Published:Updated:

மிகவும் கடுமையான NDPS சட்டம்; உண்மையில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப் படுத்துகிறதா? - 17

ஒருவரது வீட்டிலோ, அவரது பையிலோ போதைப்பொருள் கண்டறியப்பட்டாலே போதும். அந்த இடத்தில் போதைப்பொருள் எப்படி வந்தது என்பதுகூட அந்த நபருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒருநபர் வசம் போதைப்பொருள் இருந்தால் அது அந்த நபருக்குரியதுதான் என்று சட்டமே அனுமானித்துக்கொள்ளும்.

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலொழிய எந்தக் குற்றமும் கட்டுப்படாது என்பது நிதர்சனம். மற்ற குற்றச்செயல்களுக்கு இது பொருந்துமோ, பொருந்தாதோ... போதைப்பொருள் விவகாரத்தில் நூறு சதவிகிதம் பொருந்தும். போதைப்பொருள் பயன்படுத்துவது, விற்பது போன்ற குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க சட்டத்தில் இடமிருக்கிறது.

Drugs (Representational Image)
Drugs (Representational Image)
Photo by MART PRODUCTION from Pexels

அந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டதன் பின்னணி குறித்துப் பேசுகிறார் ஐ.ஆர்.எஸ் அதிகாரியும் போதைப்பொருள் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருபவருமான வெங்கடேஷ் பாபு.

``ஓப்பியம் பாப்பி (opium poppy) என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் இயற்கையான பொருள் மார்பின் (Morphine). இதன் விதைகள்தான் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கசகசா. இந்தச் செடியின் பசை போன்ற ஒரு பொருளிலிருந்து பெறப்படுவதுதான் மார்பின் என்கிற போதைப்பொருள்.

Narcotic Drugs
Narcotic Drugs
Photo by Colin Davis on Unsplash

முற்றிய நிலையிலுள்ள புற்றுநோயாளிகளுக்கு வலி நிவாரணியாகக் கொடுக்க இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்பினிலிருந்து கிடைக்கக்கூடியதுதான் ஹெராயின் (Heroin) என்ற போதைப்பொருள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரிட்டிஷ் காலத்தில் ஓப்பியம் செடியை இந்தியாவில் பயிரிட்டு வந்தனர். அதன் மூலம் அவர்களுக்குப் பெரிய வருமானம் கிடைத்தது. ஓப்பியம் செடி இந்தியாவில் நன்றாக வளர்கிறது என்பதும் இந்தியாவில் பிரிட்டிஷார் செட்டில் ஆனதன் முக்கிய காரணங்களில் ஒன்று. முதலில் வர்த்தகத்துக்காக வந்தாலும் ஓப்பியம் செடியின் மூலம் அதிக வருமானம் கிடைத்ததால் அதைப் பயிரிடுவதில் ஆர்வம் காட்டினார்கள்.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo: Unsplash
போதை வலைக்கு இலக்காகும் பெரிய இடத்துப் பிள்ளைகள்; பின்னணி இதுதான் - நான் அடிமை இல்லை - 13

முதன்முதலில் ஓப்பியம் செடி சீனாவில்தான் பயிரிடப்பட்டது. அங்கிருந்துதான் இந்தியாவுக்கு வந்தது. அந்தக் காலகட்டத்தில் இதன் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டிஷார் அமல்படுத்திய சட்டம்தான் ஓப்பியம் ஆக்ட் (Opium Act). அதைப் பின்பற்றி சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு Dangerous Drugs Act என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டது.

பிரிட்டிஷ்-இந்திய சட்டங்கள் எனச் சில சட்டங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் Dangerous Drugs Act. இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் அமலில் இருந்தது Dangerous Drugs Act-தான். அதற்குப் பிறகு மீண்டும் சட்டங்களைச் செம்மைப்படுத்தி அமல்படுத்தப்பட்டதுதான் Narcotics drugs and Psychotropic Substances act 1985 (NDPS Act) என்பது. இந்தச் சட்டங்களுக்கு அடிப்படை என்பது போதைப்பொருள் தொடர்பாக ஐ.நா 1961, 1971, 1988 ஆகிய ஆண்டுகளில் நடத்திய மாநாடுகள்.

ஐ.நா
ஐ.நா
பிள்ளைகளை அச்சுறுத்தும் போதை வலை: பெற்றோராக உங்கள் கடமை என்ன? - நான் அடிமை இல்லை - 15

இந்த மூன்று மாநாடுகளில் கிடைத்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான் ஒவ்வொரு நாடும் அதன் போதைப்பொருள் சட்டங்களை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று மாநாடுகளுக்குப் பிறகு, பெரிய அளவில் ஐ.நா சார்பில் மாநாடுகள் நடைபெறவில்லை. இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலிலுள்ள போதை மருந்துகள் அனைத்தும் சட்டத்துக்கு விரோதமானவை.

நாடுகள் ஒரே மாதிரியான சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால், ஒருநாட்டில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றொரு நாட்டில் எளிதாகப் புழங்கும். மேலும் போதைப்பொருள் மாபியாவைக் கட்டுப்படுத்தவும் ஒரே மாதிரியான சட்டங்கள் உதவும்.

ஐ.நா உறுப்பினர் நாடுகள் இணைந்து இதற்கு சம்மதம் தெரிவித்து ஒப்புதலளித்த பிறகு, அனைத்து நாடுகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உலகத்தில் அனைத்து நாடுகளிலும் உள்ள சட்டங்களில் மிகவும் கடுமையான சட்டம் இந்த NDPS Act-தான். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை.

பொதுவாக, ஒரு நபர் குற்றம் செய்யும் நோக்கத்துடன் அதைச் செய்திருந்தால்தான் அது குற்றமாகக் கருதப்படும். ஒரு நபர் கொலை செய்யும் நோக்கத்தோடு அல்லாமல் தற்காப்புக்காக கொலை செய்தார் என்று நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும்.

IRS officer Venkatesh Babu
IRS officer Venkatesh Babu

மேலும், கொலை செய்தவருக்கு அந்த எண்ணம் இருந்தது என்று வழக்கு தொடுப்பவர் (Prosecution) தரப்பிலிருந்து நிரூபிக்க வேண்டும். ஆனால், NDPS சட்டத்தில் விசாரணை அதிகாரியோ, வழக்கு தொடுப்பவரோ சென்று நிரூபிக்க வேண்டிய கட்டாயமே இல்லை.

ஒருவரது வீட்டிலோ, அவரது பையிலோ போதைப்பொருள் கண்டறியப்பட்டாலே போதும். அந்த இடத்தில் போதைப்பொருள் எப்படி வந்தது என்பதுகூட அந்த நபருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒருநபர் வசம் போதைப்பொருள் இருந்தால் அது அந்த நபருக்குரியதுதான் என்று சட்டமே அனுமானித்துக்கொள்ளும்.

இதுபோன்ற கடுமையான சட்டங்கள் இல்லை என்றால் போதைப்பொருள் பயன்பாடு, புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது சிரமம். மேலும், சில இடங்களில் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற காரணத்தால் இந்தச் சட்டத்தில் தளர்வு கொண்டு வர வேண்டும் என்பது ஏற்புடைய வாதம் அல்ல. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால்தான் மக்களைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் நிதர்சனம்" என்கிறார்.

பிட்காயின் மூலமும் போதைப்பொருள் விற்பனை; அதிகாரி சொல்லும் அதிர்ச்சி தகவல்! - நான் அடிமை இல்லை - 16

போதைப்பொருள் விவகாரத்தில் மரண தண்டனைகூட வழங்க முடியுமா? எந்த அளவுக்குத் தீவிரமானது NDPS சட்டம்? அந்தத் தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு