடந்த அமெரிக்க ஆய்வு ஒன்று. 1986-ல் 40 செய்தித்தாள்களாக இருந்த இந்த அளவு, 2007-ல் 174-ஆக அதிகரித்திருக்கிறது. காரணம், இந்தக் காலகட்டத்தில் மின்னஞ்சல், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் என எக்கச்சக்க தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. இவை நமக்குப் பல தகவல்களை, பல்வேறு வடிவங்களில் அள்ளிக்கொட்டுகின்றன. தேவையானது, தேவையற்றது எனப் பலவற்றையும் பார்க்கிறோம், படிக்கிறோம்; அதுவே வழக்கமாக மாற, பிறகு அவற்றுக்கு அடிமையும் ஆகிறோம்.

இதில் பாதி பாவம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைச் சாரும் என்றால், மீதி நமக்குத்தான். சரி, அப்போது இருந்ததைவிட நம் மூளைக்குள் இப்படி எக்கச்சக்க விஷயங்களைத் தள்ளுகிறோமே, இதனால் நாம் ஸ்மார்ட்டாகிவிட்டோமா என்றால் அதற்கும், `வாய்ப்பில்லை ராசா!' என்கின்றன ஆய்வுகள். காரணம், நம் மூளைக்குள் அனுப்பப்படும் பல தகவல்கள் நமக்குத் தேவையற்ற குப்பைகள். அதனால்தான் ஒரு காலத்தில் காலையில் 30 நிமிடங்கள் செய்தித்தாளையும், மாலையில் அரை மணி நேரச் செய்தியையும் பார்த்தாலே, கிடைத்த `போதும்' என்ற உணர்வு, இன்று இணையத்தில் 24 நேரமும் உலவினாலும் கிடைப்பதில்லை. மாறாக மீண்டும் மீண்டும் இணையத்திலேயே உழல்கிறோம். இருந்தும் தவிக்கிறோம். இதிலிருந்து விடுதலையாகத் தான் Information Diet-ஐ கைகாட்டுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். இதற்கும் நெகட்டிவ் செய்திகளுக்கும் என்ன தொடர்பு?

உண்மையில் ஊடகங்களில் வரும் எதிர்மறைச் செய்திகள் உங்களை பாதிப்பதில்லை. அவை உங்களுக்குப் பல வகைகளில் கள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள உதவவே செய்கின்றன. மாறாக, உங்களை அடிமையாக்கிவைத்திருக்கும், தேவையற்ற தகவல் குப்பைகளை உங்கள் மூளைக்குள் தள்ளிக்கொண்டிருக்கும் சமூக வலைதளங்களின் அல்காரிதங்களே (Algorithms) உங்களைப் பல வகைகளில் பாதிக்கின்றன. இது குறித்துத் தெரிந்துகொள்ள இரண்டு விஷயங்களை மட்டும் நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று, Confirmation Bias (நாம் விரும்புவதை மட்டுமே சரியென நம்புவது); இன்னொன்று Filter Bubble (அல்காரிதங்களின் ஒரு மாயக்குமிழி). இன்றைக்கு இணையத்தால் மக்கள் சந்திக்கும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு இவை இரண்டும்தான் காரணங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த தீபாவளியிலிருந்து இந்த டயட்டை மறக்காதீர்கள்!

நீங்கள் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பவர் என வைத்துக்கொள்வோம். நிச்சயம் நீங்கள் அந்தக் கட்சியின் மீது நன்மதிப்பை வைத்திருப்பீர்கள். இப்போது உங்கள் நண்பர் ஒருவர் எதிர்க்கட்சிக்காரராக இருக்கிறார். அவர் உங்கள் கட்சியை ஒரு விஷயத்தில் குறைசொன்னால் உடனே என்ன நினைப்பீர்கள்? அவர் வேறு கட்சியைச் சார்ந்தவராக இருப்பதாலேயே அப்படிச் சொல்வதாக நினைப்பீர்கள். இது இயல்புதான்; பிரச்னையில்லை. ஆனால், அவர் தகுந்த தரவுகளோடு மிக விரிவாக உங்களிடம் வாதம் செய்கிறார். அதில் அவர் சொல்வது நூற்றுக்கு நூறு சரியாகவும் இருக்கிறது; அது உங்களுக்கும் தெரியும். ஆனாலும், நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? மாட்டீர்கள். இதுவும் மனித இயல்புதான்; ஆனால், இதில்தான் பிரச்னை.

இதில் சிக்கல் என்னவென்றால் மனிதர்கள் இயல்பில் தாங்கள் நம்பும் விஷயங்கள் மட்டுமே உண்மையாக இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். அது இல்லை என நிரூபிக்கப்பட்டாலும்கூட, மீண்டும் மீண்டும் தாங்கள் நம்பும் விஷயமே சரி எனச் சொல்ல அதற்கேற்றாற்போல இல்லாத ஆதாரங்களைத் தேடி ஓடுவார்கள்; ஆனால், உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அண்மைய உதாரணம், கொரோனா தடுப்பூசி. பாதுகாப்பானவை என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னும்கூட அவற்றை ஏற்றுக்கொள்ளாமல், `தடுப்பூசிகள் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும்; அதில் பில்கேட்ஸ் நம்மை கண்காணிக்க சிப் வைத்திருக்கிறார்; அதனால் மனிதர்கள் குரங்காக மாறிவிடுவார்கள்' என்பது போன்ற ஆதாரமற்ற தகவல்களையே சிலர் உண்மை எனத் தொடர்ந்து நம்பினார்கள். இந்த இயல்புதான் Confirmation Bias. மனிதனின் இந்த இயல்புதான் இணைய நிறுவனங்களுக்கு மிகுந்த சாதகமாக இருக்கிறது. எப்படி?

உதாரணமாக, தடுப்பூசியை வெறுக்கும் ஒரு நபர் எந்நேரமும் சமூக வலைதளங்களில் அதைப் பற்றியே தேடுவார், படிப்பார், பகிர்வார். இதைக் குறிப்பெடுத்துக்கொள்ளும் இணைய நிறுவனங்களின் அல்காரிதங்கள் மீண்டும் மீண்டும் அவருக்கு இதேபோல தகவல்களையே காட்டுமே தவிர, அவர் விரும்பாத தடுப்பூசி பற்றிய அறிவியல் ஆய்வுகளைக் காட்டாது. காரணம், அவர் அதை விரும்பவும் மாட்டார், அதைப் பகிரவும் மாட்டார். இப்படி ஒருவருக்குப் பிடிக்காத விஷயத்தைக் காட்டி எதுவுமே நடக்கவில்லையென்றால் சமூக வலைதளங்களின் கல்லா நிரம்புமா? எனவே அந்த நபர் எந்தக் குப்பையைக் கிளறினாலும், அதே போன்ற குப்பைகளையே அவை பரிந்துரைக்குமே தவிர, `ஐயோ, பாவம்' என உண்மைகளைக் காட்டாது. இது, அறிவியல், அரசியல் என எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.

இப்படி இணையத்தில் ஒரு பயனாளரைக் குறிப்பிட்ட ஒரு குமிழிக்குள்ளேயே சுற்றவிடுவதைத்தான் `Filter Bubble’ என்கிறார்கள். இதனால் அவர் புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் மாட்டார். தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் மாட்டார். இப்படி மீண்டும் மீண்டும் ஒரு நபருக்குப் பிடித்த செய்திகளை, பிடித்த தகவல்களை, பிடித்த வீடியோக்களையே காட்டுவதால் அவர் சமூக வலைதளங்களில் செலவழிக்கும் நேரமும் அதிகரித்திருக்கிறது; அவருடைய ரசனைகளை அக்குவேறு ஆணிவேறாகத் தெரிந்துகொண்டு விளம்பரங்களைக் காட்டுவதால் வருமானமும் அதிகரிக்கிறது. வேறென்ன வேண்டும் இணைய நிறுவனங்களுக்கு? இப்படி இணையத்திலேயே ஒரு நாளைக்குப் பல மணி நேரம் செலவழிப்பவர்கள், இணைய நிறுவனங்களின் அல்காரிதம்களுக்கு இரையாவதன் விளைவுதான் Doomscrolling போன்ற சம்பவங்கள் எல்லாம். வதந்திகள், போலித் தகவல்கள், இனவாத வெறுப்பு பேச்சுகள், தனியுரிமை மீறல்கள் போன்று இணையத்தால் ஜனநாயகம் சந்திக்கிற எல்லா பிரச்னைகளுக்குமான விதை இப்படித்தான் விதைக்கப்படுகிறது. ``ஃபேஸ்புக்கில் பரவும் பிறழ் தகவல்கள் மக்களைக் கொல்கின்றன!" என இதைத்தான் நேரடியாக அண்மையில் விமர்சித்திருந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

இந்த தீபாவளியிலிருந்து இந்த டயட்டை மறக்காதீர்கள்!

இத்தனை பிரச்னைகள் இருக்கின்றனவே... இதையெல்லாம் யாரும் தட்டிக்கேட்க மாட்டார்களா? கேட்கிறார்கள். அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் இருக்கும் டெக் நிறுவனங்களுக்கு உலக நாடுகள் பலவும் கடிவாளம் போடத் தொடங்கியிருக்கின்றன. ஆனாலும் அதன் விளைவுகள் உடனேயெல்லாம் எங்கும் எதிரொலிக்காது. அதனால்தான், `இந்த நிறுவனங்கள் எப்படியும் திருந்தப்போவதில்லை; அதனால் நாம் திருந்துவதுதான் தீர்வு’ எனப் பலரும் Information Diet போன்ற விஷயங்களைக் கையிலெடுக்கிறார்கள். ``எப்படி நீங்கள் உண்ணும் ஒவ்வோர் உணவும் உங்கள் உடலின் ஆரோக்கியத்தில் நேரடியாகத் தாக்கம் செலுத்துகிறதோ, அதைப்போல நீங்கள் நுகரும் ஒவ்வொரு தகவலும் உங்களின் வாழ்வின் முடிவுகளில் நிச்சயம் தாக்கம் செலுத்தும். ஒரு தகவல் உங்களைத் தேவையற்ற பொருளை வாங்க வைக்கலாம்; ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கலாம்; தேறாத அரசியல்வாதிக்கு வாக்களிக்கவைக்கலாம்; தேவையில்லாமல் மன அழுத்தத்தை உண்டாக்கலாம்; பணத்தை இழக்கவைக்கலாம்; ஜோ பைடன் சொன்னதுபோல உங்களுக்கே ஆபத்தை உண்டாக்கலாம். அதனால்தான் உங்களின் தகவல் நுகர்வுக்கும் (Information Consumption) கட்டுப்பாடுகள் போடுங்கள்'' என்கின்றனர் நிபுணர்கள்.

இதை எங்கிருந்து தொடங்கலாம்? உங்களின் தினசரிப் பழக்கங்களை முதலில் கவனியுங்கள். எவ்வளவு நேரத்தை எதிலெல்லாம் செலவிடுகிறீர்கள் என கவனியுங்கள். அவற்றில் எங்கெல்லாம் தேவையற்ற தகவல்கள் உங்களை ஆக்கிரமிக்கின்றன எனக் கண்டறியுங்கள். சமூக வலைதளங்கள், இணைய சேவைகளைப் பயன்படுத்தும்போது அவற்றின் அல்காரிதம்களை கவனியுங்கள். எப்படியெல்லாம் உங்களுக்கு ஃபேஸ்புக் செய்திகளைப் பரிந்துரைக்கிறது, யூடியூப் வீடியோக்களை எப்படிப் பரிந்துரைக்கிறது என்றெல்லாம் பாருங்கள். மிக விரைவில் அவற்றின் இயல்பைப் புரிந்துகொள்வீர்கள். இணையத்தில் எத்தனையோ நம்பகமற்ற இணையதளங்கள், சேனல்கள் இருக்கின்றன. அவற்றில் தேவையில்லாதவற்றில் கவனம் செலுத்தாமல் நம்பகமான ஊடகங்களைப் பின் தொடருங்கள்.

இணையத்தில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் செலவழித்தாலும் `போதும்' என்ற எண்ணமே வராது. எனவே நேரக்கட்டுப் பாட்டைப் பின்பற்றுங்கள். அல்காரிதம்களின் சித்து விளையாட்டுகள் இன்றி நேரடியாக செய்திகளைத் தெரிந்துகொள்ள நினைத்தால் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் போன்றவற்றைப் படியுங்கள். நம்பகமான ஊடகங்களின் பாட்காஸ்ட்கள், நியூஸ்லெட்டர்கள் போன்ற புதிய வாய்ப்புகளைத் தேர்ந்தெடுங்கள். எந்தவொரு சேவையைப் படித்தாலும், பார்த்தாலும் அது பயனுள்ளதா அல்லது நம்மை அடிமையாக்குவதா என யோசியுங்கள். பயனுள்ள, தேவையான, நம்பகமான தகவல்களுக்கு மட்டுமே செவிமடுங்கள். இந்த மாற்றங்கள் பழக்கங்களாகும்போது மாயக்குமிழிகள் உடைவது உறுதி என்கின்றனர் நிபுணர்கள். எனவே இந்த தீபாவளியிலிருந்து இந்த டயட்டும் உங்கள் பட்டியலில் இருக்கட்டும்!