Election bannerElection banner
Published:Updated:

கர்ப்பிணிகளை அதிகம் பாதிக்கிறதா கொரோனா? மருத்துவர்களின் அனுபவங்கள்!

Pregnancy
Pregnancy

கொரோனா கர்ப்பிணி பெண்களை உடலளவில் அதிகம் பாதிக்கிறதா என்பது குறித்து மருத்துவர்களிடம் பேசினோம்.

டெல்லியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஒருவர், `கொரோனா இரண்டாம் அலை வந்த பிறகு கர்ப்பிணிகள் நிறைய பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார்கள். குறைப்பிரசவங்கள் அதிகரித்திருக்கின்றன; எதிர்பாராத கருச்சிதைவுகள் நடக்கின்றன; கருக்குழாயில் கருத்தரிப்பது அதிகரித்திருக்கிறது' என்று வருத்தப்பட்டிருந்தார். இங்கு என்ன நிலைமை என்று தெரிந்துகொள்வதற்காக எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையின் மகப்பேறு துறையின் இயக்குநரும் டாக்டருமான விஜயா, தனியார் மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் மகப்பேறு மருத்துவர் நிவேதா மற்றும் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் விஜயா ஆகிய மூவரிடமும் பேசினோம்.

டாக்டர் விஜயா, எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை
டாக்டர் விஜயா, எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை

``கொரோனா வந்த பிறகு 800 பெண்களுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறோம். இரண்டாவது அலை வந்த பிறகு 30 பெண்கள் பிரசவத்துக்குத் தயாராக இருக்கிறார்கள். இதுவரைக்கும் ஒருவருக்கும் மேலே சொன்ன பிரச்னைகள் இல்லை. இன்னும் 200 பிரசவ கேஸ்களை பார்த்த பிறகுதான், இங்கு என்ன நிலைமை என்பதை என்னால் சொல்ல முடியும்’’ என்கிறார் எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையின் மகப்பேறு துறையின் இயக்குநரும் டாக்டருமான விஜயா.

``கொரோனா முதல் அலையின்போது, மூன்றாவது ட்ரைமெஸ்டரில் கொரோனா வந்த பெண்கள்கூட, குணமாகி அதன் பிறகு சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றிருக்கிறார்கள். குறைப்பிரசவம் அதிகரிக்கவில்லை. கருக்குழாயில் கருத்தரிப்பது சற்று அதிகரித்திருக்கிறது என்றாலும், அதற்கு நேரடி காரணமாக கொரோனாவை சுட்டிக்காட்ட முடியாது. ஏனென்றால், மாதவிடாய் தள்ளிப்போனவர்கள் வீட்டிலேயே சிறுநீர் பரிசோதனை மட்டும் செய்துவிட்டு, கொரோனா பயம் காரணமாக மருத்துவமனைக்கு வருவதற்குத் தயங்குகிறார்கள். அதனால், கருக்குழாயில் கருத்தரிப்பதைத் தாமதமாகத்தான் எங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. விளைவு, ஓர் ஊசியால் சரி செய்ய முடிந்த அந்தப் பிரச்னை அறுவைசிகிச்சை வரை சென்றுவிடுகிறது. மற்றபடி, கொரோனாவுக்கும் கருக்குழாயில் கருத்தரிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மகப்பேறு மருத்துவர் நிவேதா
மகப்பேறு மருத்துவர் நிவேதா

குறைப்பிரசவத்தைப்பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், காய்ச்சல் அதிகமாக இருந்தால்கூட குறைப்பிரசவம் நிகழலாம். சில நேரங்களில் மூன்றாவது ட்ரைமெஸ்டரில் அம்மாவுக்கு உடல் நலக்குறைபாடு ஏதாவது வந்தால், அம்மாவுக்கு சிகிச்சையளித்துக் காப்பாற்றுவதற்காகக் குழந்தையை உடனே டெலிவரி செய்ய வேண்டிய நிலைமை வரலாம். இதுவும் வழக்கம்போலத்தான் இருக்கிறது. கொரோனா காரணமாக இப்படி நிகழ்ந்த கேஸை கடந்த ஒரு வருடத்தில் நான் பார்க்கவில்லை’’ என்றார் மகப்பேறு மருத்துவர் நிவேதா.

``கொரோனா முதல் அலையின்போதே நிறைய கருச்சிதைவு கேஸ்களை பார்த்தேன். இயற்கையாகக் கருத்தரித்தவர்களுக்குக்கூட மூன்றாம் மாதத்தில் கருச்சிதைவு நடந்தது. இதற்கு கொரோனா வைரஸ்தான் நேரடி காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. கொரோனா பயம் காரணமாக வந்த ஸ்ட்ரெஸ்கூட இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். தற்போது கருக்குழாயில் கருத்தரித்த பெண்களும் வருகிறார்கள். ஆனால், இரண்டாம் அலை இப்போதுதான் தொடங்கியிருப்பதால், கொரோனாதான் இதற்கான காரணமா என்பதை ஆய்வுகள் நடத்தி, புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான் சொல்ல முடியும்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவரும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவருமான விஜயா.

மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் விஜயா
மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் விஜயா

கர்ப்பிணிகளுக்குக் கஷ்டம் கொடுக்காதே கொரோனா என்பதுதான் நம்முடைய வேண்டுதல்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு