Published:Updated:

மொட்டை போட்டால் இளநரை போகுமா ?

ஆ.சாந்தி கணேஷ்

ஸ்ட்ரெய்ட்டனிங், கர்லிங் செய்ததால் தலைமுடி பாழானவர்கள் இந்த முறையில், அவர்களுடைய பழைய ஆரோக்கியமான கூந்தலை மீட்டெடுக்கலாம்.

hair damage
hair damage

மொட்டை போட்டால், தலைமுடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும் என்பார்கள். தலைமுடியின் வேறு என்னென்ன பிரச்னைகளுக்கு மொட்டை அடிப்பது தீர்வாகும்? இளநரை வந்தவர்களுக்கும் மொட்டை போட்டால், புதிதாக வளர்கிற முடி கருப்பாக இருக்குமா... பதில் சொல்கிறார் இயற்கை அழகு நிபுணர் கீதா அசோக்.

பரம்பரைத்தன்மை, ஆரோக்கியக் குறைபாடு, தொடர்ந்து ஏதாவது மெடிசன்ஸ் எடுப்பது என இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

''தலைமுடி வீக்காக மெலிந்து இருப்பது, முடியின் நுனிகளெல்லாம் பிளவுப்பட்டு இருப்பது, முடி முறிந்து விழுவது, ஸ்காப்பில் பூச்சிவெட்டு விழுந்து முடி கொத்துக்கொத்தாக உதிர்வது போன்ற பிரச்னைகளுக்கு மொட்டை போட்டுக்கொண்டு, பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்.

இதேபோல, குளோரின் தண்ணீரில் தொடர்ந்து தலைக்குக் குளித்து வருபவர்களுக்கும் தலைமுடி உலர்ந்து, உடைந்துபோயிருக்கும். இப்படி டேமேஜ் ஆன தலைமுடிக்கு என்ன சிகிச்சை கொடுத்தாலும், முடியின் ஆரோக்கியத்தையும் அழகையும் மீட்டெடுக்கவே முடியாது. இவர்களும் மொட்டையடித்துக்கொண்டால், அடுத்து வளர்கிற முடி ஆரோக்கியமாக வளரும்.

ஸ்ட்ரெய்ட்டனிங், கர்லிங் செய்ததால் தலைமுடி பாழானவர்கள்கூட இந்த முறையில், அவர்களுடைய பழைய ஆரோக்கியமான கூந்தலை மீட்டெடுக்கலாம்.

head shaving
head shaving

நரைமுடி என்பது முடியின் வேர் சம்பந்தப்பட்டது. பரம்பரைத்தன்மை, ஆரோக்கியக்குறைபாடு, தொடர்ந்து ஏதாவது மருந்துகள் எடுப்பது என இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

கவனித்துப் பார்த்தீர்களென்றால், தலைமுடியானது அதன் வேரில் இருந்துதான் நரைக்க ஆரம்பிக்கும். ஸ்கால்ப்புக்கு மேலிருக்கிற முடி அவ்வளவு எளிதில் நரைக்காது. மொட்டைப்போடும்போது, ஸ்கால்ப்புக்கு மேலிருக்கிற தலைமுடிதான் நீக்கப்படுகிறது. வேர் அப்படியேதான் இருக்கும். அந்த வேரிலேயே முடி நரைத்துவிட்டால், எத்தனை முறை மொட்டை போட்டாலும் வெள்ளை முடி மட்டுமே முளைக்கும். 20 வயதில் இளநரை வர ஆரம்பித்தவர்களுக்குக்கூட, மொட்டை போட்டாலும் அடுத்து வளர்கிற முடி வெள்ளையாகத்தான் இருக்கும்.