Published:Updated:

சிறுவன் செய்த அடுத்தடுத்த கொலைகள்; போதையால் நிகழ்ந்த துயரம்! - நான் அடிமை இல்லை - 19

Drug Addiction (Representational Image)
News
Drug Addiction (Representational Image) ( Photo by Mishal Ibrahim on Unsplash )

ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி, அதிலிருந்து விடுபட்டு ஓராண்டு கழிந்த நிலையில், என்றாவது ஒருநாள் அதை எடுத்தால்கூட மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுவார்கள். போதைப்பொருளுக்கு அடிமையாவது தனிநபரின் வாழ்வை சீரழிப்பதோடு, குடும்பம், வீடு, நாடு என அனைத்தையும் சிதைத்துவிடும்.

தெரிந்தோ, தெரியாமலோ குழந்தைகள், பதின்பருவ பிள்ளைகள்கூட போதை வலைக்குள் வீழ்ந்துவிடுகிறார்கள். அவர்களை போதை வர்த்தகத்தில் பயன்படுத்தும் பெருங்கூட்டமும் உலகெங்கும் உண்டு. சிறுவர்கள் போதைப் பொருள் புழக்கத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு தண்டனை எப்படியிருக்கும் என்று விளக்குகிறார், ஐ.ஆர்.எஸ் அதிகாரியும் போதைப்பொருள் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருபவருமான வெங்கடேஷ் பாபு:

``சிறுவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு முன்னால் மறுவாழ்வு சிகிச்சைக்கு அனுப்பலாம். குற்றம் சாட்டப்பட்டவரிடம் நீதிபதி, `திருந்தி வாழ நினைக்கிறாயா அல்லது ஜெயிலுக்குப் போகிறாயா' என்று கேட்பார். பெரும்பாலான சிறுவர்கள் `திருந்தி வாழ விரும்புகிறேன்' என்பார்கள். குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் உண்மையிலேயே திருந்தி வாழ விரும்புகிறான் என நீதிபதிக்கு நம்பிக்கை ஏற்பட்டால் அவர் அந்தச் சலுகையை அளிப்பார்.

வெங்கடேஷ் பாபு
வெங்கடேஷ் பாபு

அந்தச் சிறுவர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்படும். இந்தச் சலுகையும் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு குறைந்தபட்ச அளவு போதைப்பொருள் வைத்திருந்த சிறுவர்களுக்குத்தான். வர்த்தக பயன்பாட்டுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவை வைத்திருந்தால் சிறுவர்கள் என்றாலும் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும்.
ஒரு சிறுவன் தெரிந்தோ தெரியாமலோ, உடலியல் உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணத்துக்காக போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டால், அந்த நபர் திருந்தி வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கலாம் என்ற அம்சம் சட்டத்தில் உள்ளது. அதுவே அந்தச் சிறுவன் சிலருக்கு விநியோகம் செய்து போதைப்பொருளை வியாபார நோக்கில் பயன்படுத்தும்போது அந்த வாய்ப்பை வழங்க வேண்டிய அவசியமில்லை. வர்த்தகத்தில் ஈடுபடுவோர் பெரும்பாலும் போதைப்பொருள்களைப் பயன்படுத்தவே மாட்டார்கள். காரணம், தான் அடிமையாகிவிட்டால் அந்தத் தொழிலை திறம்படச் செய்ய முடியாமல்போகும் என்பதால் அவர்கள் பயன்படுத்தமாட்டார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மறுவாழ்வு சிகிச்சைக்கு அனுப்பும் சலுகை சிறுவர்களுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் வழங்கப்படும். சிறுவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு தண்டனையே வழங்கப்பட்டாலும் அதை நிறைவேற்றுவதற்கு முன்பாக அவர்களை மறுவாழ்வு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயம்.

ஒருமுறை டெல்லியிலுள்ள போதை மறுவாழ்வு மையத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவனுக்கு மறுவாழ்வு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தச் சிறுவனைப் பற்றி விசாரித்தேன். அந்தச் சிறுவன் தனது 13-வது வயதில் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருக்கிறான். ஒருநாளைக்கு அவனுக்குத் தேவையான போதைப்பொருளை வாங்குவதற்கு 5,000 ரூபாய் தேவைப்படுமாம். இதனால் வீட்டில் தொந்தரவு செய்வது, பிரச்னை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறான். இதனால் ஒருகட்டத்தில் வீட்டிலிருந்து அவனை வெளியேற்றிவிட்டார்கள்.

Narcotic Drugs
Narcotic Drugs
Photo by Daniel Norin on Unsplash

கையில் பணமில்லை என்ற நிலை ஏற்பட்டபோது, போதைப்பொருளை வாங்கியே ஆக வேண்டும் என்ற வெறியில் அந்த 14 வயதிலேயே ஒரு கொலை செய்துவிட்டான். கொலை செய்ததும் திஹார் ஜெயிலில் காவலில் வைக்கப்பட்டான். கொலைக்குற்றம், போதைப்பொருள் பயன்பாடு என சிறுவனின் மீது இரண்டு குற்றங்கள். ஒவ்வொரு சிறையிலும் சிறுவர்கள் நீதி வாரியம் (Juvenile Justice Board) என்ற அமைப்பு இருக்கும். அங்கிருக்கும் அதிகாரிகள் இந்தச் சிறுவனை மறுவாழ்வு சிகிச்சைக்குப் பரிந்துரைத்திருக்கின்றனர்.

மறுவாழ்வு மையத்தில் இரண்டு மாதம் சிகிச்சை பெற்று திருந்தி அந்தச் சிறுவன் வெளியே செல்கிறான். வெளியே சென்ற அவனுக்கு மறுபடியும் ஏதோ காரணங்களினால் போதைப்பொருள் பயன்படுத்தும் உணர்வு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போதைப்பொருளை வாங்க நினைத்தவன் கையில் பணமில்லை. ஒருநாள் பயன்பாட்டுக்கு போதைப்பொருள் வாங்குவதற்குத் தேவைப்படும் 5,000 ரூபாய்க்காக மீண்டும் ஒரு கொலை செய்கிறான் அந்தச் சிறுவன். கொலை செய்யும் நோக்கம் அந்தச் சிறுவனுக்குக் கிடையாது. ஆனால் போதைப்பொருள் ஏற்படுத்திய அடிமைத்தனத்தின் விளைவாகவே இதைச் செய்கிறான்.

மீண்டும் திஹார் ஜெயில், சிறுவர் நீதி வாரியம்... மீண்டும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை. இந்த முறையும் இரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு வெளியே செல்கிறான் அந்தச் சிறுவன். வெளியேற சென்றதும் மீண்டும் போதைப்பொருள் பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வு, கையில் பணமில்லை, மூன்றாவது கொலையைச் செய்கிறான். மறுபடியும் ஜெயில், சிறுவர் நீதி வாரியத்துக்குச் சென்று மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவனைச் சந்தித்தேன்.

Drugs (Representational Image)
Drugs (Representational Image)
Photo by MART PRODUCTION from Pexels

ஒரு குற்றம் செய்துவிட்டு ஒரு மனிதன் திருந்தவில்லை என்ற கோணத்தில் இதை அணுக முடியாது. போதைப்பொருளின் தாக்கத்தினால் ஏற்படும் விளைவு அது. ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி, அதிலிருந்து விடுபட்டு ஓராண்டு கழிந்த நிலையில், என்றாவது ஒருநாள் அதை எடுத்தால்கூட மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுவார்கள். போதைப்பொருளுக்கு அடிமையாவது தனிநபரின் வாழ்வை சீரழிப்பதோடு, குடும்பம், வீடு, நாடு என அனைத்தையும் சிதைத்துவிடும். எனவே, நண்பர்களுடன் இருக்கும்போது ஒரு ஃபன்னுக்காகவோ, அது எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவோகூட போதைப்பொருளை முயன்று பார்க்கக்கூடாது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்ட போதை மருந்துகளை விற்பனை செய்வது, வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது... இரண்டுக்கும் என்ன தண்டனை? அடுத்த அத்தியாயத்தில்..!