Published:Updated:

வல்லாரை, அதிமதுரம், சீந்தில்கொடி... நினைவாற்றலை அதிகப்படுத்துமா மூலிகைகள்..? விளக்கம்! #Video

வல்லாரைக் கீரை
வல்லாரைக் கீரை

கற்கும் திறன், பகுத்தறிவு, ஞாபகத்திறன் அதிகரிக்க ஆயுர்வேதத்தில் சரகர் நான்கு மூலிகைகள் பற்றிச் சொல்கிறார்.

நீண்ட நேரம் படித்தும் பாடங்கள் மனதில் பதியவில்லை என்பது பெரும்பாலான மாணவர்களின் புலம்பலாக இருக்கும். ஞாபக சக்திக்கும், படித்தவை நீண்டகாலம் நினைவில் நிற்பதற்கும் உதவும் மூலிகைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் செந்தி அரசி விவரிக்கிறார்.

``குழந்தைகள் படிக்கும்போது நன்றாகப் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள். அதன்பிறகு படித்தவை மறந்துபோகின்றன. அதற்கு என்ன மருந்து கொடுத்தால் சரியாகும் எனச் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர் கேட்கிறார்கள். கற்கும் திறன், பகுத்தறிவு, ஞாபகத்திறன் அதிகரிக்க ஆயுர்வேதத்தில் சரகர் நான்கு மூலிகைகள் பற்றிச் சொல்கிறார். வல்லாரை, அதிமதுரம், சீந்தில்கொடி, சங்குபுஷ்பம் ஆகியவையே அவை.

மாதிரி படம்
மாதிரி படம்

வல்லாரை, கீரை வகையைச் சேர்ந்தது. அதை அப்படியே எடுத்து, அரைத்து சாறு எடுக்க வேண்டும். 10 மில்லி வல்லாரைச் சாற்றில் கொஞ்சம் தேன் கலந்து காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் குடித்தால் நினைவாற்றால் அதிகரிக்கும். இது மூளையில் ஆக்ஸிஜனேற்றம் நடப்பதைத் தடுத்து, செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கிறது. கற்கும் திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளையின் நரம்பு மண்டலத்தில் கிளைகள் போன்று இருக்கும் பகுதிதான் மற்ற செல்களில் இருந்து வரும் சிக்னல்களை உள்வாங்கிக்கொள்ளும். இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு வல்லாரை பயன்படுகிறது. இதனால் பாடத்தைக் கவனமுடனும் மனதை ஒருமுகப்படுத்தி படிக்கவும் முடிகிறது. மேலும் மனப் பதற்றத்தைக் குறைக்கிறது.

அதிமதுரம் மூலிகைச் செடியின் வேரைப் பொடித்து மூன்று கிராம் அளவுக்கு பாலில் கலந்து காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் குடித்துவந்தாலும் கற்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும். அதிமதுரம் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மூளையின் செல்கள் பாதிக்கப்படாமல் தடுக்கிறது. சீந்தில் கொடி மூலிகையின் தண்டு, இலைகளை இடித்து 10 மில்லி சாறு எடுத்து தேனில் கலந்து காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இந்த மூலிகையின் வேதிப்பொருள் மன அழுத்தத்தைக் குறைத்து, படிக்கும்போது கவனத்தைச் சிதறாமல் காக்கிறது.

பசு நெய்
பசு நெய்

சங்கு புஷ்பம் செடியை சாறு எடுத்து பாலில் கலந்து காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதுவும் நினைவாற்றலை அதிகரிக்கும். இந்த நான்கு மூலிகைகளையும் கலந்தும் நாம் பயன்படுத்தலாம். இவை எல்லாமே எளிதில் எல்லா இடங்களிலும் கிடைப்பவை. நான்கு மூலிகைகளும் சேர்த்து தயாரித்த நெய் மருந்துகளை ஆயுர்வேத மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். பசு நெய்யும் மூளைக்கு நல்லது.

அதுமட்டுமல்லாது எப்படிப் படித்தால் நீண்டகாலம் நினைவில் இருக்கும் என்பது குறித்தும் சரகர் ஆயுர்வேதத்தில் கூறியுள்ளார். நிமித்த கிரஹணம்... அதாவது ஒரு நிகழ்வு எதனால் உருவானது என்பதற்கான காரணத்தை உணர்ந்து படிக்க வேண்டும். ரூப கிரஹணம் என்பது நாம் படிக்கும் பொருளின் வடிவத்தை கருத்தில்கொண்டு படித்தல். ஒன்றை ஒன்றை தொடர்புபடுத்தி படித்தல். அதுபோல எதிர்கருத்துகளை வரிசைப்படுத்தி படித்தல். சிந்தனையைச் சிதறவிடாமல் படித்தல், திரும்பத்திரும்பப் படித்தல், படித்த விஷயங்களை அடிக்கடி நினைவுபடுத்தும் விதமாக சுருக்கமான குறிப்புகளை வைத்துக்கொள்ளலாம்.

பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 3 மணிமுதல் 6 மணி வரையிலான நேரத்தில் படிக்கலாம். சூரிய உதயத்துக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு எழுந்து படிப்பது நல்லது. இந்த நேரத்தில் அதிக பிராணவாயு கிடைப்பதால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். மனம் புத்துணர்வாக இருப்பதால் படிக்கும் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு