Published:Updated:

புத்தம் புது காலை : தித்திக்க வைக்கும் தேனீக்கள் நமக்கு சொல்லித்தரும் பெரும்பாடம் என்ன?!

தேன்
தேன்

ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத்துல்லியமானது தேனீயின் தகவல் பரிமாற்ற முறை. அதேபோல யானை, ஆமைகளை விடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள் என்று சொல்லும் உயிரியல் வல்லுநர்கள், அவற்றின் பொறியியல் அறிவு இன்னும் அபாரமானது என்றும் கூறுகின்றனர்.

இத்தனை வருடங்களாகத் தித்திக்கும் தேனை தேடித்தேடி உண்கிறோமே! ஆனால் தேனீக்கள் எதற்காகத் தேனை சேமித்து வைக்கின்றன என்று எப்போதாவது யோசித்திருப்போமா?!

கிட்டத்தட்ட பல மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழும் இந்த, ஆறு கால்கள் கொண்ட சிறு ஈ-க்கள் குடும்பத்தைச் சேர்ந்த தேனீக்களை, கடந்த பத்தாயிரம் வருடங்களாகத்தான் மனிதன் கண்டறிந்து, அவை சேர்த்துவைக்கும் தேனை தான் உட்கொள்ளவும் துவங்கியுள்ளான்.

ஆம்... எறும்புகளுக்கு அடுத்தபடி எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் தேனீக்கள், உண்மையில் தங்களது தேவையைக் காட்டிலும் அதிகம் தேனை சேமித்து வைத்திருப்பதைக் கண்ட ஆதிமனிதன், இந்த தேனீக்களின் உழைப்பை தனது உணவு மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக, உபயோகப்படுத்தியுள்ளான்.

தேனீக்களின் இந்த அதிக உழைப்பை அறிந்திட, அவற்றின் வாழ்க்கை சுழற்சியை சற்று அறிவோம் வாருங்கள்!

ஒரு நல்ல ஆரோக்கியமான தேன்கூடு என்பது மூன்று மீட்டர் சுற்றளவு வரையில் கூட இருக்கும் என்றும், இந்த வகைக் கூட்டில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும் என்றாலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையையும் இவற்றில் உள்ள ஒரே ஒரு பெண் அரசிதான் கட்டுப்படுத்துகிறது என்பதுதான் ஆச்சரியம்.

தேனீ
தேனீ

ஆம்... ஒரு கூட்டில் மொத்தமே மூன்று வகைத் தேனீக்கள்தான் இருக்கும் என்பதுடன், அதில் ஒரே ஒரு ராணித்தேனீயும், ஆயிரம் அளவில் ஆண் தேனீக்களும், மற்ற அனைத்துமே வேலை செய்யும் வகையைச் சார்ந்த பெண் தேனீக்கள் என்பதும் நமக்குத் தெரியும். இதில் இந்த வேலைக்கார பெண் தேனீக்கள்தான், தேனைச் சேகரிக்கின்றன என்பதுடன் அவற்றின் வாழ்நாள் குறைவு (6 வாரங்கள்) என்பதால், அவற்றின் எண்ணிக்கை குறையாமலிருக்க, தினசரி 1500-க்கும் மேல் முட்டைகளை உற்பத்தி செய்து கொண்டே இருப்பது ராணித்தேனீயின் வேலை என்றால் அதற்கு உதவுவது மட்டுமே ஆண் தேனீக்களின் வேலை.

ராணித் தேனீ ஐந்து வருடங்கள் வரை வாழும் என்றால், ஆண் தேனீக்களோ தமது உயிரணுக்களை அளித்தவுடன் இறந்துவிடுகின்றன.

தேன்கூட்டைக் கட்டுவது, ராணித்தேனீக்கு உணவளித்து அதைப் பாதுகாப்பது, கூட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, மற்ற கூட்டுத் தேனீக்கள் தமது தேனைத் திருடாமல் பார்த்துக் கொள்வது, பகைவர்களிடமிருந்து பாதுகாப்பது போன்ற இன்னபிற பணிகளுடன் ஒரு வேலைக்காரத் தேனீ தனது வாழ்நாளில் 500 மைல்கள் வரை பறந்து ஒரு டீஸ்பூனில் 12-ல் ஒரு பங்கு தேனைத்தான் சேகரிக்க முடியுமாம்.

ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத்துல்லியமானது தேனீயின் தகவல் பரிமாற்ற முறை. அதேபோல யானை, ஆமைகளை விடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள் என்று சொல்லும் உயிரியல் வல்லுநர்கள், அவற்றின் பொறியியல் அறிவு இன்னும் அபாரமானது என்றும் கூறுகின்றனர்.

ஆம்... தேனீக்கள், தங்களது கூட்டை அறுங்கோண வடிவில் கட்டுவதால் ஒரு மில்லிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்குவதில்லை என்பதுடன் அந்த அறுங்கோண வடிவம் தான் தம் எடையைப் போல் ஆறுமடங்கு எடையை சுமக்கக் கூடிய சுலபமான வடிவம் என்பதைக் கண்டறிந்து வடிவமைக்கின்றன.

தேன்
தேன்

மலர்களில் இருந்து மதுவை உறிஞ்சி எடுக்கும் தேனீக்கள், அத்துடன் தமது வயிற்றிலிருந்து வரும் வேக்ஸ் போன்ற சுரப்பைச் சேர்த்து, சேமித்து வைக்கும் அந்த தங்கமான திரவம் தான் உண்மையான அமிர்தம் என்று சொல்லும் ஆயுர்வேதம். இது வெறும் இயற்கையான இனிப்புத் திரவம் மட்டுமல்ல, இதன் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் காரணமாக மேல்பூச்சு மருந்தாக தீக்காயம், தோல்காயங்கள் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

தேனை பொதுவாக 'வயிற்றின் நண்பன்' என்றுகூறும் இயற்கை மருத்துவர்கள், வயிற்று அழற்சி, வாந்தி, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவற்றில் மட்டுமன்றி தலைவலி, தொண்டை வலி, சளி, இருமல், தூக்கமின்மை, உடல்சோர்வு, தசைவலி ஆகியவற்றிலும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். மேலும் தேனை சூடேற்றினால் அதன் குணம் மாறிவிடும் என்பதால் எக்காரணம் கொண்டும் சூடேற்றவோ, சமைக்கவோ கூடாது என்று எச்சரிக்கும் மருத்துவர்கள், எடை அதிகரிக்க குளிர்ந்த நீரில் கலந்து சாப்பிடுவது போல, எடைகுறைக்க சுடுநீரில் தேனைக் கலக்காமல் வெதுவெதுப்பான நீரில் கலந்து தான் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

தித்திக்கும் தேனின் பயன்கள் இவ்வளவு என்றால், அவை சேகரித்து வரும் மகரந்தம் (bee pollen) அவற்றின் கூடு அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்று கூறப்படுகிறது.

தங்களது தேவையைக் காட்டிலும் அதிகத் தேனை சேமித்து வைத்திருப்பதைக் கண்ட ஆதிமனிதன், இந்த தேனீக்களின் உழைப்பை தனது தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தினான் என்றால், இன்றைய மனிதன் இவற்றின் ஒவ்வொரு உழைப்பையும் வியாபாரப்படுத்தி, இந்த தேனீக்களின் அழிவையும் உண்டாக்கி வருகிறான் என்பதே உண்மை.

 தேனீ !
தேனீ !

சரி...

தேனீக்கள் ஏன் தேனைச் சேமித்து வைக்கின்றன என்று பார்த்தோமேயானால், எறும்பைப் போல எப்போதும் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டேயிருக்கும் இந்தத் தேனீக்களும் எறும்பைப் போலவே பூக்கள் பூக்காத காலத்திற்கும், குளிர்காலத்திற்கும் தங்களுக்குத் தேவையான உணவை முன்கூட்டியே சேமித்துக் கொள்ளும் நடைமுறைதான் என்று கூறப்படுகிறது..

தேன் மட்டுமல்லாமல் ஆண்டொன்றுக்கு 450 கிலோ மலரின் க்ளுக்கோஸ், தனது ப்ரோபிலிஸ் எனும் பிசின், நீர் மற்றும் மகரந்தம் என அனைத்தையும் முன்கூட்டியே சேமித்துக் கொள்கினறன இந்த தேனீக்கள்.

யோசித்துப் பாருங்கள்...

1/2லி தேனை சேகரிக்க 1200 தேனீக்கள், சுமார் 1,12,000 மைல் பறந்து 45 லட்சம் மலர்களிடம் சென்று வரவேண்டும். ஆனால், நாம் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி, "தித்திக்குதே" என்று அதை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

#WorldBeeDay

அடுத்த கட்டுரைக்கு