வழுக்கை, முடி உதிர்தல் பிரச்னைக்கு `ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்' மட்டும்தான் தீர்வா? #DoubtOfCommonman

முடி உதிர்தலுக்கு முடி மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் முழுமுதற் தீர்வு என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், வேறு பல சிகிச்சைகளும் இருக்கின்றன.
முடி உதிர்தலுக்கு சரியான தீர்வு என்ன... முடி உதிர்தல் பிரச்னைக்கு ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் சிகிச்சை மேற்கொள்வது உகந்ததா... ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் சிகிச்சையின் பின் விளைவுகள் என்ன என்று விகடனின் #DoubtOfCommonman பக்கத்தில் வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். வாசகரின் கேள்வியை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதே இந்தக் கட்டுரை.
முடி உதிர்தல் என்பது ஆண் பெண் என இரு பாலரும் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னை. ஆனால், முடி உதிர்தலின் அளவு அதிகரிக்கும்போதுதான் பெரும்பாலானவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குகின்றனர்.
முடி உதிர்தலுக்கான காரணம் என்ன, அதற்கு சரியான தீர்வுகள் என்னென்ன என்பது குறித்து அறிந்துகொள்ள ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீமிடம் பேசினோம்.
``தற்போது மக்களின் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறியிருக்கிறது அதன் காரணமாக அவர்களின் உணவு உள்ளிட்ட அனைத்துப் பழக்கவழக்கங்களும் மாறியிருக்கின்றன, அதன் காரணமாகவும் முடி உதிர்தல் ஏற்படுகிறது.
முடி உதிர்தலுக்கு மரபு வழி பாதிப்பு, வயது முதிர்ச்சி, ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் எனப் பல காரணங்கள் இருக்கலாம். முடி உதிர்தலுக்குத் தீர்வு காண விரும்புவோர் முதலில் அதற்கான சரியான காரணத்தைக் கண்டறிய வேண்டும், அப்போதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.

இந்தக் காலத்தில் பெண்களைவிட ஆண்களுக்கு முடி உதிர்தல் பாதிப்பு அதிகமிருக்கிறது. மன அழுத்தம், மரபியல் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தூக்கமின்மை போன்றவையே காரணங்கள்.
பரம்பரையாகச் சிலருக்கு வழுக்கைப் பிரச்னை ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த பாதிப்பு அவர்களது பருவ வயதில் ஆரம்பித்து அதிகபட்சம் 40 வயதுக்குள் முழுத் தலையும் வழுக்கையாகிவிடுகிறது. இந்த பாதிப்பு தவிர்க்க முடியாததுதான். ஆனால் அதற்கும் மருத்துவ சிகிச்சைகள் இருக்கின்றன. நல்ல மருத்துவர்களை அணுகி முறையான சிகிச்சையைப் பெற்றால் தீர்வு காணலாம்.

முடி உதிர்தலுக்கு முடி மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் முழுமுதற் தீர்வு என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், வேறு பல சிகிச்சைகளும் இருக்கின்றன.
ஒருவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்போது முடி உதிர்தல் பிரச்னை ஏற்படுகிறது. மூச்சுப்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றைச் செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம், மன அழுத்தம் குறைந்துவிட்டாலே முடி உதிர்வும் குறைந்து படிப்படியாக நின்றுவிடும்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் முடி உதிரும். கீரை வகைகள் மற்றும் ஒமேகா 3 அடங்கியுள்ள மீன் வகைகள் முதலியவற்றை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து மீண்டு முடி உதிர்தலைத் தவிர்க்கலாம்.
முடி மாற்று அறுவை சிகிச்சை:
தலை மற்றும் பின்னங்கழுத்துப் பகுதிகளில் இருந்து முடிகளை எடுத்து மண்டைப் பகுதியில் முடி இல்லாத இடங்களில் பொருத்துவதே முடி மாற்று சிகிச்சை.
இந்தச் சிகிச்சையில் இரண்டு வகைகள் உள்ளன ;
1.Follicular Unit Extraction (FUE ) - தலையின் பின் பகுதியிலிருந்து முடிகளை எடுத்து, தலையில் முடி இல்லாத பகுதிகளில் பொருத்துவது. மயக்க மருந்து கொடுத்து செய்யப்படும் மைனர் வகை சிகிச்சை இது.
2.Follicular Unit Transplantation (FUT) - இது அறுவை சிகிச்சை அறையில் மேற்கொள்ளப்படும். இதில் கொத்தாக முடிகளை ஒரே நேரத்தில் எடுத்துப் பொருத்துவர். சற்றே பெரிய அறுவை சிகிச்சை இது.
இந்த முடி மாற்று சிகிச்சைகள் செலவு அதிகமானவை. தவிர மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டியவை. இந்தச் சிகிச்சைகளில் அனுபவம் வாய்ந்த, தரமான மருத்துவமனைகள் மற்றும் ட்ரைகாலஜிஸ்ட்டிடம் சிகிச்சைளை மேற்கொள்வது முக்கியம்.
மருத்துவமனைக்குச் செல்பவர்களுக்கு ரத்தப் பரிசோதனை மற்றும் உடல்தகுதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே முடிமாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். முடி மாற்று அறுவை சிகிச்சை என்பது முடி உதிர்வுக்கான கடைசி தீர்வாகும். இந்தச் சிகிச்சையின் பலன் வாழ்நாள் முழுவதும் நீடித்து நிற்கும் தன்மை கொண்டது.
அறுவை சிகிச்சை செய்யாத இடங்களில் முடி உதிர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆகையால், அந்த இடங்களுக்கு பராமரிப்பு அவசியம். அவ்வப்போது அறுவை சிகிச்சை அல்லாத முறைகளில், லேசர் போன்ற கூடுதல் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இதற்கும் தீர்வு காணலாம்.
முடி மாற்று அறுவை சிகிச்சையின் பின் விளைவுகள் :
1. இந்தச் சிகிச்சைக்குப் பெரும்பாலும் தலையின் பின் பகுதி மற்றும் பின் கழுத்துப் பகுதிகளில் இருந்து, முடிகளை எடுத்து முடி இல்லாத இடங்களில் பொருத்தப்படுவதால் முடிகளை எடுக்கும் இடங்களில் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

2. முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் பலருக்கு எரிச்சலும், முடி எடுக்கப்பட்ட இடங்களில் வீக்கமும் ஏற்படலாம்.
மேற்குறிப்பிடப்பட்ட பின் விளைவுகளுக்கும் மருத்துவ சிகிச்சைகள் உண்டு. எனவே முடிமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.